Published : 18 Feb 2025 09:03 AM
Last Updated : 18 Feb 2025 09:03 AM
மற்ற மாவட்டங்களில் போலீஸார் அப்படி இப்படி இருந்தாலும் தலைநகர் சென்னையில் பணியாற்றும் போலீஸார் கூடுதல் எச்சரிக்கையுடனும் முன் ஜாக்கிரதையுடனும் இருப்பார்கள். ஏனென்றால், அவர்கள் சின்னதாய் ஒரு தவறு செய்தாலும் உடனடியாக தலைமையிடத்தின் கவனத்துக்கு சென்று அதிரடி நடவடிக்கைக்கு ஆளாவார்கள்.
ஆனால் என்ன ஆனதோ தெரியவில்லை, இப்போது தலைநகர் போலீஸார் தான் வழிப்பறி, பாலியல் துன்புறுத்தல், தகாத உறவு என அனைத்துவிதமான சட்டவிரோத காரியங்களிலும் ஈடுபட்டு கைதாகி காவல்துறையை களங்கப்படுத்தி வருகிறார்கள்.
இதற்கு அண்மை உதாரணம், சென்னை வடக்கு மண்டல போக்குவரத்துக் காவல் இணை ஆணையராக இருந்த மகேஷ் குமார். தனக்குக் கீழ் பணியாற்றும் பெண் காவலரிடம் பாலியல் அத்து மீறலில் ஈடுபட்டதாக இவர் மீது அந்த பெண் காவலரே புகார் கொடுத்தார்.
இந்தப் புகாரின் பேரில் மகேஷ் குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இணை ஆணையர் அந்தஸ்தில் இருந்து கொண்டு இப்படிச் செய்யலாமா என சர்ச்சைகள் வெடித்த நிலையில், “எனது கணவரும் அந்த பெண் காவலரும் இரண்டு ஆண்டுகளாக தொடர்பில் இருந்தனர். தனக்கு வீடுகட்ட 25 லட்சம் பணம் தரவில்லை என்பதற்காக பாலியல் புகார் கொடுத்திருக்கிறார்.
இரண்டு ஆண்டுகள் சம்மதத்துடனே உறவில் இருந்துவிட்டு இப்போது பாலியல் துன்புறுத்தல் என்பது சரியா?” என நியாயம் கேட்டிருக்கிறார் மகேஷ் குமாரின் மனைவி அனுராதா. சீருடைப் பணியில் இருப்பவர்கள் எத்தகைய ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டும் என்பது அனுராதாவுக்கு தெரியுமா என்று தெரியவில்லை.
தெரிந்திருந்தால் கணவரின் தகாத உறவை நியாயப்படுத்துவது போல் பேசி இருக்க மாட்டார். இத்தனைக்கும் இவரும் காவல்துறையில் பணியாற்றியவர்.இதேபோல், சென்னைக்குள் கணிசமாக புழங்கும் ஹவாலா பணத்தையும் காவல் துறையில் இருப்பவர்கள் வழிப்பறி திருடர்கள் கணக்காய் மிரட்டிப் பறித்த சம்பவங்களும் தலைநகர் காவலுக்கு தலைகுனிவை ஏற்படுத்தி இருக்கின்றன.
வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த முகமது கவுஸ் என்பவரிடம் ரூ.20 லட்சத்தை வருமானவரித் துறையினருடன் கைகோத்து போலீஸார் வழிப்பறி செய்த விவகாரம் இதை அம்பலத்துக்குக் கொண்டு வந்தது. இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட திருவல்லிக்கேணி ஸ்டேஷனில் சிறப்பு எஸ்ஐ-யாக பணியாற்றிய ராஜா சிங், வருமான வரித்துறை அதிகாரி தாமோதரன், ஊழியர்கள் பிரதீப், பிரபு ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கு திட்டம்போட்டுக் கொடுத்ததாக சைதாப்பேட்டை சட்டம் - ஒழுங்கு சிறப்பு எஸ்ஐ-யான சன்னி லாய்டுவும் சிறைக்கு அனுப்பப்பட்டார்.
இந்தக் கூட்டணி சென்னையில் பல்வேறு இடங்களில் இதுபோன்று வழிப்பறி செய்ததும், அப்பணத்தை பங்கிட்டு ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்ததும் தெரியவந்தது. இந்தச் சம்பவத்தை அடுத்து இன்னும் யாராவது இது போன்ற காரியங்களில் ஈடுபட்டு வருகிறார்களா என உளவுத் துறையினர் இப்போது உஷாராய் விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய நேர்மையான போலீஸார் சிலர், “மாதச் சம்பளத்தை தவிர அன்பளிப்பைக்கூட பெறுவது கிடையாது. அப்படி இருக்க, இது மாதிரியான வழிப்பறி வேலைகளில் ஈடுபடும் போலீஸாரின் செயல்களால் போலீஸ்னு சொல்லிக்கவே எங்களுக்கு கூச்சமா இருக்கு” என்றார்கள்.
இவை மட்டுமல்ல... சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில், நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்த இளம் பெண்ணிடம் கமலக்கண்ணன் என்ற போலீஸ்காரர் மது போதையில் அத்து மீறி சஸ்பெண்ட் ஆகி இருக்கிறார். “போதை இல்லா தமிழகம் படைப்போம்” எனச் சொல்லிக் கொண்டே இருக்கிறார் தமிழக முதல்வர். ஆனால், போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பில் இருந்ததாக அவரது கட்டுப்பாட்டில் இருக்கும் போலீஸாரே கைதாகி அரசுக்கு சங்கடத்தை உண்டாக்கி வருகிறார்கள். இதெல்லாம் வெளிச்சத்துக்கு வந்த ஒன்றிரண்டு சம்பவங்கள் தான்.
ஆனால் இன்னமும், தெரிந்தும் தெரியாமலும் காவல்துறைக்கு களங்கம் உண்டாக்கும் காரியங்களில் சென்னை காவல் துறையில் இருக்கும் ஒரு சிலர் செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். சீருடை பணியின் சிறப்பை உணர்ந்து அவர்களே திருந்தினால் தான் உண்டு!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...