Published : 20 Feb 2025 06:40 PM
Last Updated : 20 Feb 2025 06:40 PM

‘தைரியம் இருந்தால்...’ - அண்ணாமலை vs உதயநிதி: வார்த்தைப் போருக்கு காரணம் என்ன?

உதயநிதி ஸ்டாலின், அண்ணாமலை

சென்னை: “அண்ணாமலைக்கு தைரியம் இருந்தால் அண்ணா சாலைக்கு வரட்டும்” என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியிருந்த நிலையில், “அண்ணா சாலையில் எங்கு வரவேண்டும்?” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். இருவருக்கும் இடையிலான வார்த்தைப் போர் காரணமாக, எக்ஸ் பக்கத்தில் ‘Get out Modi’ ஹேஷ்டேகை ட்ரெண்ட் செய்து வருகின்றனர் திமுகவினர்.

சென்னையில் மத்திய அரசைக் கண்டித்து கடந்த 18-ம் தேதி திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், “பிரதமர் மோடி கடந்த முறை தமிழர்களின் உரிமைகளை எல்லாம் பறிக்க முயன்றபோது, தமிழக மக்கள் உங்களை ‘Go Back Modi’ என்று துரத்தி அடித்தனர். மீண்டும் அதை தமிழக மக்களிடம் முயற்சி செய்தால், இந்தமுறை ‘Go Back Modi’ கிடையாது. இந்தமுறை தமிழர்கள் ‘Getout Modi’ என்று துரத்துவார்கள்,” என்று பேசியிருந்தார்.

இதைத்தொடர்ந்து, நேற்று (பிப்.19) கரூரில் நடந்த பாஜக கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை, “உதயநிதி ஸ்டாலின் சரியான ஆளாக இருந்தால், அவர் வாயில் இருந்து ‘Get out Modi’ என்று சொல்லட்டும். உதயநிதி வீட்டுக்கு வெளியே, பாலிடாயில் பாபு என்று போஸ்டர் ஒட்டிவிட்டு வருவேன், அவர் பேசும் அதே பாஷையில் நானும் பேசுவேன். அவருக்கு ஒரு உலகத் தலைவரை மதிக்கத் தெரியவில்லை. உதயநிதி ஒரு கத்துக்குட்டி” என்று பேசியிருந்தார்.

இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த துணை முதல்வர் உதயநிதியிடம், அண்ணாமலை போஸ்டர் ஒட்டுவதாக பேசியது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “சுவரொட்டி ஒட்டுவதெல்லாம் ஒரு பெரிய சாதனையா? மத்திய அரசிடம் கேட்ட நிதியை வாங்கித் தருவதற்கு துப்பில்லை. இவர்கள் சவால் விடுகிறார்கள். பிரச்சினையை திசைத்திருப்ப பார்க்கிறார். அவரை வரச் சொல்லுங்கள். இன்று இளைஞரணி நிகழ்ச்சி இருக்கிறது. அது முடிந்தவுடன் வீட்டில்தான் இருப்பேன். ஏற்கெனவே அண்ணாமலை அறிவாலயம் பக்கம் ஏதோ செய்வதாக கூறியிருந்தார். முடிந்தால் அவரை அண்ணா சாலை பக்கம் வரச்சொல்லுங்கள், தைரியம் இருந்தால்,” என்று கூறினார்.

இது குறித்து சேலத்தில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, “இன்று சேலத்தில் இருக்கிறேன். தொடர்ந்து காசி தமிழ்ச் சங்கமம், கும்பமேளாவுக்குச் செல்கிறேன். அடுத்த வாரம் சென்னைக்கு செல்லவிருக்கிறேன். சென்னைக்கு நான் எப்போது செல்கிறேனோ, அண்ணா சாலையில் எங்கு வரவேண்டும் என்று திமுககாரர்கள் நாளையும், தேதியையும், இடத்தையும் குறிக்கட்டும்.

அண்ணா சாலைக்கு நான் வருகிறேன். நீங்கள் இடத்தை மட்டும் முடிவு செய்யுங்கள். நான் தனி ஆளாக வருகிறேன். பாஜக தொண்டர்கள் யாரும் என்னுடம் வரமாட்டார்கள். நீங்கள் திமுகவின் மொத்த படையையும், மொத்த காவல் துறையையும் வைத்து தடுத்து நிறுத்திப் பாருங்கள். நேற்று நான் பேசியதில் இருந்து எப்போதும் பின்வாங்கப் போவதில்லை” என்று அவர் கூறினார். இந்தப் பின்னணியில், எக்ஸ் தளத்தில் ‘Get out Modi’ என்ற ஹேஷ்டேகை திமுகவினர் ட்ரெண்டிங் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x