Published : 14 Feb 2025 09:44 PM
Last Updated : 14 Feb 2025 09:44 PM

கோயில் அறங்காவலர் பதவிக்கு சாதி முக்கியமல்ல: சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை: கோயில் அறங்காவலர்கள் பதவிக்கு இறை நம்பிக்கை, நேர்மை, ஆன்மிக, அற சிந்தனைதான் முக்கியமேயன்றி, சாதி அல்ல எனக் கூறியுள்ள சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி, அரசியல் சாசனம் உருவாக்கப்பட்டு 75 ஆண்டுகளாகியும் சாதி என்னும் தேவையற்ற சுமையை சிலர் இன்னும் சுமந்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி தாலுகா நெகமம் ஆவலப்பட்டி கிராமத்தில் உள்ள வரதராஜப் பெருமாள் மற்றும் சென்ராயப் பெருமாள் கோயில்களுக்கு குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்த அறங்காவலர்களை நியமிப்பது தொடர்பாக திட்டம் வகுக்கக் கோரி அறநிலையத் துறை இணை ஆணையருக்கு உத்தரவிடக் கோரி, ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரணை நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி முன்பாக நடந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் வி.உஷாராணியும், அறநிலையத் துறை தரப்பில் சிறப்பு அரசு ப்ளீடர் என்.ஆர்.ஆர்.அருண் நடராஜனும் ஆஜராகி வாதிட்டனர்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பிறப்பித்துள்ள உத்தரவில், “சாதியை அடிப்படையாக வைத்து மனுதாரர் கோரியுள்ள இந்த கோரிக்கை அரசியல் சாசனம் மற்றும் பொது கொள்கைக்கு விரோதமானது மட்டுமின்றி ஏற்புடையதும் அல்ல. சாதி என்பது சமூகத்தை ஆட்டுவித்து நாட்டின் வளர்ச்சிக்கு தீங்கிழைக்கும் பேய். சாதியில்லா சமுதாயம் தான் நமது அரசியல் சாசனத்தின் இலக்கு. சாதியை நிரந்தரமாக்கச் செய்யும் எதையும் நீதிமன்றம் பரிசீலிக்காது.

சாதி என்பது அடிப்படையில் கற்றுக்கொள்வதின் மூலமாகவோ, வாழ்வில் செய்த செயல்களின் மூலமாகவோ முடிவு செய்யப்படுவதில்லை. பிறப்பால் மட்டுமே நிர்ணயமாகிறது. ஆனால் அந்த சாதி ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற பிறப்பால் அனைவரும் சமம் என்ற நெறிமுறைகளுக்கு எதிராக உள்ளது. சமூகத்தை பிளவுபடுத்தி, ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கி, அரசியல் ரீதியாக கலவரங்களை தூண்டும் சாதி நாட்டின் வளர்ச்சிக்கும் எதிரானது.

சாதி அடிப்படையில் நாட்டு மக்களிடையே எந்த பாரபட்சமும் இருக்கக்கூடாது. சாதியற்ற சமுதாயத்தை உருவாக்க வேண்டுமென்பதே அரசியல் சாசனத்தை வகுத்த தலைவர்களின் கனவு. அப்படியே சாதியை கணக்கில் கொள்ள வேண்டுமென்றால் அது அடித்தட்டு மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் வாழ்வியல் மேம்பாட்டுக்காகவும், இடஒதுக்கீடு வழங்குவதற்காகவும் நேர்மறையான பாகுபாட்டுடன் இருக்க வேண்டும்.

அரசியலமைப்பு சாசனம் வகுக்கப்பட்டு 75 ஆண்டுகளாகியும் சாதி என்னும் தேவையில்லாத சுமையை சமுதாயத்தில் ஒரு பிரிவினர் இன்னும் அகற்றவில்லை. எனவே, இந்தக் கோயில்களின் அறங்காவலர்கள் பதவிக்கு இறை நம்பிக்கை, நேர்மை, ஆன்மிக, அற சிந்தனை தான் முக்கியமேயன்றி சாதி அல்ல. இதை இந்த நீதிமன்றம் உறுதியாக அறிவிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.

இந்தச் சூழலில், சுவாமி விவேகானந்தரை விட வேறு யாரும் நம் மதங்களை நன்றாகப் புரிந்து கொண்டவர்கள் கிடையாது. மதமும், வழிபாடும் ஆன்மாவின் நன்மைக்காக என்றால் ஆன்மாவுக்கு பாலினம், சாதி என்ற எந்த பாகுபாடும் கிடையாது என சுவாமி விவேகானந்தர் கூறியுள்ளார். எனவே, மனுதாரரின் சாதி ரீதியிலான இந்த கோரிக்கையை ஏற்க முடியாது” எனக் கூறி வழக்கை முடித்து வைத்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x