Published : 15 Feb 2025 05:30 AM
Last Updated : 15 Feb 2025 05:30 AM

நம்மை எதிர்ப்பவர்கள் எத்தனை ‘கெட்டப்’ போட்டு வந்தாலும்... - தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

திமுகவில் நடைபெறுவது களையெடுப்பல்ல; சீரமைப்பு என்றும் அறிவாலயத்தின் ஒரு துகளைக்கூட யாரும் அசைக்க முடியாது என்றும் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அந்தக் கடிதத்தில் முதல்வர் கூறியிருப்பதாவது: நாளுக்குநாள் திராவிட மாடல் அரசுக்கு தமிழக மக்களின் ஆதரவு பெருகிக் கொண்டே இருக்கிறது. ஆட்சியில், மக்கள் நலனுக்கான திட்டங்களை அறிவித்து, அதனை முழுமையாகச் செயல்படுத்தும் வகையில் அயராமல் உழைப்பதால்தான் மக்களிடம் ஆதரவு பெருகியுள்ளது. தமிழக மக்கள் நமக்கு வழங்கிய ஆட்சியை அவர்களுக்கான ஆட்சியாக நாம் வழங்க வேண்டும் என்ற நோக்கில் பல திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.

இந்நிலையில், தமிழகத்தை வஞ்சிக்கும் வகையில் மத்திய பாஜக அரசு, நமக்குரிய நிதியை வழங்காமல் மக்களுக்குத் தொடர்ந்து துரோகம் செய்து வருகிறது. மாநில உரிமைக்கு எதிரான பாஜக அரசின் பழிவாங்கும் போக்கையும் எதிர்கொண்டு இந்தியாவின் முன்னோடி மாநிலமாகத் தமிழகத்தை உயர்த்தியுள்ளோம்.

மத்திய அரசின் நிறுவனங்களும், நிதி ஆயோக் போன்ற அமைப்புகளும் வெளியிடும் புள்ளி விவரங்களில் தமிழகம் பல்வேறு இலக்குகளில் சிறந்து விளங்குகிறது. அப்படியிருந்தும் நமக்குரிய நிதிப் பங்களிப்பு கிடைக்கவில்லை. இந்தியாவின் முதன்மை மாநிலம் தமிழகம் என்ற இலக்கை அடைய 7-வது முறையும் திமுக ஆட்சி தொடரவேண்டும். அந்த வாய்ப்பை வழங்க மக்கள் தயாராக உள்ளனர்.

அதேநேரம், அதைக் கெடுப்பதற்கான சதிகளைச் செய்யும் அரசியல் சக்திகள் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு முகமூடியுடன் வெளியே வரும். தமிழக மக்களுக்கு எதிரான தமிழகத்துக்கு எந்த பயனுமி்ல்லாத, கள்ளக்கூட்டணி வைத்துள்ள, காசு வாங்கிக் கொண்டு கூவுகிற அந்த முகமூடிகளைக் கிழித்தெறிந்து வெற்றியை உறுதி செய்வோம்.

இன்னும் அறிவிப்பு வரும்: அந்த வெற்றியை அடைவதற்கான நிர்வாக வசதிக்காகத்தான் மாவட்ட நிர்வாகத்தில் மாற்றங்கள் தொடங்கியுள்ளன. இதுபோல இன்னும் சில அறிவிப்புகளையும் எதிர்பார்க்கலாம். ஒரு பொறுப்பிலிருந்து ஒருவரை மாற்றுவது குறித்து ஒன்றுக்கு நூறுமுறை யோசித்து, தலைமைக் கழக நிர்வாகிகளுடன் பல சுற்றுகள் ஆலோசித்து, கட்சியின் நன்மை கருதியே இறுதி முடிவெடுப்பேன். இத்தகைய முடிவுகள் தொடரும்.

இயக்கம் தேவைக்கேற்ற மாற்றங்களுடன் இயங்கினால்தான், காலத்துக்கேற்ற வளர்ச்சியைப் பெறமுடியும். முன்பு பொறுப்பில் இருந்தவர்கள் தற்போது பொறுப்பில் உள்ளவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கி பணியாற்ற வேண்டும். புதிதாகப் பொறுப்புக்கு வந்திருப்பவர்கள், ஏற்கெனவே பொறுப்பில் உள்ளவர்களை அரவணைத்துச் செயலாற்ற வேண்டும்.

இருநூறு தொகுதிகள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், வெற்றிப்பாதையில் பயணிக்க இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இது களையெடுப்பு அல்ல, கட்டுமானச் சீரமைப்பு. அண்ணா அறிவாலயம் நம் எதிரிகளின் கண்களை உறுத்துகிறது. அறிவாலயத்தில் இருந்து செங்கல்லை உருவலாம் எனக் கனவு காணலாமே தவிர, ஒரு துகளைக்கூட எவராலும் அசைக்க முடியாது.

‘கெட்டப்’ போட்டு வந்தாலும்... சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றிபெறுவதைத் தடுக்க முடியாது என்பது அரசியல் எதிரிகளுக்கும் நன்றாகத் தெரியும். எனவேதான், கள்ளக்கூட்டணி, திரைமறைவுக் கூட்டணி, வாக்கைச் சிதறடிக்க நினைக்கும் கூட்டணி என நம்மை எதிர்ப்பவர்கள் எத்தனை ‘கெட்டப்’ போட்டு வந்தாலும் களம் நமதே. கவனமாக உழைப்போம். வெற்றி நமதே. இவ்வாறு கடிதத்தில் முதல்வர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x