Published : 16 Feb 2025 12:05 PM
Last Updated : 16 Feb 2025 12:05 PM
சென்னை: மத்திய பாஜக அரசு இந்தி, சமஸ்கிருத மொழிகளைத் திணிப்பதற்கு தேசியக் கல்விக் கொள்கையை ஒரு கருவியாக பயன்படுத்தி, மாநில அரசுகளின் கல்வி உரிமையை நசுக்க நினைப்பதை ஒரு போதும் ஏற்க முடியாது. மத்திய கல்வித்துறை அமைச்சகம் உடனடியாக தமிழ்நாட்டுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் ஒதுக்க வேண்டிய நிதியை விடுவிக்க வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்திய அரசின் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின்கீழ் (எஸ்எஸ்ஏ) மாநில அரசுகளுக்கு நிதி உதவி வழங்கப்படுகிறது. இத் திட்டத்தின் கீழ் 2023-24 கல்வியாண்டின் 4-ஆம் தவணை நிதி ரூ.249 கோடியும், 2024-25 கல்வியாண்டின் நிதி ரூ.2,152 கோடியும் ஆக மொத்தம் 2401 கோடி ரூபாய் மத்திய அரசால் இன்னும் விடுவிக்கப்படாததால் தமிழக அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
தமிழக பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் வளர்ச்சிப் பணிகள் சார்ந்த பல்வேறு திட்டங்களுக்கு மத்திய அரசின் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின்கீழ் (எஸ்எஸ்ஏ) வழங்கப்படும் நிதியுதவி பயன்பட்டு வருகிறது.
இத்திட்டத்தை செயல்படுத்துவதற்காக ஆண்டுதோறும் மத்திய அரசு 60 விழுக்காடு, மாநில அரசு 40 விழுக்காடு என்ற பகிர்வு முறையில் நிதி ஒதுக்கப்படுகிறது.
இந்தத் திட்டத்திற்கான பலனைப் பெற வேண்டும் என்றால் மத்திய அரசுடன் ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும். அதன்பிறகு தேர்வு செய்யப்படும் பள்ளிகள் மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குச் செல்லும். ஆனால் இந்தத் திட்டத்தில் இணையத் தமிழ்நாடு, கேரளா, டெல்லி, பஞ்சாப், மேற்கு வங்கம் விருப்பம் தெரிவிக்கவில்லை. இதையடுத்து சமக்ரா சிக்ஷா அபியான் (எஸ்.எஸ்.ஏ) திட்டத்திற்கு அனுப்ப வேண்டிய நிதியை மத்திய கல்வி அமைச்சகம் நிறுத்தியுள்ளது.
இந்நிலையில், மத்திய அரசின் கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானிடம் வாரணாசியில் நேற்று செய்தியாளர்கள் , தமிழகத்துக்கு எஸ்எஸ்ஏ நிதி ஒதுக்காதது தொடர்பாக கேட்டபோது, “தேசிய கல்விக் கொள்கையை ஏற்க தமிழக அரசு மறுக்கிறது. அதனால் விதிமுறைகளின்படி எங்களால் நிதி ஒதுக்க முடியாது. இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்கள் தேசியக் கல்விக் கொள்கையை ஏற்கும்போது தமிழகம் மட்டும் அதற்கு மறுப்பு தெரிவிப்பது சரியானதல்ல.
தேசியக் கல்விக் கொள்கையை ஏற்கும் வரை விதிகளின்படி தமிழகத்துகு நிதி ஒதுக்க முடியாது” என்று ஆணவமாக தெரிவித்திருப்பது கண்டனத்துக்குரியது.
தேசியக் கல்விக் கொள்கையில் முன்மொழித் திட்டத்தை மத்திய அரசு திணிப்பதால் தமிழ்நாடு கடுமையாக எதிர்த்து வருகிறது.
அண்ணாவால் கொண்டுவரப்பட்ட இரு மொழித் திட்டம் தான் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மத்திய பாஜக அரசு இந்தி, சமஸ்கிருத மொழிகளைத் திணிப்பதற்கு தேசியக் கல்விக் கொள்கையை ஒரு கருவியாக பயன்படுத்தி, மாநில அரசுகளின் கல்வி உரிமையை நசுக்க நினைப்பதை ஒரு போதும் ஏற்க முடியாது. மத்திய கல்வித்துறை அமைச்சகம் உடனடியாக தமிழ்நாட்டுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் ஒதுக்க வேண்டிய நிதியை விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...