Published : 12 Feb 2025 06:10 AM
Last Updated : 12 Feb 2025 06:10 AM

போரூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாததை கண்டித்து நடிகர் கஞ்சா கருப்பு போராட்டம்

போரூரில் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாததைக் கண்டித்து நோயாளிகளுடன் நடிகர் கஞ்சா கருப்பு போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னை போரூர் அடுத்த சின்ன போரூர் பகுதியில் சென்னை மாநகராட்சி நகர்ப்புற சமுதாய நல மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. நேற்று காலை 7 மணியளவில் புறநோயாளிகள் சீட்டு வாங்கிய ஏராளமான நோயாளிகள் மருத்துவரைப் பார்க்க காத்திருந்தனர். மருத்துவர்கள் யாரும் வராததால் ஆத்திரமடைந்த நோயாளிகள் செவிலியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

கால் வலிக்கு சிகிச்சைக்கு வந்த நடிகர் கஞ்சா கருப்பும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால், மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது. எப்போது வந்தாலும் இங்கு மருத்துவர்கள் சரியாக இருப்பது இல்லை என்று நோயாளிகள் தெரிவித்தனர்.

நடிகர் கஞ்சா கருப்பு கூறுகையில், ``தனியார் மருத்துவமனையில் 24 மணி நேரமும் மருத்துவர்கள் இருக்கும் நிலையில், அரசு மருத்துவமனையில் ஏன் மருத்துவர்கள் இருப்பதில்லை. அரசு மருத்துவமனைக்கு வரக்கூடிய நபர்களின் உயிர் என்றால் அலட்சியமா? தலைக்காயம், நாய்க்கடி மற்றும் முதியவர்கள் சிகிச்சைக்கு வந்துள்ளனர்.

ஆனால், மருத்துவர்கள் இல்லாதது வேதனையாக உள்ளது. மக்களுக்காக தானே மருத்துவமனை. இதற்காகத்தானே மக்கள் ஓட்டு போடுகிறார்கள். முதல்வரும் சுகாதாரத் துறை அமைச்சரும் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x