Published : 18 Feb 2025 12:44 AM
Last Updated : 18 Feb 2025 12:44 AM
சென்னை: போக்சோ வழக்குகளில் தண்டனை பெற்ற ஆசிரியர்களின் சான்றிதழ்கள் ரத்து செய்யப்படும். புதிய ஆசிரியர்கள் நியமனத்துக்கு காவல் துறை சரிபார்ப்பு சான்று பெறுவது கட்டாயமாக்கப்படும் என்று தலைமைச் செயலர் முருகானந்தம் அறிவித்துள்ளார்.
கல்வி நிறுவனங்களில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நடைபெறாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று உயர்நிலை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தலைமைச் செயலர் நா.முருகானந்தம் தலைமை வகித்தார். இதில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள், உயர் கல்வி நிறுவனங்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. அதன் விவரம்: கல்வி நிறுவனங்களில் குழந்
தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது துறைரீதியிலான ஒழுங்கு நடவடிக்கை மற்றும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். போக்சோ வழக்குகளில் தண்டனை பெற்ற ஆசிரியர்கள், பணியாளர்களின் பள்ளி, உயர்கல்வி சான்றிதழ்கள் ரத்து செய்யப்படும். புதிய ஆசிரியர்கள் நியமனத்துக்கு காவல் துறை சரிபார்ப்பு சான்று பெறுவது கட்டாயமாக்கப்படும். பணியாளர்கள் அனைவரும் ‘குழந்தை பாதுகாப்பு உறுதிமொழி’ ஆவணத்தில் கையெழுத்திடுவது கட்டாயமாகும்.
அனைத்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ‘சுய பாதுகாப்பு கல்வி’ அளிக்கப்பட வேண்டும். ஆசிரியர் பட்டய மற்றும் பட்டப்படிப்பு பாடத்திட்டங்களில் குழந்தைகளுக்கு நடக்கும் பாலியல் வன்கொடுமைகளை தடுப்பது குறித்த பாடம் சேர்க்கப்படும். போக்சோ வழக்குகள் தொடர்பான அனைத்து விவரங்களை தொகுக்கவும், கண்காணிக்கவும் தொடர்பு அலுவலர் நியமிக்கப்பட வேண்டும். மாணவிகள் பயணம் செய்யும் பள்ளி வாகனங்களில் பெண் உதவியாளர்கள் பணியமர்த்தப்பட வேண்டும்.
இருபாலர்கள் மற்றும் பெண்கள் பள்ளிகளில் உடற்கல்வி பணியிடங்களில் ஆசிரியைகளை நியமனம் செய்யவேண்டும். விளையாட்டு போட்டிகள், கலை நிகழ்ச்சிகள், கல்வி சுற்றுலா போன்றவற்றுக்கு மாணவிகளை ஆசிரியைகளே அழைத்துச் செல்ல வேண்டும். கல்வி நிறுவனங்களுக்கு வெளியே முகாம்களில் தங்கும்பட்சத்தில் மாணவிகளுடன் ஆசிரியைகள் மட்டுமே தங்குவதை உறுதி செய்யவேண்டும்.
மாணவியர் விடுதிக்குள் வெளிநபர்கள் அனுமதிக்கப்பட கூடாது.விடுதி பராமரிப்பு பணி, பெண் காப்பாளர்கள் மேற்பார்வையில் மட்டுமே மேற்கொள்ளப்படவேண்டும். அனைத்து கல்வி நிறுவனங்களிலும் ‘1098’ மற்றும் ‘14417’ ஆகிய உதவி எண்கள் அடங்கிய விழிப்புணர்வு பதாகைகள் அமைக்கப்பட வேண்டும். அனைத்து பள்ளிகளிலும் ‘மாணவர் மனசு புகார் பெட்டி’ மற்றும் முக்கியமான இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அமைப்பதை உறுதிசெய்ய வேண்டும்.
பாலியல் குற்றங்கள் பற்றி தெரியவந்தால், சம்பந்தப்பட்டபள்ளியின் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் உடனடியாக காவல் துறைக்கு புகார் அளித்து, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலருக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும். புகார் அளிக்கும் மாணவிகளின் பெயர் விவரம் எக்காரணம் கொண்டும் வெளிவரக் கூடாது.
இந்த அனைத்து பரிந்துரைகளையும் அரசு மற்றும் தனியார் பள்ளிகள், உயர் கல்வி நிறுவனங்கள் கண்டிப்பாக பின்பற்றுவதை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உறுதிசெய்ய வேண்டும். இவ்வாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...