Published : 14 Feb 2025 12:34 AM
Last Updated : 14 Feb 2025 12:34 AM
நெல் கொள்முதல் நிலையங்களில் அறுவடை தொடங்கிய 25 நாட்களிலேயே 25 லட்சம் நெல் மூட்டைகள் தேக்கமடைந்துள்ளதால், திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நெல் கொள்முதல் பணியாளர்கள் மற்றும் விவசாயிகளும் கவலை அடைந்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டத்தில் 3.5 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி செய்யப்பட்டு, தற்போது அறுவடைப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக மாவட்டம் முழுவதும் 532 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. ஆனால், கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் தேங்கிக் கிடப்பதாலும், எடை இழப்பை தங்கள் மேல் சுமத்துவதாலும் கொள்முதல் நிலையப் பணியாளர்கள் விரக்தியடைந்துள்ளனர். அறுவடை தொடங்கிய 25 நாட்களிலேயே 25 லட்சம் நெல் மூட்டைகள் தேக்கமடைந்துள்ளதாகவும், இவற்றை சேமிக்க திறந்தவெளி சேமிப்பு கிடங்குகள் அமைக்க வேண்டும் எனவும் பணியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் கூறும்போது, "திருவாரூர் மாவட்டத்தில் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளை அனுப்பிவைப்பதற்காக மன்னார்குடி, திருவாரூர், நீடாமங்கலம் திருத்துறைப்பூண்டி, பேரளம் ரயில் நிலையங்களில் சரக்கு ரயில்கள் வரவழைக்கப்பட்டாலும், தினமும் 10 ஆயிரம் டன் நெல் மட்டுமே அனுப்பி வைக்க இயலும். ஆனால், மாவட்டம் முழுவதும் 15 ஆயிரம் டன் நெல் கொள்முதலாகும் நிலையில், அவற்றை அனுப்பிவைப்பதில் தாமதம் ஏற்படுகிறது.
இதனால் ஏற்படும் எடை இழப்புக்கு கொள்முதல் நிலையப் பணியாளர்கள்தான் பொறுப்பு என அதிகாரிகள் கூறுகின்றனர். போராட்ட அறிவிப்பு காரணமாக மூவாநல்லூரில் மட்டும் திறந்தவெளி சேமிப்புக் கிடங்கு செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதேபோல, அனைத்து இடங்களிலும் திறந்தவெளி சேமிப்பு கிடங்குகளை திறக்க வேண்டும்" என்றனர்.
இதுகுறித்து விவசாயி தேவங்குடி நெடுஞ்செழியன் கூறும்போது, "நெல் மூட்டைகள் தேக்கமடைவதால் ஏற்படும் எடை இழப்பை ஈடுசெய்ய கொள்முதல் நிலையப் பணியாளர்களை நிர்பந்திக்கும்போது, அவர்கள் மூட்டைக்கு ரூ. 40 மற்றும் கூடுதலாக 2 கிலோ நெல் தருமாறு நெருக்கடி தருகின்றனர். எனவே, உடனடியாக திறந்தவெளி சேமிப்பு கிடங்குகளை திறக்க வேண்டும். மேலும், நெல் மூட்டைகளை அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
இது தொடர்பாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் புகாரியிடம் கேட்டபோது, ‘‘மாவட்டத்தில் தினும் 15 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்படும் சூழலில், ரயில் மூலம் நெல் மூட்டைகள் முழுவதையும் அனுப்ப வாய்ப்பு கிடைப்பதில்லை. இருப்பினும், விரைவாக நெல் மூட்டைகளை அனுப்பிவைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். திறந்தவெளி சேமிப்புக் கிடங்குகள் திறப்பது குறித்து அரசின் கவனத்து கொண்டு செல்லப்படும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment