Published : 15 Feb 2025 04:57 PM
Last Updated : 15 Feb 2025 04:57 PM
ஸ்ரீபெரும்புதூர்: “மயிலாடுதுறையில் நடந்த இரட்டைக் கொலை குற்றவாளிகளை போலீஸார் இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும். தமிழகத்தில் யார் ஆட்சி அமைந்தாலும் கொலை, கொள்ளை நடக்கத்தான் செய்கிறது. ஆனால், அதனை கடந்து போக முடியாது. 24 மணி நேரமும் அரசு கண்காணித்து வருகிறது. இருப்பினும் இந்த படுகொலையை வன்மையாக கண்டிக்கிறேன்,” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில் தமிழக காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி இன்று (பிப்.15) நடைபெற்றது. இதில் அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சூரஜ் ஹெக்டே, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர் கலந்துகொண்டு ஸ்ரீபெரும்புதூர் நகர காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு அடையாள அட்டை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த செல்வப்பெருந்தகை கூறியது: “மயிலாடுதுறையில் நடந்த இரட்டைக் கொலை குற்றவாளிகளை போலீஸார் இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும்.
தமிழக முதல்வர் சட்டம் - ஒழுங்கை காப்பாற்றும் வகையில் செயல்படுகிறார். அதிகாரிகளும் முதல்வருக்கு உறுதுணையாக இருந்து கயவர்களை தண்டிக்க வேண்டும். மேலும், தமிழகத்தில் யார் ஆட்சி அமைந்தாலும் கொலை, கொள்ளை நடக்கத்தான் செய்கிறது. ஆனால் அதனை கடந்து போக முடியாது. 24 மணி நேரமும் அரசு கண்காணித்து வருகிறது. இருப்பினும் இந்தப் படுகொலையை வன்மையாக கண்டிக்கிறேன்,” என்றார்.
இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கே.வி. தங்கபாலு, பீட்டர் அல்போன்ஸ், ஸ்ரீபெரும்புதூர் நகர தலைவர் அருள்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதேபோல் மணிமங்கலம், பல்லாவரம் தொகுதியிலும் நடந்த நிகழ்ச்சியில் செல்வப்பெருந்தகை பங்கேற்றார். முன்னதாக, பல்லாவரத்தில் பேட்டி அளித்த செல்வப்பெருந்தகை, “தமிழக முதல்வர் சொன்னது போல் பாஜகவின் ஏ,பி,சி போன்ற டீமாகவே அதிமுக விளங்குகிறது” என்று அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment