Published : 18 Feb 2025 05:37 AM
Last Updated : 18 Feb 2025 05:37 AM

நெல்லை, தூத்துக்குடி, குமரியில் நடந்த தாது மணல் கொள்ளை வழக்கு சிபிஐ-க்கு மாற்றம்: வழக்கின் பின்னணி என்ன?

பிரதிநிதித்துவப் படம்

நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் நடைபெற்ற தாது மணல் கொள்ளை விவகாரம் தொடர்பாக சிபிஐ, அமலாக்கத் துறை, வருமானவரித் துறை, சுங்கத்துறை கூட்டாக விசாரிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் சட்டவிரோதமாக தாது மணல் அள்ளிய தனியார் நிறுவனங்களிடமிருந்து ரூ. 5,832 கோடியை ராயல்டி இழப்பீடாக தமிழக அரசு வசூலிக்கவும் அறிவுறுத்தியுள்ளனர்.

கடந்த 2000 முதல் 2016 வரையிலான காலகட்டத்தில் நெல்லை, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட கடலோரப் பகுதிகளில் உள்ள தாது மணலை வி.வி.மினரல்ஸ், டிரான்ஸ்வேர்ல்டு கார்னெட், பீச் மினரல்ஸ், இன்டஸ்ட்ரியல் மினரல்ஸ் உள்ளிட்ட பல நிறுவனங்கள் சட்டவிரோதமாக எடுத்து வெளிநாடுகளுக்கு கடத்துவதாக கடந்த 2015-ல் தஞ்சாவூரைச் சேர்ந்த விக்டர் ராஜமாணிக்கம் என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். பி்ன்னர் இந்த வழக்கை உயர் நீதிமன்றமே தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரணை மேற்கொண்டது.

இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், எம்.ஜோதிராமன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடைபெற்றது. அப்போது தமிழக அரசின் தரப்பு வழக்கறிஞர் அரவிந்த் தத்தார் தாக்கல் செய்த பதில் மனு: இந்த 3 மாவட்டங்களிலும் தாது மணல் அள்ள கடந்த 2013-ல் தடை விதிக்கப்பட்ட பிறகும், அதற்கு முன்பாகவும் கடத்தப்பட்ட தாது மணல் மூலமாக அரசுக்கு ரூ.5,832 கோடியே 44 லட்சத்து 23,835-ஐ ராயல்டி இழப்பீடாக தனியார் நிறுவனங்களிடமிருந்து வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த மாவட்டங்களில் 234 ஹெக்டேர் பரப்பில் ஒரு கோடியே ஒரு லட்சம் மெட்ரிக் டன் தாது மணல் சட்டவிரோதமாக அனுப்பி வைக்கப்பட்டதும் ஒரு கோடியே 50 லட்சம் மெட்ரிக் டன் இருப்பில் உள்ளதும் தெரியவந்தது. அதையடுத்து அவற்றை பறிமுதல் செய்து ஒரு கோடியே 50 லட்சம் மெட்ரிக் டன் தாது மணல் மத்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கடந்த 2021-ல் அரசின் பாதுகாப்பில் இருந்த தாது மணலை கடத்திய தனியார் நிறுவனங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, தற்போது 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் நேற்று பிறப்பித்துள்ள விரிவான உத்தரவு: இந்த தாதுக்கள் நாட்டின் பாதுகாப்புடன் தொடர்புடையவை. உலகிலேயே பிரேசில், துருக்கிக்கு அடுத்தபடியாக தோரியம் மிகுதியாக உள்ள நாடு இந்தியா. தமிழகம் மோனோசைட் - தோரியம் உற்பத்தி களஞ்சியமாக உள்ளது. நாட்டின் இயற்கை வளத்தை சட்டவிரோதமாக ஏற்றுமதி செய்ய அனுமதியளித்த கனிமவளத்துறை, சுங்கத்துறை, சுற்றுச்சூழலியல் துறை, பாதுகாப்புத்துறை, சம்பந்தப்பட்ட மத்திய, மாநில அரசு அதிகாரிகள் மீது துறைரீதியாகவும், குற்றவியல் ரீதியாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த தாது மணல் மாபியா கும்பல் குறித்தும், முறைகேடுகள் குறித்தும், அரசியல் தொடர்புகள் குறித்தும் தீர விசாரி்ப்பதற்காக இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிடுகிறோம். வழக்கு ஆவணங்களை 4 வாரங்களில் தமிழக அரசு சிபிஐ-யிடம் ஒப்படைக்க வேண்டும். விசாரணையை சிபிஐ இயக்குநர் நேரடியாக கண்காணிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் வணிக பரிவர்த்தனைகளையும் மத்திய அரசு ஆய்வு செய்ய வேண்டும்.

சிபிஐ மட்டுமின்றி அமலாக்கத் துறை, வருமானவரித் துறை, சுங்கம் மற்றும் கலால்துறை, வணிகவரித் துறை அதிகாரிகளும் கூட்டாக விசாரிக்க வேண்டும். இதில் தனியார் நிறுவனங்கள் மட்டுமின்றி இந்த கொள்ளைக்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பறிமுதல் செய்யப்பட்ட ஒரு கோடியே 40 லட்சம் மெட்ரிக் டன் தாது மணலை மத்திய அரசின் இந்தியன் ரேர் எர்த் லிமிட்டெட் நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும். சட்டவிரோத தாது மணல் கொள்ளை மூலமாக அரசுக்கு ஏற்பட்ட ரூ. 5,832 கோடியை சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடமிருந்து வசூலிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x