Published : 21 Feb 2025 12:28 AM
Last Updated : 21 Feb 2025 12:28 AM

தமிழக காங்கிரஸின் 25 மாவட்ட தலைவர்கள் ராகுல் காந்தியுடன் நாளை சந்திப்பு: செல்வப்பெருந்தகையை மாற்ற வலியுறுத்தல்

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை அப்பதவியில் இருந்து மாற்ற வலியுறுத்தி மாவட்டத் தலைவர்கள் 25 பேர், ஒரு எம்எல்ஏ நேற்று 2-வது நாளாக டெல்லியில் முகாமிட்டுள்ளனர். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை இன்றும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை நாளையும் சந்திக்க இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

தமிழக காங்கிரஸ் தலைவராக செல்வபெருந்தகை நியமிக்கப்பட்டு இன்னும் ஓராண்டு நிறைவடையவில்லை. இந்நிலையில் அவருக்கு எதிராக 25 மாவட்டத் தலைவர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். நேற்று முன்தினம் டெல்லி சென்ற இவர்கள், தமிழக மேலிட பார்வையாளர் கிரிஷ் சோடங்கரை சந்தித்து 5 பக்க புகார் கடிதம் கொடுத்தனர். அடுத்து கட்சித் தலைமையையும் சந்திக்க திட்டமிட்டு நேற்று 2-வது நாளாக டெல்லியில் முகாமிட்டுள்ளனர்.

இதுகுறித்து வடசென்னை கிழக்கு மாவட்டத் தலைவரும் மாநகராட்சி மாமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவருமான திரவியம் கூறியதாவது: தமிழக காங்கிரஸ் தலைவரின் செயல்பாடுகள் குறித்த 5 பக்க புகார் கடிதத்தை தமிழக மேலிடப் பார்வையாளர் கிரிஷ் சோடங்கரிடம் கொடுத்து நேற்று பேசினோம். அவரும் எங்களுடன் 45 நிமிடம் பேசினார். அப்போது, காங்கிரஸ் கட்சி ஒரு தேசியக் கட்சி. மாநில தலைமை எதைச் செய்தாலும் தேசிய தலைமை ஒப்புதல் பெற்றே செய்ய வேண்டும். அதுதான் கட்சியின் துணை விதி. ஆனால், செல்வப்பெருந்தகை அதுபோல செயல்படுவதில்லை. காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள், முன்னாள் தலைவர்கள் என யாரையும் கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக செயல்படுகிறார்.

தமிழக காங்கிரஸில் இதுவரை இல்லாத நடைமுறையை அவர் பின்பற்றுகிறார். அகில இந்திய காங்கிரஸ் ஒப்புதல் பெறாமலேயே கட்சிக் கட்டமைப்பை மாற்றத் துடிக்கிறார். அதற்கு கட்சியின் துணை விதிகளில் இடமில்லை. மாவட்டத் தலைவர்களை மாற்ற மாநிலத் தலைவருக்கு அதிகாரம் கிடையாது. ஆனால், மாவட்டத் தலைவர்களை மாற்றும் நோக்கில் அப்பதவிக்கு விண்ணப்பிக்க கட்டணமும் வசூலிக்க முயற்சித்துள்ளார். இது காங்கிரஸ் கட்சியில் இல்லாத நடைமுறை. நாங்கள் துணிச்சலாக வந்து பார்த்துள்ளோம். ஆனால் 50 மாவட்டத் தலைவர்கள் அச்சம் காரணமாக வரவில்லை. அவர்களும் கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள்.

காமராஜர் ஆட்சிதான் நமது நோக்கம். ஆனால், திராவிட மாடல் அரசும் காமராஜர் ஆட்சியும் ஒன்று என பேசி வருகிறார். மேலும் காங்கிரஸ் ஆட்சியில் ஒரு பைசா கமிஷன் கிடையாது. திமுக ஆட்சியில் என்ன நடக்கிறது என்று எல்லோருக்கும் தெரியும். ஈரோடு கிழக்கு தொகுதியை விட்டுக் கொடுத்ததால் கட்சியினர் அனைவரும் அதிருப்தியில் உள்ளனர். அவரது சுயலாபத்துக்காக கட்சியை அடமானம் வைத்து வருகிறார். கட்சியினருக்கான அடையாள அட்டையில் அவரது உருவப் படத்தை பெரியதாக அச்சிட்டுள்ளார். அதனை அனைவரும் கழுத்தில் அணிய வேண்டும் என கட்டாயப்படுத்துகிறார். அடையாள அட்டையில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் லோகோவைத் தவிர வேறு எதுவும் இருக்கக்கூடாது என்பது கட்சியின் துணை விதி கூறுகிறது. அதுபற்றி கேட்டால் அப்படித்தான் செய்வேன் என்கிறார் என 6 விதமாக புகார்களை மேலிட பார்வையாளரிடம் விரிவாக எடுத்துக் கூறினோம்.

அவரும் அடுத்த 4 நாட்களில் தமிழகம் வந்து விசாரித்துவிட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார். மேலும், பிப்.20-ம் தேதி கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபாலை சந்திக்கவும், காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை பிப்.21-ம் தேதி சந்திக்கவும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை பிப்.22-ம் தேதி சந்திக்கவும் நேரம் ஒதுக்கியுள்ளனர். இவர்களை சந்தித்துவிட்டுத்தான் நாங்கள் சென்னை திரும்புவோம். இவ்வாறு திரவியம் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x