Published : 21 Feb 2025 12:44 AM
Last Updated : 21 Feb 2025 12:44 AM
தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று பட்ஜெட் கூட்டத் தொடரில் முதல்வர் அறிவிக்க வேண்டும். இல்லாவிட்டால், மாநிலம் முழுவதும் பல்வேறு கட்டங்களாக தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்தார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் சமூகநீதி கூட்டமைப்பு சார்பில் தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தமிழக அரசை வலியுறுத்தி சென்னையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:
தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் தருவதற்காக இந்தப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளோம். இது அடையாள ஆர்ப்பாட்டம்தான். சமூகத்தில் அடக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட, வஞ்சிக்கப்பட்ட மக்களைப் பற்றிய தகவல்கள் இருந்தால்தான் அதற்கேற்ப திட்டங்களை தீட்ட முடியும். அதுதான் சமூகநீதி.
மத்திய அரசு, மாநில அரசு, உள்ளாட்சி அமைப்புகள் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த சட்டத்தில் இடமுண்டு. அதன்படி, பிஹார், ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, ஒடிசா, சட்டீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. அங்குள்ள மாநில உயர் நீதிமன்றமோ, உச்ச நீதிமன்றமோ சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தடை விதிக்கவில்லை.
ஆனால், தமிழகத்துக்கு மட்டும் அதிகாரம் இல்லை என்று சட்டப்பேரவையிலேயே முதல்வர் ஸ்டாலின் பொய் சொல்லியுள்ளார். ஆடு, மாடு, நாய் மற்றும் வலசை வரும் பறவைகளைக்கூட கணக்கெடுக்கிறார்கள். ஓட்டுக்குப் பணம் கொடுக்க கணக்கெடுக்கப்படுகிறது. பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், மகளிர் உரிமைத் தொகை வழங்க கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதேநேரம், சமூகத்தில் பின்தங்கியுள்ள மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் துல்லியமாக இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முதல்வருக்கு மனம் இல்லை.
தமிழகத்தில் உள்ள 69 சதவீத இடஒதுக்கீட்டை காப்பாற்ற வேண்டும் என்றால் சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம். எனவே, பட்ஜெட் கூட்டத் தொடரில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று முதல்வர் அறிவிக்க வேண்டும். இல்லாவிட்டால், தமிழகம் முழுவதும் பல்வேறு கட்டங்களாக தொடர் போராட்டங்கள் நடத்தப்படும். இவ்வாறு அன்புமணி தெரிவித்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி, பாமக கவுரவத் தலைவர் ஜி.கே.மணி, இந்திய ஜனநாயக கட்சி தலைவர் ரவி பச்சமுத்து, தமாகா துணைத் தலைவர் விடியல் சேகர், அமமுக துணைப் பொதுச்செயலாளர் செந்தமிழன், தென்னிந்திய பார்வர்டு பிளாக் தலைவர் கே.சி.திருமாறன், புரட்சித் தமிழகம் - பறையர் பேரவைத் தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி உள்ளிட்ட பலர் பேசினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...