Published : 19 Feb 2025 06:16 AM
Last Updated : 19 Feb 2025 06:16 AM

ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட 18 மாவட்ட விவசாயிகளுக்கு ரூ.500 கோடி நிவாரணம் - ஓரிரு நாளில் வழங்க நடவடிக்கை

தமிழகத்தில் ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர், விழுப்புரம், கிருஷ்ணகிரி உட்பட 18 மாவட்டங்களின் விவசாயிகளுக்கு ரூ.498.8 கோடி நிவாரண நிதி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதன்மூலம் 5 லட்சத்து 18,783 விவசாயிகள் பயன்பெறுவர். இந்த நிவாரணத் தொகை நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ஓரிரு நாட்களில் வரவு வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் கடந்த 2024-ம் ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் ஃபெஞ்சல் புயல் காரணமாக வரலாறு காணாத அதிகனமழை பொழிவு ஏற்பட்டு கடலூர், விழுப்புரம், கிருஷ்ணகிரி, தருமபுரி, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அதோடு வீடுகள், சாலைகள் போன்ற உட்கட்டமைப்பு வசதிகள் பெரும் சேதமடைந்தன.

வேளாண் மற்றும் தோட்டக்கலைப் பயிர்களும் பாதிப்புக்கு உள்ளாகின. தமிழக அரசு ஃபெஞ்சல் புயலை கடுமையான இயற்கை பேரிடர் என்று அறிவித்தது. தமிழக அரசின் வேண்டுகோளுக்கு இணங்க மத்திய அரசும் பெஞ்சல் புயலை கடுமையான இயற்கை பேரிடராக அறிவித்தது. புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு முதல்வர் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதோடு அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள், அரசு செயலாளர்கள், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்களை பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பி வைத்தார். போர்க்கால அடிப்படையில் மேற்கொண்ட துரித மீட்பு நடவடிக்கைகளால் ஃபெஞ்சல் புயலினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை திரும்பியது.

புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி போன்ற பல்வேறு மாவட்டங்களில் வெள்ளம் சூழ்ந்து, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளும் ஃபெஞ்சல் புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு உயர்த்தப்பட்ட நிவாரணமான ரூ.5 லட்சம் வழங்கப்பட்டது. மேலும், புயலால் பாதிப்புக்குள்ளான உட்கட்டமைப்புகளை உடனடியாக சீரமைக்க பல்வேறு துறைகளுக்கு ரூ.80 கோடி மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து விடுவித்தும், சீரமைப்புப் பணிகளை துரிதமாக மேற்கொள்ள உத்தரவிடப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன.

அத்துடன் புயலால் பாதிக்கப்பட்ட வேளாண் மற்றும் தோட்டக்கலைப் பயிர்களை கணக்கெடுத்து, மானாவாரி பயிருக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.8,500-ம், நெற்பயிர் மற்றும் பாசன வசதி பெற்ற பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.17,000-ம், நீண்டகாலப் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.22,500-ம் நிவாரணம் என்ற அடிப்படையில் விரைந்து நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டார்.

அதன்படி, ஃபெஞ்சல் புயலால் சேதமடைந்த பயிர்கள் குறித்து முறையாக கணக்கெடுக்கப்பட்டு விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், செங்கல்பட்டு, தருமபுரி, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், நாமக்கல், ராணிப்பேட்டை உட்பட 18 மாவட்டங்களில் பாதிப்புக்குள்ளான 3.23 லட்சம் ஹெக்டேர் பரப்பளவிலான வேளாண் மற்றும் தோட்டக்கலைப் பயிர்களுக்கு 5 லட்சத்து 18,783 விவசாயிகள் பயன்பெறும் வகையில் ரூ.498.8 கோடி நிவாரணம் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிவாரணத் தொகை நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ஓரிரு நாட்களில் வரவு வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x