Published : 15 Feb 2025 08:13 AM
Last Updated : 15 Feb 2025 08:13 AM
இரண்டாக இருந்த விழுப்புரம் மாவட்ட திமுக-வை மூன்றாக பிரித்திருக்கும் திமுக தலைமை, புதிதாக பிறந்திருக்கும் விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக-வுக்கு அதிமுக-விலிருந்து வந்த லட்சுமணனை பொறுப்பாளராக்கி இருக்கிறது. 2021-ல் விழுப்புரம் தொகுதியில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை தோற்கடித்தவர் இந்த லட்சுமணன் என்பது கூடுதல் தகவல்.
ஒரு காலத்தில் பாமக இதேபோல் மாவட்டங்களைப் பிரித்து அதிகாரப் பரவலை செய்தபோது அதை பரிகாசம் செய்த கட்சி திமுக. இப்போது அவர்களே பாமக வழிக்குப் போயிருக்கிறார்கள். கள்ளகுறிச்சியை உள்ளடக்கிய ஒன்றுபட்ட விழுப்புரம் மாவட்டத்துக்கும் அமைச்சர் பொன்முடி தான் செயலாளராக இருந்தார்.
சுமார் 12 ஆண்டுகளுக்கு முன்பு நிர்வாக வசதிக்காக விழுப்புரம் மாவட்டத்தை வடக்கு, தெற்கு என இரண்டாகப் பிரித்தது திமுக. அப்போது வடக்கு மாவட்டச் செயலாளராக பொன்முடியும் தெற்கு மாவட்டச் செயலாளராக அங்கயற்கன்னியும் நியமிக்கபட்டனர். பொன்முடி துணைப் பொதுச்செயலாளர் ஆனதும் வடக்கு மாவட்டத்துக்கு மஸ்தானும், தெற்கு மாவட்டத்துக்கு புகழேந்தியும் செயலாளர்களாக நியமிக்கப்பட்டார்கள்.
அண்மையில் உடல்நலக் குறைவால் புகழேந்தி காலமானதால் பொன்முடியின் மகன் கவுதம சிகாமணி தெற்கு மாவட்ட பொறுப்பாளராகவும் மஸ்தானுக்கு பதில் டாக்டர் சேகர் வடக்கு மாவட்ட பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டனர். சேகர் வகித்து வந்த மாவட்ட அவைத்தலைவர் பதவி மஸ்தானுக்கு வழங்கப்பட்டது.
இந்த நிலையில், தேர்தலை குறிவைத்து விழுப்புரம் மாவட்ட திமுக-வை மீண்டும் கலைத்துப் போட்டிருக்கும் திமுக தலைமை, புதிதாக விழுப்புரம் மத்திய மாவட்டம் என்று ஒன்றை உருவாக்கி அதற்கு அதிமுக வரவான லட்சுமணனை பொறுப்பாளராக்கி இருக்கிறது. கூடவே, முன்னாள் அமைச்சரான மஸ்தானை மீண்டும் விழுப்புரம் வடக்கு மாவட்ட பொறுப்பாளராகவும், கவுதம சிகாமணியை தெற்கு மாவட்ட பொறுப்பாளராகவும் அறிவித்திருக்கிறார்கள்.
மஸ்தான் செஞ்சி, மயிலம், திண்டிவனம் தொகுதிகளுக்கும், கவுதம சிகாமணி விக்கிரவாண்டி, திருக்கோவிலூர் தொகுதிகளுக்கும், விழுப்புரம், வானூர் தொகுதிகளுக்கு லட்சுமணனும் பொறுப்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். புகழேந்தி மறைவால் கட்சிக்குள் வன்னியருக்கான முக்கியத்துவம் இல்லாமல் இருந்தது.
அதை சரி செய்யவே புதிதாக ஒரு மாவட்டத்தைப் பிரித்து அதற்கு வன்னியரான லட்சுமணனை பொறுப்பாளராக்கி இருக்கிறது திமுக. அதேசமயம், அதிமுக தரப்பில் ஒட்டுமொத்த விழுப்புரம் மாவட்டத்துக்கும் ஒரே செயலாளராக இருக்கிறார் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம்.
கடந்த 2015-ல் விழுப்புரம் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளராக இருந்த லட்சுமணன் விழுப்புரம் - சென்னை புறவழிச்சாலையோரம் சொந்தமாக சுமார் 5 சென்ட் நிலத்தை வாங்கி அங்கு 104 அடி உயர கொடி கம்பத்தை நட்டு அதில் ஜெயலலிதா பிறந்தநாளுக்காக அப்போதைய உயர் கல்வித்துறை அமைச்சர் பழனியப்பனை அழைத்து வந்து கொடியேற்றவைத்தார். இதன் பிறகு 2020-ல் அதிமுக-வில் அமைப்புச் செயலாளராகவும் மாநிலங்களவை எம்பி-யாகவும் இருந்த போதே தனது ஆதரவாளர்களுடன் திமுக-வில் இணைந்தார் லட்சுமணன்.
லட்சுமணன் அதிமுக கொடிக்கம்பத்தை நட்ட இடம் அவரது சொந்த இடம் என்பதால் அந்த இடத்தையோ, கொடிக்கம்பத்தையோ அதிமுக சொந்தம் கொண்டாடவில்லை. சில மாதங்களுக்கு முன்பு அவரைச் சந்தித்த போது, அந்த கொடிக்கம்பத்தில் எப்போது திமுக கொடியை ஏற்றப்போகிறீர்கள் என்று கேட்டதற்கு, “எப்போது கொடி ஏற்றுவேன் என்று உங்களுக்குத் தெரியாதா?” எனக் கேட்டு அர்த்தப் புன்னகை பூத்தார். அதற்கான அர்த்தம் இப்போது விளங்கி இருக்கிறது. விரைவில் அந்தக் கொடிக்கம்பத்தில் ஸ்டாலினோ உதயநிதியோ திமுக கொடியை ஏற்றுவார்கள் என்கிறார்கள் லட்சுமணனின் ஆதரவாளர்கள்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...