Published : 12 Feb 2025 05:58 AM
Last Updated : 12 Feb 2025 05:58 AM
சென்னை: சமையல் எரிவாயு கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் மாமனார், மாமியார், மருமகன் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
நுங்கம்பாக்கம், வைகுண்டபுரம் 2-வது தெருவைச் சேர்ந்தவர் வீரக்குமார்(62). இவரது மனைவி லட்சுமி(56). இவர் கடந்த 4-ம் தேதி மாலை 6.30 மணியளவில், வீட்டில் சமையல் செய்துகொண்டே பூஜையில் ஈடுபட்டிருந்தார். அப்போது, சமையல் எரிவாயு தீர்ந்து, அடுப்பு அணைந்துள்ளது.
கற்பூரம் கொளுத்தியபோது... உடனடியாக புதிய சிலிண்டரை மாற்றிவிட்டு லட்சுமி மீண்டும் பூஜையை தொடர்ந்துள்ளார். அப்போது எரிவாயு கசிவு ஏற்பட்டுள்ளது. லட்சுமி பூஜையில் கற்பூரத்தை கொளுத்தியபோது, ஏற்கெனவே கசிந்திருந்த சமையல் எரிவாயுவால் தீ குபீரென பற்றி எரிந்தது. அவரது சேலையில் பிடித்த தீ உடல் முழுவதும் பரவியதால் அலறினார்.
அப்போது வீட்டிலிருந்த கணவர் வீரக்குமார், அவரைக் காப்பாற்ற முயன்றதில், அவரும் தீயில் சிக்கினார். இதற்கிடையே, மற்றொரு அறையில் இருந்து வெளியில் வந்த மருமகன் குணசேகர்(45) மாமனார் - மாமியாரை காப்பாற்ற முயற்சித்தபோது, அவரும் தீயில் சிக்கி கொண்டார். 3 பேரும் தீயில் கருகி உயிருக்கு போராடினர். அலறல் சப்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து தீயை அணைத்தனர். பின்னர் 3 பேரையும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
80 சதவீத தீக்காயம்: இச்சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து வந்த நுங்கம்பாக்கம் போலீஸார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதற்கிடையே, 80 சதவீத தீக்காயத்துடன் 3 பேரும் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி குணசேகர் கடந்த 9-ம் தேதி உயிரிழந்தார். வீரக்குமார் நேற்று முன்தினம் காலையிலும், அவரது மனைவி லட்சுமி நேற்று மாலையிலும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment