Published : 11 Feb 2025 07:48 PM
Last Updated : 11 Feb 2025 07:48 PM
சென்னை: வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையத்துக்கு அருகே திடீரென தண்டவாள பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டதால் அரக்கோணத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி வந்த மின்சார ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இதனால், அரைமணி நேரம் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. பயணிகள் கடும் சிரமத்துக்குள்ளாகினர்.
சென்னை புறநகர் மின்சார ரயில் சேவையில் முக்கிய மார்க்கமாக சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் மார்க்கம் உள்ளது. இத்தடத்தில் அவ்வப்போது மின்சார ரயில் சேவை தாமதத்தால், பயணிகள் சிரமத்தை சந்திக்கின்றனர். திங்கள்கிழமை காலை, வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற முதியவர், ரயிலில் அடிப்பட்டு இறந்தார். அவரது உடல் இன்ஜினில் சிக்கியது. இதனால், அரக்கோணம் - சென்னை சென்ட்ரல் நோக்கி வந்த மின்சார ரயில்களின் சேவைகள் அரைமணி நேரம் பாதிக்கப்பட்டது.
இதேபோல, அரக்கோணத்தில் இருந்து சென்ட்ரல் நோக்கி வந்த மின்சார ரயில்களின் சேவை செவ்வாய்க்கிவமையும் பாதிக்கப்பட்டது. வியாசர்பாடி ஜீவா - கடற்கரை ரயில் நிலையம் தடத்தில் பராமரிப்பு பணி செவ்வாய்க்கிழமை நண்பகலில் திடீரென நடைபெற்றது. இதன் காரணமாக, வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையத்தில் ஒரு மின்சார ரயில் பகல் 12.15 மணிக்கு நிறுத்தப்பட்டது. இதுபோல, சில மின்சார ரயில்களும் நிறுத்தப்பட்டன.
30 நிமிடம் கடந்தும் ரயில் மீண்டும் இயக்கப்படாததால், பயணிகள் சிலர் ரயிலில் இருந்து இறங்கி, மாற்று வாகனம் மூலமாக செல்ல வேண்டிய இடத்துக்கு புறப்பட்டனர். இதற்கிடையில், மின்சார ரயில் சேவை மீண்டும் நண்பகல் 12.55 மணிக்கு இயங்கத் தொடங்கியது. அரைமணி நேரத்துக்கு மேலாக ரயில் சேவை பாதிக்கப்பட்டதால், பயணிகள் கடும் சிரமத்தை சந்தித்தனர்.
இது குறித்து, பயணிகள் சிலர் கூறியதாவது: மின்சார ரயில்கள் நிறுத்தப்பட்டதற்கான காரணம் குறித்து ரயில்வே நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை. செவ்வாய்க்கிழமை நண்பகல் 12.15 மணி முதல் 12.55 மணி வரை ரயில் நிறுத்தப்பட்டது. இதனால், பயணிகள் ரயில் நிலையத்தில் இறங்கி நெடுநேரம் காத்திருந்தனர்.
சுமார் 40 நிமிடத்துக்கு பிறகு, ரயில்கள் மீண்டும் இயங்கத் தொடங்கியது. அடிக்கடி இதுபோல ரயில் சேவை தாமதத்தால், கடும் மன வேதனை ஏற்படுகிறது. இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment