Published : 20 Feb 2025 09:15 AM
Last Updated : 20 Feb 2025 09:15 AM
நீதிமன்றத்தில் வழக்கு, உட்கட்சிக்குள் உரிமைக் குரல்கள்... இதையெல்லாம் ‘மேலே இருப்பவன் பார்த்துக்கொள்வான்’ என வைத்துவிட்டு 2026 தேர்தலுக்கான திண்ணைப் பிரச்சாரத்தில் தீவிரம் காட்டத் தொடங்கி இருக்கிறது அதிமுக.
ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதா பேரவை சார்பில் ஜெயலலிதாவின் 77-வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம், அதன் மாநில செயலாளர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் அண்மையில் நடந்தது.
இதில், ‘திமுக-வின் வாரிசு அரசியலுக்கு முடிவு கட்டவும், மக்கள் விரோத திமுக அரசின் அவல நிலையை தோலுரித்துக் காட்டவும், எம்ஜிஆர், ஜெயலலிதா, பழனிசாமி ஆகியோர் ஆட்சிகளின் சாதனைகளை பரப்பவும் வெள்ளி தோறும் திண்ணைப் பிரச்சாரம் மேற்கொள்து’ என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதன்படி அடுத்த வெள்ளிக்கிழமையே சென்னை வியாசர்பாடி பகுதியில் அதிமுக மாவட்டச் செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ், ஜெ. பேரவை நிர்வாகிகளுடன் வீடு வீடாகச் சென்று திண்ணைப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பொதுமக்களுக்கு வழங்கிய துண்டு பிரசுரத்தில், ‘சிந்திப்பீர், வாக்காளிப்பீர், நமது சின்னம் இரட்டை இலை’ என பெரிய எழுத்தில் இருந்ததுடன், அதிமுக அரசின் 55 சாதனைகளையும் பட்டியல் போட்டிருந்தார்கள். சொன்னபடியே திண்ணைப் பிரச்சாரம் தொடங்கிவிட்டது குறித்து ஆர்.பி.உதயகுமாரிடம் பேசினோம்.
தேர்தலுக்கு இன்னும் ஒரு வருஷம் இருக்கிறதே... அதற்குள் பிரச்சாரத்தை ஆரம்பித்துவிட்டீர்களே..? - தமிழகத்தில் மன்னராட்சியை வீட்டுக்கு அனுப்பி மக்களாட்சியை மலரச் செய்ய 6.36 கோடி வாக்காளர்களைச் சந்திக்க வேண்டி இருப்பதால், இப்போதே பிரச்சாரத்தை தொடங்கிவிட்டோம்.
இந்தக் காலத்தில் திண்ணைப் பிரச்சாரமெல்லாம் எடுபடும் என நினைக்கிறீர்களா? - மிகவும் எளிமையான, அனைத்து மக்களையும் நேரடியாக சந்திக்கவும், அவர்களுடன் கலந்துரையாடி, அவர்களின் கருத்தையும் பெற வழி செய்வது திண்ணைப் பிரச்சாரம் தான். எங்களின் பிரச்சாரம் மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. பேரறிஞர் அண்ணா காலத்தில் கடைபிடிக்கப்பட்ட உத்தி தான் இது. இதற்கு முன்பு நாங்கள் மாணவரணி, இளைஞர் அணிகளில் இருந்தபோதும் திண்ணைப் பிரச்சாரம் செய்திருக்கிறோமே.
2026-ல் அதிமுக ஆட்சி மலர ஜெ.பேரவையின் பங்களிப்பு எத்தகையதாக இருக்கும்? - பேரவை நிர்வாகிகளை கட்சிப்பணி, தேர்தல் பணி, மக்கள் பணி ஆகிய 3 பணிகளிலும் முழுமையாக ஈடுபடுத்தி, ஓராண்டு முழுவதும் பணியாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. திமுக ஆட்சியின் அவலங்களை மக்களிடம் கொண்டுபோய் சேர்த்து, 2026 தேர்தலில் அதிமுக-வை வெற்றிபெறச் செய்து, பழனிசாமியை முதல்வராக்கும் வரை பேரவை ஓயாது பணியாற்றும்.
ஆளும் கட்சியை எதிர்த்துப் போராட வேண்டிய இந்த நேரத்தில் உட்கட்சிக்குள்ளேயே கருத்து பேதங்கள் ஏற்பட்டிருக்கிறதே? - திமுக என்பது எம்ஜிஆர், ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்ட எதிரி. அதை வீழ்த்தும் ஒற்றை இலக்கை நோக்கி அனைவரும் பயணிக்கிறோம். இந்த பயணத்தில் அவரவர் கருத்துகளை சுதந்திரமாக வெளிப்படுத்துகின்றனர். இது, ‘2026-ல் அதிமுக ஆட்சி’ என்ற எங்களது இலக்கை பாதிக்காது.
மக்களவை தேர்தலில் ராமநாதபுரத்தில் எனக்கு எதிராக ஆர்.பி.உதயகுமார், 6 பன்னீர்செல்வங்களை நிறுத்தியும் அதிமுக வேட்பாளர் டெபாசிட் வாங்கவில்லை என ஓபிஎஸ் சொல்கிறாரே? - இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற்று முதல்வரான ஓபிஎஸ், அதே இரட்டை இலையை எதிர்த்து பலாப்பழம் சின்னத்தில் போட்டியிட்டு, பண பலத்தை இறக்கி இரட்டை இலையை டெபாசிட் இழக்கச் செய்துள்ளார். அதிமுக-வுக்கு நான்தான் ஒருங்கிணைப்பாளர் என்று வழக்குத் தொடுக்கும் ஓபிஎஸ், ஒரு எம்பி பதவிக்காக இரட்டை இலை சின்னத்தை எதிர்த்து போட்டியிடுகிறார். இதை என்னவென்று சொல்வது.
அனைவரும் ஒன்றிணைந்தால் தான் வாழ்வு என்று சொல்லும் ஓபிஎஸ், நிபந்தனையின்றி இணையத் தயார் என்று சொல்லி இருக்கிறாரே? - தாயை கொலை செய்த வழக்கில், “நான் தாய் இல்லாத பிள்ளை, எனக்கு கருணை காட்டுங்கள்” என்று நீதிபதியிடம் குற்றவாளி கேட்பது போல், ஓபிஎஸ்சின் இந்த வேண்டுகோள் உள்ளது. இவரது கருணை மனுவை தொண்டர்களும், மக்களும் ஏற்கமாட்டார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment