Published : 21 Feb 2025 12:13 AM
Last Updated : 21 Feb 2025 12:13 AM
சேலம்: சென்னை அண்ணா சாலைக்கு தனி ஆளாக வருகிறேன். இடமும், நேரமும் குறிப்பிட்டுச் சொல்லுங்கள் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறினார்.
சேலத்தில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க நேற்று வந்திருந்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் மாணவர்கள் 3 மொழிகளைப் படிக்க வேண்டுமா என்பதுதான் தற்போது முக்கியப் பிரச்சினையாக உள்ளது. தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை 56 லட்சத்தைக் கடந்துவிட்டது. அரசுப் பள்ளிகளில் 52 லட்சம் மாணவர்கள் பயில்கின்றனர்.
சிபிஎஸ்இ பள்ளிகளின் எண்ணிக்கை 200-ல் இருந்து 2,010-ஆக அதிகரித்துள்ளது. மக்கள் தனியார் பள்ளிகளை விரும்புகின்றனர். திமுகவினர் நடத்தும் சிபிஎஸ்இ பள்ளிகள், விசிக தலைவர் சேர்மேனாக இருக்கும் சிபிஎஸ்இ பள்ளி ஆகியவற்றில் இந்தி கட்டாயப் பாடமாக உள்ளது. தவெக தலைவர் விஜய் சிபிஎஸ்இ பள்ளி நடத்துகிறார். ஆனால், இவர்கள் அரசுப் பள்ளிகளில் இருமொழிக் கொள்கைதான் வேண்டும் என்கின்றனர்.
அரசுப் பள்ளிகளில் 3 மொழிகள் வேண்டும் என்பது பிரதமரின் விருப்பம். தமிழ் பாட மொழியாகவும், ஆங்கிலம் மற்றும் ஏதேனும் ஒரு விருப்ப மொழி இருக்கவேண்டும் என்பதுதான் பாஜகவின் நோக்கம். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச உணவு, சீருடை, காலணி கொடுப்பதாக உதயநிதி கூறுகிறார். அவரது தாத்தா, அப்பா வீட்டுப் பணத்திலா இதை செய்கிறார். தமிழக அரசு கல்விக்காக ஆண்டுதோறும் ரூ.44 ஆயிரம் கோடி நிதி ஒதுக்குகிறது. ஆனால், மத்திய அரசு ரூ.2 ஆயிரம் கோடி வழங்காததால், தமிழகத்தில் பள்ளிகளை நடத்த முடியவில்லை என்று கூறுவதை எப்படி ஏற்க முடியும்?
குடியரசு தலைவரிடம்... மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக தமிழகத்தில் மார்ச் 1-ம் தேதி முதல் கையெழுத்து இயக்கம் நடத்தி, குடியரசுத் தலைவரிடம் அவற்றை வழங்குவோம். தமிழகத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாக ஏடிஜிபி அறிக்கை வெளியிடுகிறார். ஆனால், சட்டம்-ஒழுங்கு நன்றாக உள்ளதாக முதல்வர் கூறுகிறார்.
கும்பமேளாவில் பங்கேற்கிறேன்: நான் கும்பமேளாவில் பங்கேற்கச் செல்கிறேன். வரும் 26-ம் தேதிக்குப் பின்னர் தமிழகத்தில் இருப்பேன். அப்போது, துணை முதல்வர் உதயநிதி கேட்டபடி சென்னை அண்ணா சாலைக்கு தனி ஆளாக வருகிறேன். எந்த இடத்துக்கு, என்ன நேரத்தில் வர வேண்டும் என்று குறிப்பிட்டுச் சொல்லுங்கள். திமுக ஐ.டி. விங் மற்றும் அரசு இயந்திரங்களைப் பயன்படுத்தி, எக்ஸ் தளத்தில் ‘கெட்-அவுட் மோடி’ என்று டிரென்டிங் செய்துள்ளனர். ஸ்டாலின் தமிழகத்தை விட்டு வெளியேற வேண்டும் என ‘கெட்-அவுட் ஸ்டாலின்’ என எக்ஸ் தளத்தில் நாளை (இன்று) பதிவிடப்போகிறோம். யார் அதிகமாக டிரென்டிங் செய்தனர் என்பதைப் பார்த்துவிடுவோம்.
அண்ணாமலை தரம் தாழ்ந்து பேசுகிறார் என்று உதயநிதி கூறுகிறார். எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி உள்ளிட்டோரை தரம் தாழ்ந்து பேசியவர் உதயநிதி.கும்பமேளாவுக்கு 70 கோடி பேர் வந்துள்ளனர். அங்கு பக்தர்களுக்காக, சிறப்பான ஏற்பாடுகளை உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் செய்து கொடுத்துள்ளார். ஆனால், சென்னையில் விமானப்படை சாகச நிகழ்ச்சியைக் காணவந்த 10 லட்சம் பேருக்கு வசதி செய்து கொடுக்க தமிழக அரசால் முடியவில்லை. இவ்வாறு அண்ணாமலை கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...