Published : 13 Feb 2025 03:51 AM
Last Updated : 13 Feb 2025 03:51 AM

அரசு திட்டங்களுக்கு புள்ளி விவரங்கள் தொகுப்பு: தமிழக அரசு அலுவலர்களுக்கு பெங்களூரு ஐஐஎம்-ல் பயிற்சி

அரசு திட்டங்களுக்கு தேவைப்படும் புள்ளி விவரங்களை தொகுப்புது குறித்து பெங்களூரு ஐஐஎம் நிறுவனத்தில் தமிழக அரசு அலுவலர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.

இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது: “அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை முறையாக மக்களை சென்றடைகிறதா என்பதை ஆய்வு செய்யவும், தகுதியுடைய பயனாளிகள் எவரேனும் விடுபட்டு விட்டனரா என்பதை கண்டறியவும், கடைக்கோடி மக்களுக்கும் அரசின் திட்டங்கள் சென்றடையவும், அதன் வாயிலாக அரசுத் திட்டங்களை மேலும் செம்மைப்படுத்தவும் அரசு அலுவலர்களுக்கு தரவுப் பகுப்பாய்வு (Data Analysis) குறித்து சிறப்புப் பயிற்சி அளிக்கப்படும்" என்று சட்டப்பேரவையில் 2024-2025-ம் ஆண்டு மனிதவள மேலாண்மைத்துறை மானியக்கோரிக்கையின்போது அத்துறையின் அமைச்சர் அறிவிப்பை வெளியிட்டார்.

அந்த அறிவிப்பை விரைந்து நடைமுறைப்படுத்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். அதன் பேரில் தமிழக அரசின் வரலாற்றிலேயே முதல்முறையாக பல்வேறு அரசுத் துறைகளின் புள்ளி விவரங்களை அறிவியல் முறையில் தொகுத்தல் குறித்து பெங்களூருவில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனம் (ஐஐஎம்) பிப்ரவரி 12 முதல் 14-ம் தேதி வரை 3 நாட்கள் நடத்தும் சிறப்பு பயிற்சிக்கு 25 அரசு அலுவலர்கள் அனுப்பப்பட்டுள்ளனர்.

அவர்கள் முதல்வரின் முகவரித் துறை, தமிழ்நாடு மின் ஆளுமை, கூட்டுறவுத்துறை, பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை, கருவூலம் மற்றும் கணக்குத் துறை, வணிகவரித் துறை, சென்னை நாகராட்சி, பேரூராட்சிகள் இயக்ககம், பதிவுத்துறை, மின் பகிர்மானக் கழகம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, காவல் துறை, மனிதவள மேலாண்மைத் துறை, தமிழ்நாடு குற்ற ஆவணக் காப்பகம், வேளாண் துறை, ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள் ஆவர். இந்த சிறப்பு பயிற்சிக்காக தமிழக அரசு ரூ.35 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x