Published : 15 Feb 2025 06:27 PM
Last Updated : 15 Feb 2025 06:27 PM
கோவை: “இந்தியா பெரிய பொருளாதார நாடுகள் பட்டியலில் 2-ம் இடத்துக்கு முன்னேற பாகிஸ்தான், இலங்கை, மாலத்தீவு போன்ற நாடுகளுடன் நட்புறவு கொண்டிருத்தல் அவசியம்” என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
‘ரோட்டரி மாவட்டம் 3201’ சார்பில் மாவட்ட அளவிலான இரண்டு நாட்கள் கருத்தரங்கு ‘ப்ளாசம்’ என்ற பெயரில் கோவை - பொள்ளாச்சி சாலையில் அமைந்துள்ள ரத்தினம் தொழில்நுட்ப பூங்கா வளாகத்தில் இன்று (பிப்.15) தொடங்கியது. இதில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியது: “உலகம் முழுவதும் கடந்த பல்வேறு ஆண்டுகளாக ரோட்டரி அமைப்புகள் சிறந்த பணிகளை மேற்கொண்டு வருகின்றன.
குறிப்பாக இதில் உள்ளவர்கள் உலகத்தை வாழ்வதற்கு சிறந்த இடமாக மாற்ற பல்வேறு முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இன்று உலகின் மொத்த இருப்பில் 58 சதவீதம் டாலரில் வைக்கப்பட்டுள்ளது. 1944 உலக வங்கி தொடங்கப்பட்டது. டாலர் முக்கிய மதிப்பாக நிர்ணயிக்கப்பட்டது. ஐக்கிய அரபிய நாடுகள் பெட்ரோலியப் பொருட்களை அதிகம் வர்த்தகம் செய்ய தொடங்கிய நிலையில் அனைத்தும் டாலரில் மேற்கொள்ளப்பட்டன. இதனால் அமெரிக்கா, டாலர் மிக அதிகளவில் அச்சிட்டது.
அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பொறுப்பேற்ற உடன் அரபு நாடுகளுக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். 600 பில்லியன் டாலர் மதிப்பில் அமெரிக்காவில் முதலீடுகள் செய்யப்படும் என வாக்குறுதியைப் பெற்றுத் திரும்பினார். மிக குறைந்த மக்கள் தொகை கொண்ட நார்வே நாட்டில் 1.8 டிரில்லியன் டாலர் சேமிப்பு வைத்துள்ளது. இந்தியா 690 பில்லியன் டாலர் வைத்துள்ளது. நார்வே உலகம் முழுவதும் 70 நாடுகளில் முதலீடு செய்துள்ளது. இதன் காரணமாகவே உலகில் பணக்கார நாடாக நார்வே உள்ளது.
உலக கரன்சியாக டாலர் உள்ளவரை அமெரிக்க உலகளவில் பெரிய பொருளாதார நாடாக திகழ்வதை தடுக்க முடியாது. டாலருக்கு மாற்றாக ஏதேனும் கரன்சியை மாற்ற எந்த நாடுகள் முயற்சித்தாலும் அந்நாட்டின் மீது 100 சதவீத வரி விக்கப்படும் என எச்சரித்துள்ளார்.
உலகில் பெரிய பொருளாதார நாடுகள் பட்டியலில் இந்தியா 5-ம் இடத்தில் உள்ளது. அடுத்த 25 ஆண்டுகளில் 2-ம் இடத்துக்கு முன்னேற பல்வேறு சவால்கள் உள்ளன. குறிப்பாக பாகிஸ்தான், இலங்கை, மாலத்தீவு போன்ற நாடுகளுடன் நட்புறவு தொடர வேண்டியது மிகவும் அசியம்.
அடுத்த 40 ஆண்டுகள் உலக வளர்ச்சியை நிர்ணயிக்கும் லித்தியம் போன்ற முக்கிய கனிமங்கள் ஆப்பிரிக்க நாடுகளில் அதிகம் உள்ளன. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த கனிமங்கள் மீது சீனா 70 சதவீதம் கட்டுப்பாட்டை கொண்டுள்ளது. அமெரிக்கா 20 சதவீதம் மட்டுமே கட்டுப்பாடு கொண்டுள்ளது. இந்தியா போன்ற மற்ற நாடுகள் 10 சதவீத கட்டுப்பாடுகளை மட்டுமே கொண்டுள்ளன. கடும் சரிவில் இருந்து பொருளாதாரத்தை மீட்டு உலகின் பெரிய பொருளாதார நாடுகள் பட்டியலில் 2-ம் இடத்துக்கு சீனா கொண்டு சென்றுள்ளது” என்று அவர் பேசினார்.
முன்னதாக ரோட்டரி மாவட்ட ஆளுநர் வழக்கறிஞர் என்.சுந்தரவடிவேலு தலைமை வகித்தார். கருத்தரங்கு தலைவர் ரமேஷ் வீரராகவன் முன்னிலை வகித்தார். ரவிமுருகையா, மருத்துவர் கிருஷ்ணன் சுவாமிநாதன் உள்ளிட்டோர் சமுதாய பணிகளுக்காக கெளரவிக்கப்பட்டனர். பல்வேறு தலைப்புகளில் ஜெய்ராம் வரதராஜ், நடிகை குஷ்பு உள்ளிட்ட பலர் பேசினர். கருத்தரங்கு நாளை நிறைவடைகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...