Last Updated : 14 Feb, 2025 11:53 AM

 

Published : 14 Feb 2025 11:53 AM
Last Updated : 14 Feb 2025 11:53 AM

தேனி அருகே சபரிமலை பக்தர்கள் சென்ற பேருந்து - வேன் மோதி விபத்து: சிறுவன் உட்பட 3 பேர் உயிரிழப்பு

தேனி: சபரிமலைக்கு சென்ற பேருந்து மற்றும் தரிசனம் முடித்து ஊர் திரும்பிக் கொண்டிருந்த வேன் தேனி அருகே நேருக்கு நேராக மோதியது. இதில் சிறுவன் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். 14-க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை கிராமத்தைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் நேற்று இரவு சபரிமலைக்கு தனியார் பேருந்தில் சென்று கொண்டிருந்தனர். அதே போல ஓசூரைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் வேன் சபரிமலையில் தரிசனம் முடித்து ஊர் திரும்பிக்கொண்டிருந்தனர்.

தேனி அருகே மதுராபுரி புறவழிச்சாலையில் நேற்றிரவு 10 மணிக்கு இரண்டு வாகனங்களும் சென்ற போது எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதியது. அதிவேகத்தில் மோதியதால் இரண்டு வாகனங்களின் முன்பகுதி வெகுவாய் நொறுங்கியது. தகவல் அறிந்ததும் அல்லிநகரம் போலீஸார், தேனி தீயணைப்புத்துறையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.

இதில் வேனில் பயணித்த கோபி என்பவர் மகன் கனிஷ்க் (7), நாகராஜ் (40), சூர்யா (23) ஆகியோருக்கு தலை, கால் உள்ளிட்ட பல பகுதிகளிலும் பலத்த காயம் ஏற்பட்டது. 108 ஆம்புலன்ஸ் மூலம் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இருப்பினும் வழியிலே மூவரும் உயிரிழந்தனர்.

பேருந்தில் பயணித்த சேலம் சங்ககிரியைச் சேர்ந்த வசந்தா (62), சித்தாயி(65),பழனியம்மாள்(55), விஜயா(65) மற்றும் வேனில் பயணித்த ஓசூரைச் சேர்ந்த ராமன்(43), சண்முகராஜா(25), பரத்(23) உள்ளிட்ட 14-க்கும் மேற்பட்டோர் பலத்த காயத்துடன் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்தினால் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x