Published : 17 Feb 2025 06:48 AM
Last Updated : 17 Feb 2025 06:48 AM
புதுடெல்லி: காசி தமிழ் சங்கமங்களால் இந்தி மொழி பேசுபவர்களிடம் தமிழர் பெருமை பல மடங்கு உயர்ந்திருப்பதாக வாராணசி மாவட்ட ஆட்சியர் தமிழர் எஸ்.ராஜலிங்கம் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியின் மக்களவை தொகுதியில் முக்கிய நிர்வாகப் பணியாற்றும் தென்காசி மாவட்டத் தமிழரான அவர், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழுக்கு அளித்த பேட்டி:
மகா கும்பமேளாவால் வாராணசியிலும் குவியும் கூட்டத்தை எப்படி சமாளிக்கிறீர்கள்?
மகா கும்பமேளாவில் வசந்த பஞ்சமிக்கு பிறகு பெரும்பாலான அகாடா துறவிகள் வாராணசிக்கு இடம்பெயர்வார்கள். இதனால், முன்கூட்டியே போக்குவரத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்துள்ளோம். அன்றாடம் காலை, மாலை நடைபெறும் கங்கை ஆரத்தி நிகழ்ச்சியை அனைத்து கரைகளிலும் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளோம். பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து, வகுப்புகளை இணைய வழிமூலம் நடைபெற செய்துள்ளோம். உள்ளூர் போக்குவரத்துகளை அதிகப்படுத்தி உள்ளோம். காசி விஸ்வநாதர் கோயிலிலும் பூஜை காலத்தில் சிறு மாற்றம் செய்து, பொதுமக்கள் தரிசன நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற மாற்றங்களால்கூட்டத்தை இன்று வரை சமாளித்து வருகிறோம்.
கடந்த ஜனவரி 1 முதல் செயலாளர் பணிக்கு பதவி உயர்வு கிடைத்தும், மகா கும்பமேளா மற்றும் கேடிஎஸ் 3.0 நிகழ்ச்சிகளால் இன்னும் ஆட்சியராகவே தொடர்வதை எப்படி உணர்கிறீர்கள்?
அரசு அதிகாரியான பிறகு பொதுமக்களுக்கான பணிதான் முதலில் முக்கியம். எனவே, என்ன பதவியில் இருக்கிறோம் என்பதை விட மக்களுக்காக எந்த அளவுக்கு பயனாக உள்ளோம் என்பதுதான் முக்கியம். ஒரு தமிழனாக என்னை பொறுத்த வரை இந்த 2 நிகழ்ச்சிகளிலும் பணி செய்யும் வாய்ப்பு கிடைத்ததை பாக்கியமாக கருதுகிறேன்.
காசி தமிழ் சங்கமங்களால் வாராணசிக்கும் தமிழகத்துக்கும் என்ன பலன்?
தமிழகத்துக்கும் இதர வெளிநாடு, உள்நாடு போன்ற பல பகுதிகளுக்கும் பண்டைய காலம் முதல்பல்வேறு விதமான தொடர்புகள் உள்ளன. இதில், வாராணசியுடனான தொடர்பு இந்த சங்கமங்க ளின் மூலம் மீட்டெடுக்கப்பட்டுள்ளது. இவ்விரு பகுதிகளுக்கான கலாச்சாரம், இலக்கியம், மொழி, பண்பாடு உள்ளிட்ட தொடர்புகள் குறித்த ஆய்வுகள் அதிகரித்துள்ளன. இதன்மூலம், தமிழகத்தின் தமிழர்கள் பெருமையை வட இந்தியர்கள் உணர்ந்து வருகின்றனர். செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் சார்பில் ஒவ்வொரு சங்கமத்திலும் பல எண்ணிக்கையில் இந்தி உள்ளிட்ட மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியிடப்படுகின்றன. இதன்மூலம், தமிழர்களின் பெருமை இந்தி உள்ளிட்ட இதர மொழி பேசுபவர்கள் இடையே பல மடங்கு உயர்ந்துள்ளது. சங்கமங்களால் வாராணசிக்கு தமிழர்கள் வருகை பல லட்சங்களில் அதிகரித்துள்ளது.
