

நாங்கள் மனதுவைத்தால் திமுக அரசை வெளியேற்ற முடியும் என்று பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கூறினார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: திமுக தலைவர்கள் 45 பேர் நடத்தும் பள்ளிகளில் இந்தி, சம்ஸ்கிருதம் கற்பிக்கின்றனர். கல்விக்கு 20 தலைப்புகளில் மத்திய அரசு நிதி அளிக்கிறது. அதில் ஒன்றுதான் பிஎம்ஸ்ரீ பள்ளி நிதி. இந்த ஒரு திட்டத்துக்கான நிதியைத்தான் நிறுத்தியுள்ளனர். உங்கள் (திமுகவினர்) குழந்தைகள் இந்தி படிக்கும்போது, அரசுப் பள்ளிக் குழந்தைகள் இந்தி படிக்கக் கூடாதா?
உதயநிதி பிரதமரை இஷ்டத்துக்கு பேசுவாரா? நாங்கள் மனதுவைத்தால் திமுக அரசை வெளியேற்ற முடியும். உதயநிதி மரியாதையுடன் பேச வேண்டும். 2026-க்கு பின்னர் அவர் இருக்கிற இடம் தெரியாமல் போய்விடுவார்.
1965-ல் நடந்ததுபோல தற்போதும் நடக்கும் என்கின்றனர். 1965-ல் திமுக தலைவர்கள் சிபிஎஸ்இ பள்ளிகளை நடத்தவில்லை. அவர்களது குழந்தைகளும் சிபிஎஸ்இ பள்ளிகளில் படிக்கவில்லை. ஆனால், இப்போது நிலைமை அப்படி அல்ல.
மும்மொழியை செயல்படுத்த வேண்டும் என்று சிறுபான்மை கூட்டமைப்பில் இருந்து முதல்வருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். 2001-ம் ஆண்டு மத்திய அரசு பாடத் திட்டமாக இருந்தாலும் தமிழ் ஒரு பாடமாக இருக்க வேண்டும் என்று தீர்மானம் கொண்டுவந்தேன். திராவிடர்கள் ஆட்சியில்தான் தமிழர்களுக்கு தமிழ் எழுதத் தெரியவில்லை. விஜய், திருமாவளவன் ஆகியோர் சிபிஎஸ்இ பள்ளிகளை நடத்துகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.