Published : 18 Feb 2025 12:28 AM
Last Updated : 18 Feb 2025 12:28 AM

நடிகை விஜயலட்சுமி புகாரின்பேரில் பதிந்த பாலியல் வழக்கை ரத்து செய்ய கோரி சீமான் தாக்கல் செய்த மனு தள்ளுபடி

தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரின்பேரில் பதியப்பட்ட பாலியல் வழக்கை ரத்து செய்யக்கோரி சீமான் தாக்கல் செய்திருந்த மனுவை தள்ளுபடி செய்துள்ள உயர் நீதிமன்றம், இந்த வழக்கில் 12 வாரத்துக்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய போலீஸாருக்கு உத்தரவிட்டுள்ளது.

தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் ஏமாற்றிவிட்டதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி வளசரவாக்கம் காவல் நிலையத்தில் கடந்த 2011-ம் ஆண்டு புகார் அளி்த்திருந்தார். அதையடுத்து போலீஸார் சீமானுக்கு எதிராக பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சீமான் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், நடிகை விஜயலட்சுமி தனக்கு எதிராக கடந்த 2011-ம் ஆண்டு அளித்த பாலியல் புகாரை 2012-ல் திரும்பப்பெறுவதாக எழுதிக் கொடுத்த கடிதத்தின் அடிப்படையில் போலீஸார் அந்த வழக்கை முடித்து வைத்தனர். ஆனால் தற்போது அரசியல் காரணங்களுக்காக அந்த வழக்கை போலீஸார் மீண்டும் விசாரித்து வருகின்றனர். எனவே விஜயலட்சுமி அளித்த புகாரின்பேரில் பதியப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரியிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பாக நடந்தது. சீமான் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜான் சத்யன் வாதிடும்போது, சிலரது தூண்டுதல் காரணமாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் பதியப்பட்ட இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என கோரினார். காவல்துறை தரப்பில் ஆஜரான குற்றவியல் வழக்கறிஞர் கே.எம்.டி.முகிலன், ‘‘நடிகை விஜயலட்சுமியும், சீமானும் கடந்த 2008-ம் ஆண்டு மதுரை மீனாட்சியம்மன் கோயில் வெளிப்பிரகாரத்தில் மாலை மாற்றிக் கொண்டுள்ளனர். ஆனால் தாலி கட்டவில்லை. தன்னை திருமணம் செய்து கொள்வதாக சீமான் கூறியதன் காரணமாகவே விஜயலட்சுமி, சீமானுடன் நெருங்கிப்பழகியுள்ளார். பின்னர் அவர் அளித்த பாலியல் புகாரை சிலர் அளித்த நிர்பந்தம் காரணமாகவே திரும்பப்பெற்றார். அவராகவே மனமுவந்து வாபஸ் பெறவில்லை. எனவே சீமானுக்கு எதிரான இந்த பாலியல் வழக்கை ரத்து செய்யக்கூடாது" என வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜி.கே.இளந்திரையன், ‘‘அப்படியென்றால் நடிகை விஜயலட்சுமி சீமானுக்கு முதல் மனைவியா" என கேள்வி எழுப்பினார். பின்னர், "இந்த வழக்கை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. விஜயலட்சுமி புகாரை திரும்பப் பெற்றாலும்கூட பாலியல் துன்புறுத்தல் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பதால், இந்த வழக்கை ரத்து செய்ய முடியாது. இந்த வழக்கில் போலீஸார் 12 வார காலத்துக்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்" என உத்தரவிட்டு சீமான் தாக்கல் செய்திருந்த மனுவை தள்ளுபடி செய்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x