Published : 13 Feb 2025 04:32 PM
Last Updated : 13 Feb 2025 04:32 PM
சென்னை: தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று (பிப்.13) மநீம தலைவர் கமல்ஹாசனை, அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனை இன்று அவருடைய இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தோம். அன்போடு வரவேற்று அரசியல், கலை என பல்வேறு துறைகள் சார்ந்து கருத்துக்களை பரிமாறிக்கொண்டவருக்கு என் அன்பும், நன்றியும்” என்று பதிவிட்டுள்ளார். இந்த சந்திப்பின்போது, கமல்ஹாசனுக்கு உதயநிதி பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு மநீம தலைவர் கமல்ஹாசனை இந்துசமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு திடீரென சந்தித்துப் பேசியிருந்தார். முன்னதாக, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரான நடிகர் கமல்ஹாசன் கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டு குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
அதன்பிறகு கடந்த மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்தார். திமுக கூட்டணி சார்பில் மக்களவை தேர்தலில் கமல்ஹாசன் போட்டியிடுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் போட்டியிடவில்லை. அவர் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் தீவிர பிரச்சாரம் செய்தார். கூட்டணியின்போது அவருக்கு மாநிலங்களவை எம்பி பதவி வழங்கப்படும் என உடன்பாடு செய்யப்பட்டது. மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றிபெற்று 39 இடங்களையும் கைப்பற்றியது.
தேர்தலுக்குப் பிறகு கமல்ஹாசன் தீவிர அரசியலில் ஆர்வம் காட்டவில்லை. ஏதேனும் பொது பிரச்சினைகள் என்றால் அதுதொடர்பாக கருத்து தெரிவிப்பதோடு சரி. பெரிய அளவில் கட்சி பணிகளில் அவர் ஈடுபடுவது இல்லை என்பது கவனிக்கத்தக்கது. விரைவில் திமுக எம்எல்ஏக்கள் உதவியுடன் கமல்ஹாசன் மாநிலங்களவை எம்பியாக தேர்வுசெய்யப்பட இருப்பதாக இரு கட்சிகளின் வட்டாரங்களும் கூறுகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment