Published : 15 Feb 2025 06:52 AM
Last Updated : 15 Feb 2025 06:52 AM
சென்னை: பாலியல் குற்றச்சாட்டால் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட இணை ஆணையர் மீது சம்பந்தப்பட்ட பெண் போலீஸ் வீடு கட்ட ரூ.25 லட்சம் கேட்டு மிரட்டி பொய்புகார் அளித்துள்ளதாக அவரது மனைவி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக டிஜிபி அலுவலகத்தில் புகாரும் அளித்துள்ளார்.
சென்னை போக்குவரத்து காவல் வடக்கு மண்டல இணை ஆணையராக பணியாற்றிய ஐபிஎஸ் அதிகாரி மகேஷ்குமார், தனக்கு பாலியல் தொந்தரவு அளிப்பதாக பெண் போலீஸ் ஒருவர் டிஜிபியிடம் புகார் அளித்திருந்தார். இதன்பேரில் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் மகேஷ்குமாரை பணியிடை நீக்கம் செய்து உள்துறை செயலர் தீரஜ்குமார் உத்தரவிட்டார். மேலும் அவருக்கு உடந்தையாக இருந்ததாக மாதவரம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் சக்திவேலை காத்திருப்போர் பட்டியலுக்கு சென்னை காவல் ஆணையர் அருண் மாற்றினார்.
இந்நிலையில், தன் கணவரை பணம் கேட்டு மிரட்டியதாக புகார் அளித்த பெண் போலீஸ் மீது, மகேஷ்குமாரின் மனைவியும் முன்னாள் எஸ்ஐயுமான அனுராதா குற்றம் சாட்டினார். செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியதாவது: எனது கணவர் மீது அந்த பெண் போலீஸ் பாலியல் பலாத்காரம், துன்புறுத்தல் என்றெல்லாம் புகார் சொல்லி இருக்கிறார். அந்த மாதிரி எதுவும் இல்லை. அவர்கள் 2 பேருக்கும் ஏற்கெனவே ஒரு உறவு இருந்தது. இந்த விவகாரத்தில் அந்த பெண்ணையும் என் கணவரையும் கண்டித்து இருக்கிறேன். ஆனால் அந்த பெண் போலீஸ் பழிவாங்கும் செயலாக எங்கள் குடும்பத்தை பிரிக்க பார்க்கிறார்.
எனது கணவரிடம் அந்த பெண் போலீஸ் அவ்வப்போது பணம் கேட்பார். இவரும் கொடுத்து வந்தார். அந்த பெண் மறைமலைநகரில் புதிதாக வீடு கட்டி வருகிறார். திடீரென்று எனது கணவரிடம் வீட்டின் கட்டுமான பணிக்கு ரூ.25 லட்சம் கேட்டார். அவ்வளவு பெரிய தொகை இல்லை என எனது கணவர் சொன்னதால், அந்த பெண் எனது கணவரை மிரட்ட தொடங்கினார். தற்போது பொய் புகார் கொடுத்துள்ளார். கடந்த ஓராண்டுக்கும் மேலாக அவர்கள் 2 பேரும் தெரிந்தேதான் பழகினார்கள். அப்புறம் எப்படி பாலியல் பலாத்காரம், துன்புறுத்தல் என்று சொல்ல முடியும். இந்த விவகாரத்தில் சரியான முறையில் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அவசரப்பட்டு எனது கணவரின் பெயருக்கு களங்கம் விளைவிக்க கூடாது. எனவே தவறான தகவல்களை யாரும் பரப்ப வேண்டாம். இவ்வாறு கூறினார்.
மேலும், அந்த பெண் போலீஸும் மகேஷ்குமாரும் ஓட்டலுக்கு சென்றிருந்த சிசிடிவி காட்சிகளையும் அனுராதா வெளியிட்டார். பின்னர் டிஜிபி அலுவலகத்தில் நேற்று புகார் அளித்தார். அதில் தனது கணவருடன் தகாத உறவில் ஈடுபட்டு ரூ.25 லட்சம் கேட்டு மிரட்டி பொய்யான பாலியல் துன்புறுத்தல் புகார் அளித்துள்ள பெண் போலீஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...