Published : 14 Feb 2025 03:28 PM
Last Updated : 14 Feb 2025 03:28 PM
சென்னை: “2026 சட்டமன்றத் தேர்தலில் இருநூறு தொகுதிகள் இலக்கு என நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றியினை உறுதி செய்யும் வகையில், களத்திற்கேற்ற வியூகம் அமைத்து, வெற்றிப் பாதையில் பயணிப்பதற்காக கட்சியின் மாவட்டப் பொறுப்புகளில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது களையெடுப்பு அல்ல, கட்டுமானச் சீரமைப்பு,” என்று திமுக தொண்டர்களுக்கு அக்கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில் ஸ்டாலின், “ஆட்சியில், மக்கள் நலனுக்கான திட்டங்களை அறிவித்து, அதனை முழுமையாகச் செயல்படுத்திடும் வகையில் அயராமல் உழைக்கின்ற காரணத்தினால்தான் மக்களிடம் ஆதரவு பெருகியுள்ளது. திமுக தொண்டர்களின் உழைப்பும் பொதுமக்களின் ஆதரவும் வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் ஏழாவது முறையாகக் திமுக-வை ஆட்சியில் அமர்த்தும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்.
தமிழகம் அனைத்து நிலைகளிலும் வளர்ச்சி பெற வேண்டும் என்ற லட்சிய நோக்கத்துடன் திராவிட மாடல் அரசு செயலாற்றி வரும் நிலையில், தமிழகத்தை வஞ்சிக்கும் வகையில் மத்திய பாஜக அரசு நமக்குரிய நிதியை வழங்காமல் தமிழக மக்களுக்குத் தொடர்ந்து துரோகம் செய்து வருகிறது. மாநில உரிமைக்கு எதிரான பாஜக அரசின் பழிவாங்கும் போக்கையும் எதிர்கொண்டு இந்தியாவின் முன்னோடி மாநிலமாகத் தமிழகத்தை உயர்த்தியிருக்கிறோம்.
மத்திய அரசின் நிறுவனங்களும், நிதி ஆயோக் போன்ற அமைப்புகளும் வெளியிடும் புள்ளிவிவரங்களில் தமிழகம் பல்வேறு இலக்குகளில் சிறந்து விளங்குகிறது. அப்படியிருந்தும் நமக்குரிய நிதிப் பங்களிப்பு கிடைக்கவில்லை. நமக்கான திட்டங்களை பாஜக அரசு முன்னெடுப்பதில்லை. தமிழகத்தை பாஜக வஞ்சித்தாலும், திமுக மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த மக்களுக்கு வாழ்வளிக்கும் வகையில் திராவிட மாடல் அரசின் நலத் திட்டங்கள் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் பயனளித்து வருகின்றன.
திமுகவுக்கு நல்வாய்ப்பு அமைகிறதென்றால் அதனைக் கெடுப்பதற்கான சதிகளைச் செய்யும் அரசியல் சக்திகள் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு முகமூடியுடன் வெளியே வரும்.
தமிழக மக்களுக்கு எதிரான, தமிழகத்துக்கு எந்தப் பயனுமில்லாத, கள்ளக் கூட்டணி வைத்திருக்கிற, காசு வாங்கிக் கொண்டு கூவுகிற அந்த முகமூடிகளைக் கிழித்தெறிந்து திமுக தலைமையிலான அணியின் வெற்றியை உறுதி செய்வோம்.அந்த வெற்றியை அடைவதற்கான நிர்வாக வசதிக்காகத்தான் கட்சியின் மாவட்ட நிர்வாகத்தில் மாற்றங்கள் தொடங்கியுள்ளன.
