Published : 16 Feb 2025 12:16 PM
Last Updated : 16 Feb 2025 12:16 PM
புதுடெல்லி: சுற்றுச்சூழல் அனுமதியின்றி கட்டுமானங்களைக் கட்டியுள்ளதாக ஈஷா யோகா மையத்துக்கு எதிராக 2 ஆண்டுகள் கழித்து, தமிழக அரசு மேல்முறையீடு செய்திருப்பது ஏன் என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
கோவை வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் அமைந்துள்ள ஈஷா யோகா மையத்தில் சுற்றுச்சூழல் துறையின் அனுமதியன்றி கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளதாகக் கூறி, தமிழக அரசின் மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுப்பிய நோட்டீஸை சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 2022 டிசம்பரில் ரத்து செய்து உத்தரவிட்டது.
இதை எதிர்த்து தமிழக அரசு, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் சூர்யகாந்த், என்.கே.சிங் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது ஈஷா யோகா மையம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹ்தகி, “ஈஷா யோகா மையத்தில் உள்ளாட்சி அமைப்புகளிடமிருந்து அனைத்து அனுமதிகளும் முறையாகப் பெறப்பட்டுள்ளன.
அதேநேரம், சுற்றுச்சூழல் அனுமதி பெறவில்லை என அனுப்பப்பட்ட நோட்டீஸை சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கெனவே ரத்து செய்துவிட்டது. கல்வி நிலையங்களுக்கு சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதால், யோகா கற்றுக்கொடுக்கும் ஈஷா மையத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை. தற்போது தமிழக அரசு வேறு ஏதோ காரணங்களுக்காக இந்த மேல் முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளது” என்றார்.
சந்தேகத்தை எழுப்புகிறது: அப்போது நீதிபதிகள் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞரான பி.எஸ்.ராமனிடம். “தமிழக அரசு 2 ஆண்டுகள் கழித்து இந்த மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்திருப்பதன் நோக்கம் என்ன, உரிய நேரத்தில் உச்ச நீதிமன்றத்தை அணுகாதது ஏன். அரசின் இந்த செயல்பாடுகள் சந்தேகத்தை எழுப்புகிறது. கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் முறையாக செயல்படவில்லை எனக்கூறி மாசு கட்டுப்பாட்டு வாரியம் நோட்டீஸ் பிறப்பித்து இருப்பது உரிய காரணமாக தெரியவில்லை. சுற்றுச்சூழல் விதிமுறைகளுக்கு உட்பட்டு அங்கு கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்ய தமிழக அரசுக்கு எந்த தடையும் இல்லை.
அதேநேரம் தற்போது அங்கு சின்னதாக குடில் அமைக்கப்படவில்லை. லட்சக்கணக்கான சதுர அடியில் உங்கள் கண்முன்பாகவே கட்டிடங்கள் எழுப்பப்பட்டுள்ளன. தற்போது அதை இடிக்க வேண்டுமென்றால் அதை எப்படி அனுமதிப்பது, யோகா என்பது கல்வி மையம் இல்லையா, அங் குள்ள கட்டுமானங்கள் மனிதர் களுக்கு அபாயம் விளைவிக்கக் கூடியது என நீங்கள் கூறவில்லை.
மாறாக அங்கு சுற்றுச் சூழலைப் பேண இயற்கையான ஒளி, காற்று, பசுமைவெளி இருக்கிறதா என்றும், கழிவுநீர் மையம் முறையாக செயல்படுகிறதா என்பதை அதிகாரிகள் உறுதி செய்திருக்க வேண்டும்” என்றனர்.
அதற்கு தமிழக அரசின் தலைமை வழக்கறிஞரான பி.எஸ்.ராமன், “இரு துறைகளுக்கிடையே நிலவிய குழப்பம் காரணமாக மேல்முறையீடு செய்ய காலதாமதம் ஆனது. கடந்த 2012-ம் ஆண்டு ஈஷா யோகா மையத்துக்கு சுற்றுச்சூழல் துறையின் தடையில்லா சான்று பெற வேண்டும் என்ற நிபந்தனையுடன்தான் கட்டுமானங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அதன் பிறகு அவர்கள் கல்வி மையம் எனக்கூறி விலக்கு கோருகின்றனர்” என்றார்.
அப்போது ஈஷா யோகா மையம் தரப்பு மூத்த வழக்கறிஞரான முகுல் ரோஹ்தகி, "நாட்டிலேயே மிகச்சிறந்த யோகா மையமான இங்கு தற்போது 20 சதவீத இடத்தில் மட்டுமே கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மீதமுள்ள 80 சதவீதம் பசுமை வெளியாக விடப்பட்டுள்ளது. பிப்.26 அன்று மாசி மகா சிவராத்திரி விழா ஈஷா யோகா மையத்தில் நடைபெறவிருப்பதால் அதன்பிறகு இந்த வழக்கை விசாரிக்க வேண்டும்” என்றார்.
அதையடுத்து நீதிபதிகள் இந்த வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளிவைத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...