Last Updated : 19 Feb, 2025 06:28 PM

2  

Published : 19 Feb 2025 06:28 PM
Last Updated : 19 Feb 2025 06:28 PM

“தவெக உடன் நாம் தமிழர் கட்சி கூட்டணி வைப்பது சரியாக வராது” - சீமான்

மதுரையில் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்தார் |  படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

மதுரை: “ஆட்சியில் இருந்த பெரிய கட்சிகள் கூட்டணிக்கு அழைத்தபோதே செல்லவில்லை. அப்படியிருக்கும்போது தவெக - நாம் தமிழர் கூட்டணி சரியாக வராது,” என மதுரையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

மதுரையில் தென் மாவட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் இன்று (பிப்.19) நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்றார். அப்போது செய்தியாளர்களிடம் சீமான் கூறியது: “தமிழகத்தில் முதலில் இந்தி மொழியை திணித்தது காங்கிரஸ் கட்சிதான். அந்தக் கட்சியுடன் திமுக கூட்டணி அமைத்து தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது. திராவிட கட்சிகளின் ஆட்சியில் எந்த இடத்தில் இந்தி இல்லாமல் இருந்தது.

இந்தியாவில் அனைத்து மக்களும் ஒற்றுமையாக வாழ்வது தான் சிறப்பு. இந்த நாட்டை பாஜக துண்டாட துடிக்கிறது. இந்தியை ஏற்றுக்கொள்ள வேண்டுமானால் மொழிவாரியாக மாநிலங்கள் எதற்காக பிரிக்கப்பட்டது? இந்தி மொழியை பயில்வதற்கு அந்த மொழிக்கு அப்படி என்ற சிறப்பு காரணம் உள்ளது. இந்திய மொழி இந்திதான் என எந்த அரசியல் சாசனததில் கூறப்பட்டுள்ளது? இந்தியா பல மொழி பேசும் மக்கள் ஒன்றிணைந்த ஐக்கியம். நாடு எங்கும் இந்தி மொழியை திணிப்பது தேவையற்றது.

இரண்டு மூன்று மாநிலங்களில் மட்டும் பேசக்கூடிய இந்தியை திணிக்க நினைப்பது தவறு. இந்தி மொழி தேவையெனில் கற்றுக் கொள்ளலாம். இந்தி மொழி விவகாரத்தில் திராவிடர்களை நம்பக் கூடாது. இந்தியை திமுக உளமார எதிர்க்கிறதா? இந்தி படித்தால் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு செல்லலாம் என்றால் வட மாநிலத்தில் இருந்து ஒன்றரை கோடி மக்கள் ஏன் தமிழகத்துக்கு வேலைக்காக வருகிறார்கள்.

நான் நோட்டுக்காக, சீட்டுக்காக அரசியலுக்கு வரவில்லை. நம் நாட்டுக்காக அரசியலுக்கு வந்துள்ளேன். தன்னை முன் நிறுத்தி கொள்பவர்கள் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி செல்கிறார்கள். நாம் தமிழர் கட்சியில் கட்சிக்காக நான், எனக்காக கட்சி என செயல்பட வேண்டும். சீமானுக்குப் பின் யார் தலைவர் எனும் போட்டியால் நாம் தமிழர் கட்சியில் இருந்து செல்கின்றனர். நேர்மையாக கட்சி நடத்த சர்வாதிகாரியாக செயல்படுவேன். நான் குட்டை, குளத்தில் வலை வீசவில்லை. தமிழ் தேசியம் எனும் பெருங்கடலில் வலை வீசுகிறேன்.

ஐபிஎஸ் அதிகாரி வருண் கட்சிக்காரர் போல் செயல்படுகிறார். அவர் என்னை தேவையில்லாமல் சீண்டினால் வெறிதான் வரும். வருண் வேலையே செல்போனை திருடுவது தான். வருண் மீது காவல் துறை உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். திராவிடம் பேசாமல், பெரியாரை பேசாமல் நாம் தமிழர் கட்சி அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக வளர்ந்துள்ளது. ஆட்சி அதிகாரத்தில் இருந்த பெரிய பெரிய கட்சிகள் கூட்டணிக்கு அழைத்த போதே நான் செல்லவில்லை. எனவே, தமிழக வெற்றி கழகத்துடன் நாம் தமிழர் கட்சி கூட்டணி வைப்பது சரியாக வராது,” என்று சீமான் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x