திருநெல்வேலி மத்திய மாவட்டப் பொறுப்பாளராக மு.அப்துல் வகாப் , திருவள்ளூர் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளராக எம்.எஸ்.கே.ரமேஷ்ராஜ், தஞ்சாவூர் தெற்கு மாவட்டப் பொறுப்பாளராக பழனிவேல், நீலகிரி மாவட்டப் பொறுப்பாளராக கே.எம்.ராஜு, ஆகியோர் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். அதுபோலவே ஈரோடு, திருப்பூர், விழுப்புரம், மதுரை ஆகிய மாவட்டங்களில் உள்ள சட்டமன்றத் தொகுதிகளுக்கான மாவட்டப் பொறுப்பாளர்களாக அமைச்சர்கள் சு.முத்துசாமி, மு.பெ.சாமிநாதன், பி.மூர்த்தி, எம்.எல்.ஏக்கள், செஞ்சி மஸ்தான் க.செல்வராஜ் ,ஆர்.லட்சுமணன், கோ.தளபதி, மற்றும் என்.நல்லசிவம், தோப்பு வெங்கடாசலம், கவுதமசிகாமணி, இல.பத்மநாபன்,என்.தினேஷ்குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டு அவர்களின் பொறுப்பிலான சட்டமன்றத் தொகுதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
சட்டமன்றத் தேர்தலுக்கு ஓர் ஆண்டுகாலமே இடையில் உள்ளதால் அதற்கேற்ப களப்பணிகள் அமைந்திட வேண்டும் என்பதற்காகவே இந்த மாற்றங்களும் அதற்கேற்ற வகையிலான நியமனங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுபோல இன்னும் சில அறிவிப்புகளையும் தொண்டர்கள் எதிர்பார்க்கக்கூடும். ஒரு பொறுப்பிலிருந்து ஒருவரை மாற்றுவது குறித்து ஒன்றுக்கு நூறு முறை யோசித்து, தலைமைக் கழக நிர்வாகிகளுடன் பல சுற்றுகள் ஆலோசித்து, கட்சியின் நன்மை கருதியே இறுதி முடிவெடுப்பேன். இப்போதும் அப்படித்தான் முடிவெடுக்கப்பட்டுள்ளது. கட்சியின் நலன் கருதி இத்தகைய முடிவுகள் தொடரும்.
இயக்கம் என்பது தேவைக்கேற்ற மாற்றங்களுடன் இயங்கிக் கொண்டிருந்தால்தான், காலத்திற்கேற்ற வளர்ச்சியைப் பெற முடியும். இந்த மாற்றங்களினால் கட்சியில் ஏற்கெனவே பொறுப்பில் இருந்தவர்களுக்கும் புதிதாகப் பொறுப்புக்கு வந்திருப்பவர்களுக்கும் என் இதயத்தில் நிறைந்துள்ள அன்பில் அணுவளவும் எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை. முன்பு பொறுப்பில் இருந்தவர்கள் தற்போது பொறுப்பில் இருப்பவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கிக் கடமையாற்ற வேண்டும். புதிதாகப் பொறுப்புக்கு வந்திருப்பவர்கள், ஏற்கெனவே பொறுப்பில் உள்ளவர்களை அரவணைத்து செயலாற்றிட வேண்டும்.
இருநூறு தொகுதிகள் இலக்கு என நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றியினை உறுதி செய்யும் வகையில், களத்திற்கேற்ற வியூகம் அமைத்து, வெற்றிப் பாதையில் பயணிப்பதற்காக இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது களையெடுப்பு அல்ல, கட்டுமானச் சீரமைப்பு. திமுக எனும் 75 ஆண்டுகால இயக்கத்தின் உறுதிமிக்க கட்டுமானம் மேலும் வலிவுடனும் பொலிவுடனும் திகழ்வதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள சீரமைப்பு நடவடிக்கை.
மறைந்த முதல்வர் கருணாநிதியால் உருவாக்கப்பட்ட திமுக-வின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம், தொண்டர்களின் உழைப்பு எனும் அடித்தளத்தில் இன்றளவும் வலிமையாகத் திகழ்கிறது. அதனால் நம் எதிரிகளின் கண்களை உறுத்துகிறது. கருணாநிதியின் சிந்தனையிலும் செயலிலும் உருவான கட்சியின் கற்கோட்டையான அறிவாலயத்திலிருந்து செங்கல்லை உருவலாம் எனக் கனவு காண்பவர்கள் தரையில் விழுந்து தலையில் அடிபட்டபின், கனவு கலைந்து விழித்துக் கொள்ளலாமே தவிர, அறிவாலயத்தின் ஒரு துகளைக் கூட எவராலும் அசைக்க முடியாது என்பதுதான் திமுக-வின் பெருமை மிக்க வரலாறு.
தமிழக மக்கள் மனதில், குறிப்பாகப் பெண்கள், இளைஞர்கள் ஆகியோரிடம் பெரும் செல்வாக்குப் பெற்றுள்ள இயக்கமான திமுக-வும் அதன் கொள்கைக் கூட்டணியினரான தோழமைக் கட்சியினரும் சட்டமன்றத் தேர்தலிலும் வெற்றி முத்திரை பதிப்பதைத் தடுக்க முடியாது என்பது அரசியல் எதிரிகளுக்கும் நன்றாகத் தெரியும். அதனால்தான் கள்ளக்கூட்டணி, திரைமறைவுக் கூட்டணி, வாக்கைச் சிதறடிக்க நினைக்கும் கூட்டணி என நம்மை எதிர்ப்பவர்கள் எத்தனை ‘கெட்டப்’ போட்டு வந்தாலும் வெற்றி நமதே!” என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment