Published : 20 Jul 2018 08:30 AM
Last Updated : 20 Jul 2018 08:30 AM
மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கு அழைக்காததால் ஏற்கெனவே அறிவித்தபடி லாரிகள் வேலை நிறுத்தம் இன்று (20-ம் தேதி) முதல் தொடங்கும் என அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் நிர்வாகக் குழு உறுப்பினர் சென்னகேசவன் தெரிவித்துள்ளார்.
பெட்ரோல், டீசல் மீது உயர்த் தப்பட்ட கலால் வரியை மத்திய அரசு ரத்து செய்து, அவற்றை ஜிஎஸ்டி-க்குள் கொண்டு வர வேண்டும். பெட்ரோல், டீசல் விலையை 90 நாட்களுக்கு ஒருமுறை நிர்ணயம் செய்ய வேண்டும். லாரிகளுக்கான 3-ம் நபர் விபத்து காப்பீடு பிரிமிய உயர்வை ரத்து செய்ய வேண்டும். நாடு முழுவதும் உள்ள சுங்கச் சாவடிகளுக்கான ஓராண்டு கட்டணத்தை லாரி உரிமையாளர்கள் சங்கம் செலுத்துவதை ஏற்றுக்கொண்டு, சுங்கச் சாவடிகளை அகற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் இன்று முதல் நாடு தழுவிய காலவரையற்ற லாரிகள் வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளது.
இதுகுறித்து அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் நிர்வாகக் குழு உறுப்பின ரும், சேலம் மாவட்ட லாரி உரிமை யாளர்கள் சங்கத் தலைவருமான சென்னகேசவன் கூறியதாவது:
மத்திய அரசிடம் லாரி உரிமை யாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி இருந்தனர். சில மாதங்களுக்கு முன்னரே இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டது. இதுவரை மத்திய அரசிடம் இருந்த பேச்சுவார்த்தைக்கு அழைப்பு வரவில்லை. எனவே, ஏற்கெனவே, அறிவித்தபடி லாரிகள் வேலை நிறுத்தம் இன்று தொடங்கும்.
தமிழகத்தில் 4.50 லட்சம் லாரிகள் ஓடாது. இதனால், நேரடியாக 25 லட்சம் பேரும், மறைமுகமாக ஒரு கோடி பேரும் பாதிக்கப்படுவர். லாரி உரிமையாளர்களுக்கு ரூ.10 கோடி வரை வாடகை இழப்பு ஏற்படும். லாரிகள் வேலைநிறுத்தத்தால், சரக்குப் போக்குவரத்து பாதிக்கப்படும் என்பதால், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும். எனவே, மக்கள் நலன்கருதி வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதனிடையே, லாரிகளுக்கு சரக்கு முன்பதிவு செய்யும் ஏஜென்ட்கள் சங்க மாநிலத் தலைவர் ராஜ வடிவேலு கூறும்போது, “லாரிகள் வேலைநிறுத்தத்தால் வட மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு வர வேண்டிய துவரம் பருப்பு, பாசிப்பருப்பு உள்ளிட்ட பருப்பு வகைகள், பெரிய வெங்காயம், பூண்டு, காட்டன் பேல்கள், எலக்ட்ரிக், எலக்ட்ரானிக் பொருட்கள் உள்ளிட்டவை வருவது நின்றுள்ளது. லாரிகள் வேலைநிறுத்தம் தொடர்ந்தால் இந்த பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு விலைவாசி உயரும். இதேபோல், தமிழகத்தில் இருந்து வட மாநிலங்களுக்கு அனுப்பப்படும் சேகோ, ஜவ்வரிசி, மஞ்சள், இரும்பு கம்பிகள், ரசாயனங்கள் உள்ளிட்டவை தேங்கி உற்பத்தியாளர்களுக்கும், விவசாயிகளுக்கும் இழப்பு ஏற்படும். சரக்கு முன்பதிவு நிறுத்தப்பட்டுள்ளதால், தமிழகத்தில் தற்போது ரூ.4,000 கோடி மதிப்புள்ள சரக்குகள் தேக்கமடைந்துள்ளது. வேலை நிறுத்தம் தொடர்ந்தால் நாளொன்றுக்கு ரூ.10 ஆயிரம் கோடி மதிப்புள்ள சரக்குகள் தேங்கும்” என்றார்.நாமக்கல்லில் மாநில லாரி உரிமையாளர் சம்மேளன அலுவலகம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டுள்ள லாரிகளில் வேலைநிறுத்தம் குறித்து போஸ்டர்களை ஒட்டிய தாலுக்கா லாரி உரிமையாளர் சங்கத்தினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT