Published : 16 Feb 2025 01:28 PM
Last Updated : 16 Feb 2025 01:28 PM
அவிநாசி: “பல மொழி இனத்தை அழித்து ஒரே தேசமாக கட்டமைக்க முயற்சி நடக்கிறது. இந்தியாவின் 22 மொழிகளும் ஆட்சி மொழியாக இருந்தால்தான் என்ன?. அதிகாரத்தை வைத்துக் கொண்டு ஆடாதீர்கள்” என்று மும்மொழிக் கொள்கை தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
முன்னதாக மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், “தேசிய கல்விக் கொள்கையை ஏற்க தமிழக அரசு மறுக்கிறது. அதனால் விதிமுறைகளின்படி எங்களால் நிதி ஒதுக்க முடியாது. தேசியக் கல்விக் கொள்கையில் மும்மொழி திட்டம் உள்ளது. அதையேற்று தமிழ், ஆங்கிலத்துடன், கன்னடம் உட்பட ஏதேனும் ஒரு இந்திய மொழியை கற்பதில் என்ன தவறு உள்ளது. தேசிய கல்விக் கொள்கை உள்ளூர் மொழிக்கே முக்கியத்துவம் தருகிறது. தேசியக் கல்விக் கொள்கையை ஏற்கும் வரை விதிகளின்படி தமிழகத்துகு நிதி ஒதுக்க முடியாது.” எனக் கூறியிருந்தார்.
அவரின் இந்தக் கருத்துக்கு தமிழக முதல்வர், துணை முதல்வர், அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது எதிர்வினையை ஆற்றி வருகின்றனர்.
இந்நிலையில், நாம் தமிழர் கட்சி சார்பில் 2026 சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்வது தொடர்பான கலந்தாய்வு கூட்டம் அவிநாசியில் இன்று( பிப்.16) நடந்தது. இதில் பங்கேற்ற நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் மும்மொழிக் கொள்கை பற்றி கூறியதாவது: இந்தியா ஒரே தேசியம் அல்ல. அது பல தேசங்களின் ஒன்றியம். பல மொழி பேசும், பல்வேறு இன மக்கள் வாழும் இந்த நாட்டில் ஒவ்வொரு மொழிக்கும் கலை, கலாச்சாரம், மொழி, வழிபாடு வெவ்வேறாக உள்ளது. தமிழகத்துக்குள்ளும் பல்வேறு சாதி, குடி கட்டமைப்புகள் உள்ளன.
அனைத்து மக்களின் மொழி வழி தேசியத்துக்கும், முன்னுரிமை தரப்பட வேண்டும். அனைத்து மாநிலங்களுக்கும் முன்னுரிமை தரப்பட வேண்டும் என அம்பேத்கர் சொல்லியிருக்கிறார். மும்மொழிக் கொள்கையில் என்ன இருக்கிறது?
புதிய கல்விக் கொள்கை கட்டாயமாக இந்தி மொழியைக் கற்கச் சொல்கிறது. பிரதமருக்கும், அமைச்சர்களுக்கும் தேர்வு வைத்து தேர்வு செய்யப்பட வேண்டும் என்றால் அதை ஏற்றுக் கொள்வார்களா.?
பல மொழி இனத்தை அழித்து ஒரே தேசமாக கட்டமைக்க முயற்சி நடக்கிறது. இந்தியாவில் 22 மொழிகள் ஆட்சி மொழியாக இருந்தால் என்ன? வரியை மட்டும் பெற்றுக் கொள்கின்றனர்? ஆனால் அங்கிருந்து கடிதம் அனுப்பும்போது இந்தியில் அனுப்புகின்றனர்? அவ்வளவு ரோஷம் இருப்பவர்கள் தமிழ்நாட்டின் வரியை ஏன் பெறுகிறீர்கள்? கட்டாயமாக இந்தியை படிக்கச் சொல்வது சரியல்ல.
எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கே மனமுதிர்ச்சி இல்லை. நீட் தேர்வு அச்சத்தில் உயிரிழக்கின்றனர். இந்த நிலையில் 3, 5 மற்றும் 8-ம் வகுப்புகளில் பொதுத் தேர்வு கொண்டு வருவது எப்படி ஏற்க முடியும். இவ்வாறு அவர் பேசினார்.
விகடன் இணையதளம் முடக்கம் தொடர்பான கேள்விக்குப் பதிலளித்த சீமான், “ட்ரம்ப் இந்தியர்களை வெளியேற்றி வருகிறார். இந்தியாவின் முதன்மை பொறுப்பில் உள்ள மோடி, அவரது நாட்டு குடிகளை விலங்கிட்டு திருப்பி அனுப்பியது மோடிக்கு இட்ட விலங்காக தான் பார்க்க வேண்டும். அதை குறியீடாக வைத்து கருத்துப் படத்தை விகடன் வெளியிட்டது. அதையே தாங்க முடியவில்லை. இந்த நாட்டு குடிமக்களை வலுக்கட்டாயமாக கைவிலங்கு போட்டு திருப்பி அனுப்பியதை விடவா இது அசிங்கமாகப் போய்விட்டது.
அண்ணாமலை விகடனை எச்சரித்ததாக சொல்கிறார்கள். அவர் ட்ரம்பை எச்சரிக்க வேண்டியது தானே!. நாங்களும் அண்ணாமலையை எச்சரிக்கின்றோம். அதிகாரத்தை வைத்துக்கொண்டு ஆடாதீர்கள் என எச்சரிக்கின்றோம். நாற்காலி நிரந்தரமானது அல்ல. மேலே இருப்பது கீழே வரும். கீழே இருப்பது மேலே வரும். வரலாறு, காலச்சக்கரம் சுழன்று கொண்டே இருக்கும். இது ஜனநாயக நாட்டுக்கு நல்லதல்ல.” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment