Published : 18 Feb 2025 09:03 AM
Last Updated : 18 Feb 2025 09:03 AM
கோவை மண்டலத்தை இம்முறை எப்படியாவது அதிமுக-விடம் இருந்து கைப்பற்றிவிட வேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாக காய் நகர்த்துகிறார் முதல்வர் ஸ்டாலின், ஆனால், கோவை மாநகராட்சி துணை மேயருக்கு எதிராக திமுக-வினரே கிளப்பும் சர்ச்சைகளைப் பார்த்தால் முதல்வரின் கனவு கனவாகவே போய்விடும் போலிருக்கிறது என்கிறார்கள் உடன்பிறப்புகள்.
கோவை மாநகராட்சியின் 92-வது வார்டானது முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் சொந்த வார்டு. சட்டமன்றத் தேர்தலில் தனது ‘சக்தி’யை திரட்டி கோவை மாவட்டத்தின் 10 தொகுதிகளையும் வென்றெடுத்த வேலுமணியால், உள்ளாட்சித் தேர்தலில் தனது சொந்த வார்டில் அதிமுக-வை ஜெயிக்கவைக்க முடியவில்லை.
அவரது வார்டில் திமுக-வின் வெற்றிச்செல்வன் வாகை சூடினார். அதனாலேயே அவரை கோவைக்கு துணை மேயராக்கியது திமுக தலைமை. ஆனால், பதவிக்கு வந்ததும் வெற்றிச்செல்வன் தனது வார்டில் இருக்கும் கட்சி நிர்வாகிகளை உதாசீனப்படுத்த ஆரம்பித்துவிட்டதாகச் சொல்கிறார்கள் வார்டு நிர்வாகிகள்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய அவர்களில் சிலர், “வேலுமணியின் ஆதிக்கத்தை மீறி வெற்றிச்செல்வனை ஜெயிக்க வைத்தோம். அவர் தனக்குக் கிடைத்த துணை மேயர் பதவியை வைத்து தனது வார்டு மட்டுமின்றி கோவை மாநகராட்சியின் அனைத்து வார்டுகளிலும் கட்சியை வளர்த்திருக்கலாம். ஆனால் அதையெல்லாம் செய்யாமல், கடந்த 3 ஆண்டுகளில் தன்னை மட்டுமே வளப்படுத்திக் கொண்ட அவர், தனது செயல்பாடுகளால் கட்சிக்கும் அவப்பெயரை உண்டாக்கி வருகிறார்.
வார்டு திமுக நிர்வாகிகளை மதிப்பதில்லை. வாக்களித்த மக்களையும் மதிப்பதில்லை. திமுக-வினருக்கு டெண்டர் கிடைக்க விடுவதில்லை. அதிமுக-வைச் சேர்ந்த இருவருக்கு மட்டுமே டெண்டர்களை ஒதுக்கவைக்கிறார். உதயநிதி மூலமாக அயலக அணியில் பொறுப்புக்கு வந்துள்ள டேவிட் சொல்வதுதான் வெற்றிச் செல்வனுக்கு இப்போது வேதவாக்கு. இவரது பெயரைச் சொல்லி மாநகராட்சி அதிகாரிகளை விரட்டுகிறார் டேவிட். எங்கள் வார்டுக்கே சம்பந்தமில்லாத டேவிட்டை வைத்து எங்களது வார்டில், எங்களுக்கே தெரியாமல் கட்சி நிகழ்ச்சிகளை நடத்தி எங்களை அவமானப்படுத்துகிறார் வெற்றிச்செல்வன்.
வெற்றிச்செல்வன் கோவைக்கு பொறுப்பு மேயராக இருந்த சமயத்தில் ஒரே ஒரு மாமன்றக் கூட்டத்தை நடத்தினார். அந்தக் கூட்டத்தில் ஒரே மூச்சாக 300 தீர்மானங்களை நிறைவேற்றி டெண்டர்களை விட்டு பிரதிபலன் பார்த்தார். தொடர்ச்சியாக அவரால் நாங்கள் அவமானப்படுத்தப்பட்டதால் வட்டச் செயலாளர், தலைவர், ஒரு துணைச் செயலாளர், 3 பிரதிநிதிகள் மற்றும் 7 பூத்லெவல் ஊழியர்கள் எங்களது பொறுப்பை ராஜினாமா செய்து மாவட்டச் செயலாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளோம்” என்றனர் விரக்தியுடன்.
இவர்கள் அளித்த ராஜினாமா கடிதத்தை ஏற்காத கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தொ.அ.ரவி, இருதரப்பையும் சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாகச் சொல்கிறார்கள். இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக துணைமேயர் வெற்றிச்செல்வனிடம் பேசியபோது, “டெண்டர் விவகாரங்களில் எல்லாம் நான் தலையிடுவதில்லை. அதுமட்டுமல்லாமல், டெண்டர்கள் எல்லாம் ஆன்லைன் மூலமாகத் தான் நடக்கிறது. மக்கள் பணிகளை நான் தொய்வின்றி செய்து வருகிறேன்.
மக்கள் பணி செய்யும் பொழுதெல்லாம் இவர்களையும் உடன் அழைத்துச் செல்ல வேண்டும், தகவல் தெரிவிக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். அவர்களது பல லட்சம் கடனை நான் அடைக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். எனது பெயரைச் சொல்லி பொதுமக்களிடம் வசூலிலும் ஈடுபட்டனர். இதையெல்லாம் நான் கண்டித்தது அவர்களுக்கு பிடிக்கவில்லை. திமுக-வினர் யாரும் டெண்டர் எடுக்க வருவதில்லை. அதனால் அவர்கள் சொல்லும் அந்த இருவரும் டெண்டர்களை எடுக்கின்றனர்.
அவர்களும் தற்போது திமுக-வில் தான் உள்ளனர். டேவிட் 15 ஆண்டுகளுக்கு மேலாக திமுக-வில் உள்ளார். அவரை நான் வேலைக்கு வைக்கவில்லை. தீர்மானங்கள் நிறைவேற்றுவது என்பது நான் தன்னிச்சையாக செய்ய முடியாது. கவுன்சிலர்கள், குழு தலைவர்கள், மண்டல தலைவர்கள், ஆணையர் உள்ளிட்டோர் இணைந்து முடிவு செய்வது.
என் மீது குற்றச்சாட்டு கூறுபவர்களின் சட்ட விரோத செயல்களுக்கு நான் துணை போகவில்லை என்பதால் என் மீது அவதூறு பரப்புகின்றனர். தேர்தல் நெருங்குவதால், அதிமுக-வுடன் தொடர்பு வைத்துக்கொண்டு எனக்கு எதிராக அவதூறு பரப்புகின்றனர். கட்சி தலைமையும், பொறுப்பு அமைச்சரும் என்னை நம்பி பொறுப்பை ஒப்படைத்துள்ளனர். அதை நான் திறம்பட செய்து வருகிறேன்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...