Published : 14 Feb 2025 05:05 PM
Last Updated : 14 Feb 2025 05:05 PM

திருச்சி சிவா வீட்டை தாக்கிய கட்சியினரை மன்னித்துவிட்டதாக திமுக அறிவிப்பு

திருச்சி சிவா | கோப்புப்படம்

திருச்சி: திமுக எம்.பி. திருச்சி சிவாவின் வீட்டை தாக்கிய அக்கட்சியினர் மீதான நடவடிக்கையை கட்சித் தலைமை கைவிட்டுள்ளது.

திமுக கொள்கைப் பரப்புச் செயலாளரும், மாநிலங்களவை எம்.பி.யுமான திருச்சி சிவாவின் வீடு, கண்ட்டோன்ட்மென்ட் எஸ்பிஐ காலனி பகுதியில் அமைந்துள்ளது. சிவாவின் வீட்டருகே, நமக்கு நாமே திட்டத்தின்கீழ் அமைக்கப்பட்ட நவீன இறகுப் பந்து மைதானத் திறப்பு விழா, கடந்த 2023 மார்ச் 15-ம் தேதி நடைபெற்றது.அமைச்சர் கே.என்.நேரு விளையாட்டு அரங்கத்தை திறந்து வைத்தார். திறப்பு விழா அழைப்பிதழில் சிவாவின் பெயர் அச்சிடப்படவில்லை. இதனால் உணர்ச்சிவசப்பட்ட சிவாவின் ஆதரவாளர்கள், அமைச்சர் கே.என்.நேருவின் காருக்கு கருப்பு கொடடி காட்டினார்.

இதனால் ஆத்திரமடைந்த கே.என்.நேருவின் ஆதரவாளர்கள், திருச்சி சிவாவின் வீட்டுக்குள் புகுந்து, அங்கு நிறுத்தப்பட்டிருந்த அவரது கார் மற்றும் வீட்டின் கண்ணாடிகளை அடித்து உடைத்தனர்.மேலும், அமர்வு நீதிமன்ற காவல் நிலையத்துக்குள் தகராறில் ஈடுபட்ட திமுகவினர் போலீஸாரை மிரட்டினர். இச்சம்பவம் குறித்து திருச்சி அமர்வு நீதிமன்ற போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதையடுத்து, இசசம்பவத்தில் ஈடுபட்ட, மத்திய மாவட்ட துணைச் செயலாளர் முத்துச் செல்வம், பகுதிச் செயலாளர் காஜாமலை விஜய், அந்தநல்லூர் ஒன்றியச் செயலாளர் துரைராஜ், கவுன்சிலர் ராமதாஸ் உள்ளிட்டோரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி, திமுக தலைமை அறிவித்திருந்தது.

இந்நிலையில், “இவர்கள் அனைவரும் தங்களது செயலுக்கு வருத்தம் தெரிவித்து, மீண்டும் கட்சிப் பணியாற்ற அனுமதி அளிக்குமாறு திமுக தலைவர் ஸ்டாலினிடம் வழங்கிய கோரிக்கையை ஏற்று, அவர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்யப்பட்டு இன்று முதல் அவர்கள் கட்சி உறுப்பினராக செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது,” என்று திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x