Published : 19 Feb 2025 04:07 PM
Last Updated : 19 Feb 2025 04:07 PM
கோவை: “கட்சிக்காக எதையும் எதிர்பார்க்காமல் உழைக்கக் கூடிய உன்னதமானவர் செங்கோட்டையன்” என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று (பிப்.19) கோவை வந்த ஓ.பன்னீர்செல்வம் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: “நான் விரக்தியில் இருப்பதாக, அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சனம் செய்திருப்பது குறித்து பதில் சொல்ல தேவையில்லை. அவர் என்ன பேசினாலும் பேசிவிட்டு போகட்டும். அவர் பேசும் மொழி எந்த மாதிரியான மொழி என்பது மக்களுக்குத் தெரியும், அவர்கள் பார்த்துக்கொண்டு இருக்கின்றனர்.
கொங்கு நாட்டில் உள்ளவர்கள் எல்லாம் கொங்கு நாட்டின் தங்கங்கள். நீண்ட காலம் நானும் செங்கோட்டையனும் இணைந்து கட்சிக்கு பணியாற்றி இருக்கிறோம். எதையும் எதிர்பார்க்காமல் உழைக்கக் கூடிய உன்னதமானவர் செங்கோட்டையன். அதிமுக கட்சி இணைய வேண்டும் என்பது அனைவரின் கருத்தாக உள்ளது. கடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுகவை விற்று வாக்குகள் பெற தவறிவிட்டனர். ஏழு தொகுதிகளில் டெபாசிட் இழக்கும் நிலை ஏற்பட்டது. தவிர 13 தொகுதிகளில் மூன்றாவது இடம் சென்றது.
குறிப்பாக கன்னியாகுமரி தொகுதியில் அதிமுக வெறும் 5,000 வாக்குகள் மட்டுமே பெற்றது. அதிமுக தொண்டர்களின் உரிமையை மீட்கும் குழுவாக செயல்பட்டுக் கொண்டு இருக்கின்ற நாங்கள், தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ளோம். அதை நிரூபிப்பதற்கு ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்ட நிலையில், ராமநாதபுரம் தொகுதியில் என்னை தோற்கடிக்க பல்வேறு முயற்சிகள் நடந்தும் அதை மீறி 3 லட்சத்து 42 ஆயிரம் வாக்குகளை பெற்றோம்.
மக்களும் தொண்டர்களும் எங்கள் பக்கம் தான் உள்ளனர் என்பதை தெரிந்து கொள்ளலாம். இடைத்தேர்தலில் கூட போட்டியிட முடியாத அச்ச உணர்வுடன் அவர்கள் உள்ளனர். பேரிடர் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிதி ஒதுக்குவதற்கு ஒரு அளவுகோல் உள்ளது. அதன்படி மத்திய அரசு எந்த மாநிலமாக இருந்தாலும் நிதி ஒதுக்கும். எங்களது உயிர்மூச்சு உள்ள வரை இரு மொழி கொள்கை தான். அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்பது தான் எங்களது கருத்தாக உள்ளது.
அதிமுக இணைய வேண்டும் என்ற ஒத்த கருத்துடன் உள்ளவர்களிடம் போனில் பேசிக் கொண்டுதான் இருக்கிறேன். அதிமுகவில் இருந்து என்னிடம் பேசிக் கொண்டிருக்கின்றனர். தனிப்பட்ட ஈகோ-வை கீழே போட்டு விட்டு மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சி மலர வேண்டுமென்றால் அதிமுக இணைய வேண்டும்,” என்று அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...