Published : 20 Feb 2025 03:24 PM
Last Updated : 20 Feb 2025 03:24 PM
சென்னை:“கார்ப்பரேட்களுக்கும், ஆதிக்க சக்திகளுக்கும் ஆதரவாக அரசியல் செய்யும் அண்ணாமலைக்கு திராவிட மாடலைப் பற்றியும், தமிழக முதல்வர், துணை முதல்வர் பற்றியும் பேசுவதற்கு எந்தவிதமான தகுதியும், அருகதையும் இல்லை” என்று தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திமுக அரசு சொல்வதை செய்யும் அரசு, சொல்வதற்கு மேலாகவும் மக்கள் சேவை செய்யும் அரசு, திராவிட மாடல் ஆட்சி பொறுப்பேற்றவுடன் தமிழக முதல்வர் ஸ்டாலின், மக்களுக்கு தெரிவித்ததைப்போல், “நான் ஓட்டு போட்டவருக்கு மட்டும் முதல்வரல்ல, ஓட்டு போடாதவர்களுக்கும் நானே முதல்வர்”, அந்த வகையில் நாம் ஏன் திமுக அரசுக்கு ஓட்டுப் போட தவறிவிட்டோம் என்று சிந்திக்கின்ற வகையில் இந்த திராவிட மாடல் ஆட்சி அமையும் என்று சூளுரைத்தார். திமுக ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து இதுநாள் வரை 90%-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அவற்றில் சில, கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், விடியல் பயணத் திட்டம், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், புதுமைப் பெண் திட்டம், தமிழ்ப்புதல்வன் திட்டம், நான் முதல்வன் திட்டம், கலைஞரின் கனவு இல்லத்திட்டம், மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் நம்மைக்காக்கும்-48, மக்களுடன் முதல்வர், தொழில்துறை 4.0 திட்டம், முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம், இல்லம் தேடி கல்வி, இப்படி நூற்றுக்கணக்கான சிறப்புத் திட்டங்களை வரிசைப்படுத்தி கொண்டே போகும் அளவுக்கு தமிழக மக்களின் வாழ்வில் விடியலை உருவாக்கும் ஆட்சி திராவிட மாடல் ஆட்சி.
அதனால்தான் அண்மையில் நடத்தப்பட்ட ஒரு கருத்துக்கணிப்பில் கடந்தாண்டு திமுக-வுக்கு இருந்த மக்கள் செல்வாக்கு 47 சதவீத்திலிருந்து 52 சதவீதமாக உயர்ந்திருப்பதாகவும், இப்போது மட்டுமல்ல, எப்போது தேர்தல் நடைபெற்றாலும் தமிழகத்தில் 39 தொகுதிகளிலும், திமுக அமோக வெற்றி பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்றொரு கணக்கெடுப்பில் கடந்தாண்டு பிப்ரவரியில் 36 சதவீதமாக இருந்த மக்கள் செல்வாக்கு, இந்தாண்டு பிப்ரவரியில் 57 சதவீதமாக உயர்ந்து, இந்தியாவின் மிகப்பெரிய மாநிலங்களில் முதலிடத்தில் தமிழகத்தின் முதல்வர் இடம்பெற்றிருப்பது விஞ்ஞானப்பூர்வமாக நடத்தப்பட்ட கருத்துக்கணிப்புகளால் நிரூபிக்கப்பட்டுள்ளது.
இவற்றையெல்லாம் சகித்துக் கொள்ள முடியாத அண்ணாமலை தொடர்ந்து முதல்வரையும், தமிழகத்தின் துணை முதல்வரையும் ஒருமையில் பேசுவது அரசியல் அநாகரிகத்தின் உச்சமாகும்.
நீட், புதிய கல்விக் கொள்கை, இந்தி திணிப்பு, மாநில உரிமைகளுக்கு எதிராக செயல்படுவது என அனைத்திலும், தமிழக மக்கள் விரோத அரசியல் செய்யும் அண்ணாமலை தொடர்ந்து செய்யும் கேலிக்கூத்து நடவடிக்கைகளுக்கு அளவின்றி போய்க் கொண்டிருக்கிறது.
திடீரென்று செருப்பில்லாமல் நடப்பேன் என்று சொல்லி ஷூ கால்களுடன் வலம் வருவது, தன்னைத்தானே சாட்டையால் அடித்துக்கொள்வது போன்ற நடவடிக்கைகள் கண்டு நாடே எள்ளி நகையாடுகிறது. கார்ப்பரேட்களுக்கும், ஆதிக்க சக்திகளுக்கும் ஆதரவாக அரசியல் செய்யும் அண்ணாமலைக்கு திராவிட மாடலைப் பற்றியும், தமிழக முதல்வர், துணை முதல்வர் பற்றியும் பேசுவதற்கு எந்தவிதமான தகுதியும், அருகதையும் இல்லை.
துணை முதல்வர், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் போன்ற அமைச்சர்களை ‘தற்குறி’ என்று சொல்லுமளவுக்கு, கீழ்த்தரமாக அண்ணாமலை செயல்படுகிறார். தான் நாவடக்கம் அற்றவர், அநாகரீகமானவர் என்பதை இடைவெளியில்லாமல் தொடர்ந்து நிரூபித்துக்கொண்டிருக்கிற அண்ணாமலை ஒவ்வொரு நாளும் தமிழக மக்கள் மத்தியில் அம்பலப்பட்டுக்கொண்டிருக்கிறார் என்பது நிதர்சனம்.” என்று கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment