Published : 20 Feb 2025 02:39 PM
Last Updated : 20 Feb 2025 02:39 PM
சென்னை: “தமிழக அரசுக்கு உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி தமிழை பயிற்று மொழியாகவும், பாட மொழியாகவும் மாற்றுவதற்கு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், அதை செய்யாமல் மும்மொழிக் கொள்கையை மட்டும் எதிர்ப்பது சந்தர்ப்பவாத அரசியலாகவும், தமிழ் மொழிக்கு இழைக்கப்படும் துரோகமாகவும் தான் பார்க்கப்படும்” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “நமது தாய்மொழியாம் தமிழை வளர்த்தெடுக்க வேண்டியதன் தேவையை உலகத்தாய்மொழி நாள் கொண்டாடப் பட்டு வரும் கடந்த 26 ஆண்டுகளாக தொடர்ந்து வலியுறுத்தி வரும் போதிலும், அன்னைத் தமிழைக் கட்டாய பாடமாகவும், பயிற்றுமொழியாகவும் நடைமுறைப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது.
அன்னைத் தமிழின் வளர்ச்சிக்கு பங்களிக்காமல் இந்த நாளை கடைபிடிப்பது சற்றும் பொருளற்றது; பயனற்றது என்பது தான் பாமகவின் உறுதியான நிலைப்பாடு ஆகும்.உலகத் தாய்மொழி நாள் அறிவிக்கப்படுவதற்கு முன்பிலிருந்தே தமிழகத்தில் தமிழ் மொழியை கட்டாயப் பயிற்று மொழியாகவும், பாடமாகவும் அறிவிக்க வேண்டும் என்று பாமக வலியுறுத்தி வருகிறது.
உலகத் தாய்மொழி நாள் அறிவிக்கப்பட்டவுடன், ஒவ்வொரு ஆண்டும் உலகத் தாய்மொழி நாளில் அன்னைத் தமிழை பயிற்று மொழியாகவும், பாட மொழியாகவும் அறிவிக்க வேண்டும் என்று நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். கடந்த 2023-ம் ஆண்டு இதே நாளில் தமிழ்க் கட்டாயப் பாடம், தமிழ்க் கட்டாயப் பயிற்றுமொழி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 8 நாள்கள் தமிழன்னை சிலையுடன் பரப்புரை பயணம் மேற்கொண்டேன். ஆனால், அந்தக் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றவில்லை.உலகின் அனைத்து நாடுகளிலும் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் தாய்மொழி தான் பயிற்று மொழியாக திகழ்கிறது.
ஆனால், தமிழகத்தில் மட்டும் தான் தமிழைப் படிக்காமலும், தமிழில் படிக்காமலும் பட்டம் பெற முடியும் என்ற அவல நிலை நிலவுகிறது. இந்த நிலையை மாற்ற திமுக அரசு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது? 25 ஆண்டுகளுக்கு முன்பு 1999-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழை கட்டாய பயிற்று மொழியாக்க வேண்டும் என்று வலியுறுத்தி 102 தமிழறிஞர்கள் சாகும்வரை உண்ணாநிலை மேற்கொண்டனர். அதைத் தொடர்ந்து எட்டாம் வகுப்பு வரை தமிழை கட்டாயப் பயிற்றுமொழியாக்கி சட்டம் கொண்டு வருவதற்கு ஒப்புக் கொண்ட தமிழக அரசு, ஐந்தாம் வகுப்பு வரை தமிழை பயிற்றுமொழியாக்கி அரசாணை பிறப்பித்தது.
ஆனால், அடுத்த சில மாதங்களிலேயே அந்த அரசாணை செல்லாது என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதை எதிர்த்து தமிழக அரசின் சார்பில் 2000-ம் ஆண்டில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த வழக்கு 25 ஆண்டுகளாக உச்சநீதிமன்றத்தில் உறங்கிக் கொண்டிருக்கிறது. அதை விசாரணைக்கு கொண்டு வருவதற்கோ அல்லது கட்டாயப் பயிற்றுமொழிச் சட்டத்தை நிறைவேற்றுவதற்கோ தமிழக அரசு இன்று வரை நடவடிக்கை எடுக்கவில்லை.
உலகத் தாய்மொழி நாள் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே தமிழ் பயிற்றுமொழிக்கான அரசியல் போராட்டமும், சட்டப் போராட்டமும் தொடங்கியது. ஆனால், அதன்பின் கால் நூற்றாண்டுக்கு மேலாகியும் இன்று வரை அன்னை தமிழுக்கு ஆட்சிப் பீடம் கிடைக்கவே இல்லை. அதேபோல், எனது அழுத்தம் காரணமாக, தமிழகத்தில் 10-ம் வகுப்பு வரை தமிழைக் கட்டாயப் பாடமாக்கி 2006-ம் ஆண்டில் அப்போதைய முதல்வர் கருணாநிதி சட்டம் கொண்டு வந்தார்.
அதன்படி 2015-16ஆம் ஆண்டு முதல் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ்க் கட்டாயம் ஆக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அதுவும் நடக்கவில்லை. இதுதொடர்பான வழக்கும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் தான் உள்ளது. ஆனால், அந்த வழக்கை விசாரணைக்கு கொண்டு வந்து தமிழை கட்டாயப்பாடமாக்க தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.தமிழகத்தில் மும்மொழிக் கொள்கையை திணிப்பதற்கு தமிழக அரசும், கட்சிகளும் எதிர்ப்பு தெரிவிப்பது மிகவும் சரியானது. மும்மொழிக் கொள்கையை எதிர்ப்பது எந்த அளவுக்கு நியாயமானதோ, தமிழை கட்டாயப் பாடமாக்குவதும், பயிற்று மொழியாக்குவதும் அதை விட நியாயமானதும், முக்கியமானதும் ஆகும்.
தமிழக அரசுக்கு உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி தமிழை பயிற்று மொழியாகவும், பாட மொழியாகவும் மாற்றுவதற்கு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், அதை செய்யாமல் மும்மொழிக் கொள்கையை மட்டும் எதிர்ப்பது சந்தர்ப்பவாத அரசியலாகவும், தமிழ் மொழிக்கு இழைக்கப்படும் துரோகமாகவும் தான் பார்க்கப்படும்.
எனவே, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள தமிழ் மொழி தொடர்பான வழக்குகளை மிக விரைவாக விசாரணைக்கு கொண்டு வந்து, தமிழகத்தில் அனைத்துப் பள்ளிகளிலும் தமிழைக் கட்டாயப்படமாகவும், கட்டாயப் பயிற்றுமொழியாகவும் நடைமுறைப்படுத்த தமிழக அரசு ஆக்கப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்று அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...