பிரதமரின் வாராணசி மக்களவை தொகுதி வளர்ச்சி எப்படி உள்ளது?
எந்த மாநிலத்திலும் காண முடியாத அதிகவேக வளர்ச்சி வாராணசியில் உள்ளது. இங்கு 2023-ம் ஆண்டு 70 நாடுகளின் தூதர்கள் வந்தனர். சர்வதேச அளவிலான ஜி20 மாநாடுகளில், இந்தியாவிலே மிக அதிகமாக இங்கு 7 மாநாடுகள் நடைபெற்றன. இவைவாராணசிக்கு சர்வதேச அளவில் புகழை ஈட்டி தந்துள்ளது. வாராணசி நெரிசலான புனித நகரம் என்பதால் மெட்ரோ ரயில் அமைக்கும் சாத்தியங்கள் குறைவு. இதனால், இந்தியாவிலேயே முதல் நகரமாக ‘ரோப் வே கார்’ எனும் வான்வழியே செல்லும் மின்சார வாகனம் இங்கு விரைவில் ரூ.645 கோடியில் அமைகிறது. ரயில் நிலையங்களில் இறங்குபவர்கள் நேராக காசி விஸ்வநாதர் கோயிலுக்கு சென்று தரிசிக்கலாம். இதுவரை ரூ.50,000 கோடி வரையிலான திட்டங்கள் பிரதமரால் அவரது தொகுதியில் அமலாகி உள்ளது. இன்னும் பல ஆயிரம் கோடிகளில் பல திட்டங்கள் எந்நேரமும் அறிவிக்கும் வாய்ப்புகள் உள்ளன.
ஆன்மிகம், ஐதீகம் எனும் பெயரில் அசுத்தமாக்கப்பட்டு வந்த கங்கையை தூய்மைப்படுத்த எம்.பி.யான பின்னர் பிரதமர் எடுத்த நடவடிக்கைகள் என்ன?
பிரதமர் இங்கு எம்.பி.யானது முதல் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு அசுத்தமாக்கும் செயல்கள் நின்றுள்ளன. நவராத்திரி விழாக்களின் போது கங்கையில் சிலைகளை கரைக்க தடை உள்ளது. தற்காலிக குளங்களை உருவாக்கி அதில் சிலைகளை கரைக்க ஏற்பாடு செய்துள்ளோம். இதற்கு பொதுமக்கள் ஒத்துழைக்கின்றனர். கங்கையின் 84 படித்துறைகளையும் தாண்டி தொடரும் கரைகளை அங்கு வசிக்கும் கிராமவாசிகளை வைத்து சுத்தமாக பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் பலனாக பல ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை போல் சமீப ஆண்டுகளாக ‘கங்கா டால்பின்’ எனும் நீர் உயிரினம் மீண்டும் அதிக எண்ணிக்கையில் வரத் தொடங்கி விட்டன. பார்வையற்ற இந்த டால்பின் சுத்தமான நீரில் அதிகமாக வாழும் எனக் கருதப்படுகிறது. உ.பி. அரசின் நமாமி கங்கை எனும் நதிநீர் சுத்திகரிப்பு திட்டம் முழுவீச்சில் நடைபெறுகிறது. இங்குள்ள ராம்நகரில் கொல்கத்தா வழியாக கங்கையில் சரக்குகள் அனுப்ப கங்கை கரையில் ஒரு மினி துறைமுகமும் செயல்படுகிறது.
முதல் சங்கமம் 2002-ம் ஆண்டு நடந்த போது காசி விஸ்வநாதர் கோயிலில் தேவாரம் ஓதும் முயற்சி எந்த நிலையில் உள்ளது?
காசி விஸ்வநாதர் கோயில் அறக்கட்டளை நிர்வாகக் குழுவில் நானும் இடம்பெற்றிருப்பதால், தேவாரம் ஓத அனுமதி அளித்தாகி விட்டது. இதை கோயிலில் ஓதுவாரை நியமித்து பாட வைக்க தமிழகத்தில் இருந்து யாரும் முன்வரவில்லை. இதற்கு வேறு அமைப்புகள் ஏற்பாடு செய்ய முன்வந்தால் உடனடியாக தேவாரம் ஓதுவது தொடங்கப்படும்.இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ராஜலிங்கம் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...