Published : 15 Feb 2025 02:18 PM
Last Updated : 15 Feb 2025 02:18 PM
சென்னை: மயிலாடுதுறை மாவட்டம் முட்டம் பகுதியில் இருவர் படுகொலை செய்யப்பட்டதற்கு அரசும், காவல்துறையும் பொறுப்பேற்க வேண்டும். இருவரின் குடும்பங்களுக்கு தலா ரூ.50 லட்சம் இழப்பீடும், அரசு வேலைவாய்ப்பும் வழங்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “மயிலாடுதுறை மாவட்டம் முட்டம் கிராமத்தில் சட்டவிரோத கள்ளச்சாராய விற்பனையை தட்டிக் கேட்ட பொறியியல் கல்லூரி மாணவர் உள்ளிட்ட இருவர் கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப் பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். சாராய விற்பனையையும், இரு படுகொலைகளையும் தடுக்கத் தவறிய காவல்துறை, அதற்கு பொறுப்பேற்பதற்கு பதிலாக உண்மையை மூடி மறைக்க முயல்வது கண்டிக்கத்தக்கது ஆகும்.
மயிலாடுதுறை மாவட்டம் முட்டம் கிராமத்தில் கட்டுப்பாடில்லாமல் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதை அப்பகுதியைச் சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவர் சக்தி, தினேஷ், ஹரிஷ், அஜய் ஆகியோர் தட்டிக் கேட்டுள்ளனர். இது தொடர்பாக காவல்துறைக்கு புகார் அளித்துள்ளனர். இதனால் அவர்களுக்கும், கள்ளச் சாராயம் விற்பனை செய்யும் கும்பலுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்திருக்கிறது. இந்த நிலையில் தான் சக்தி மற்றும் அவரது நண்பர்களை வம்புக்கு இழுத்த கள்ளச்சாராய கும்பல் அவர்கள் நால்வரையும் கத்தியால் குத்தியுள்ளது.
அத்தாக்குதலில் மாணவர் சக்தி, ஹரிஷ் ஆகியோர் படுகொலை செய்யப்பட்ட நிலையில், அஜய் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மயிலாடுதுறை மாவட்டத்தில் கள்ளச்சாராய விற்பனையை தடுக்கத் தவறியதுடன், கள்ளச்சாராய வணிகர்களுக்கு ஆதரவாக காவல்துறை செயல்பட்டது தான் இந்தக் கொடிய படுகொலைகளுக்கு காரணம் ஆகும். ஆனால், வழக்கம் போலவே, இந்த கொடிய படுகொலைகளின் பின்னணியை மூடி மறைப்பதற்கு மயிலாடுதுறை மாவட்டக் காவல்துறை முயற்சி செய்து வருகிறது.
முட்டம் கிராமத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கும், படுகொலை செய்தவர்களுக்கும் இடையே எந்த முன்பகையும் இல்லை என்றும், ஒரே தெருவில் வாழும் இளைஞர்களுக்கு இடையே ஏற்பட்ட வாய்த் தகராறு தான் படுகொலையில் முடிந்திருப்பதாகவும் காவல்துறை விளக்கமளித்திருக்கிறது. இது அப்பட்டமான பொய் ஆகும். எந்த முன்விரோதமும் இல்லாமல், சாதாரணமாக வாக்குவாதம் ஏற்பட்டதால் இருவர் படுகொலை செய்யப்பட்டனர் என்றால், அவர்களைக் கொலை செய்தவர்கள் எந்த நேரமும் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்தார்கள் என்று காவல்துறை கூறுகிறதா? எனத் தெரியவில்லை.
மயிலாடுதுறை மாவட்டத்தில் மட்டுமின்றி, அனைத்து கிராமங்களிலும் கள்ளச்சாராயம் தங்கு தடையின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அது குறித்து புகார் செய்தாலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவது இல்லை. அதுமட்டுமின்றி, புகார் அளித்தவர்களின் விவரங்களை கள்ளச்சாராய வணிகர்களிடம் தெரிவிப்பதை தங்கள் கடமையாகக் கொண்டிருக்கிறது காவல்துறை. மயிலாடுதுறை மாவட்டம் முட்டம் கிராமத்திலும் அது தான் நடந்திருக்கிறது.
அதன் விளைவு தான் இந்த இரட்டைப் படுகொலைகள். இந்த படுகொலைகளுக்கு தமிழக அரசும், காவல்துறையும் தான் பொறுப்பேற்க வேண்டும். ஆனால், தங்களின் தவறை மூடி மறைக்கவே பொய்யான காரணங்களை காவல்துறை கூறிக் கொண்டிருக்கிறது. ஓராண்டு இடைவெளிக்குள் மரக்காணம், கள்ளகுறிச்சி என இரு இடங்களில் கள்ளச்சாராய சாவுகள் நிகழ்ந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட போதிலும் தமிழக அரசும், காவல்துறையும் அதன் செயல்பாடுகளை மாற்றிக்கொள்ளவில்லை.
கள்ளச்சாராயம் மற்றும் கஞ்சா வணிகம் செய்பவர்களை கைது செய்தாலும் கூட, அவர்களை ராஜமரியாதையுடன் நடத்துவதையும், அடுத்த ஒரு சில நாட்களில் அவர்கள் பிணையில் வெளிவந்து மீண்டும் போதை வணிகத்தை தொடங்க ஒத்துழைப்பு வழங்குவதையும் காவல்துறை வழக்கமாகக் கொண்டிருக்கிறது. அதன் காரணமாக சட்டவிரோதமாக கள்ளச்சாராயம், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்பவர்களுக்கு அசாத்தியமான துணிச்சல் ஏற்பட்டிருக்கிறது. அது தான் இத்தகைய கொடிய இரட்டைக் கொலைகளுக்கு காரணமாக அமைந்துள்ளது.
தமிழக அரசும், காவல்துறையும் குற்றங்களைத் தடுப்பதை விட, அவற்றை மூடி மறைப்பதில் தான் அதிக ஆர்வம் காட்டுகின்றன. தமிழகத்தில் கள்ளச் சாராயம், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் விற்பனை அதிகரிப்பதற்கும், கொலை, கொள்ளைகள் பெருகுவதற்கும் இது தான் காரணமாகும். இந்த அணுகுமுறையை அரசும், காவல்துறையும் இனியாவது மாற்றிக் கொள்ள வேண்டும். தமிழகத்தில் எந்தப் பகுதியிலும் கள்ளச்சாராயம், கஞ்சா விற்கப்படவில்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும்.
மயிலாடுதுறை மாவட்டம் முட்டம் பகுதியில் இருவர் படுகொலை செய்யப்பட்டதற்கு அரசும், காவல்துறையும் பொறுப்பேற்க வேண்டும். இந்தக் கொலைகளை செய்தவர்கள் மட்டுமின்றி, அதை கண்டுகொள்ளாமல் இருந்த உள்ளூர் காவல் அதிகாரிகள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். கொல்லப்பட்ட இருவரின் குடும்பங்களுக்கு தலா ரூ.50 லட்சம் இழப்பீடும், அரசு வேலைவாய்ப்பும் வழங்க வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment