Published : 11 Jul 2018 11:49 AM
Last Updated : 11 Jul 2018 11:49 AM
மக்களவை தேர்தலில் தமிழகத்தில் பாஜகவின் வியூகம் வகுப்பதற்காக சென்னை வந்த அக்கட்சித் தலைவர் அமித் ஷா கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது, மக்களவை தேர்தலில் தமிழகத்தை பொறுத்தவரை பாஜக கூட்டணியுடன் தான் சந்திக்கும் என அறிவித்துள்ளார். இது, தமிழகத்தில் பாஜகவுடன் இணைய வாய்ப்புள்ள கட்சி எது என்ற விவாதத்தை கிளப்பியுள்ளது.
தமிழகத்தில் ஊழல் பெருகி விட்டது என்று கூறி அதிர்வலைகளை ஏற்படுத்திய அமித் ஷா, வலிமையான கூட்டணி அமைக்கப்போவதாக கூறியுள்ளதால் அதுபற்றி அரசியல் தளத்தில் விவாதங்கள் நடந்து வருகின்றன. தமிழகத்தில் போதிய பலம் இல்லாத நிலையில் பாஜக கூட்டணியை தேடுவது ஆச்சரியமான விஷயம் இல்லை. இருப்பினும் அந்த கட்சியுடன் கூட்டணியில் இணைய வாய்ப்புள்ள வலிமையான கட்சி எது என்பது தான் தற்போது எழுந்துள்ள கேள்வி.
பாஜகவின் நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்ட அக்கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான இல. கணேசன் இதுகுறித்து கூறுகையில் ‘‘தமிழகத்தில் தற்போதுள்ள சூழலில் கூட்டணி என்பது தவிர்க்க முடியாதது என்பதைத் தான், எங்கள் தலைவர் அமித் ஷாவின் பேச்சு உணர்த்துகிறது.
ஊழல் இல்லாத ஆட்சியை கொடுத்து வரும் பாஜக அதற்கு ஏற்றவகையில் கூட்டணி அமைக்கும். ஊழல் பற்றி அவர் பேசியதால் அதிமுகவை மனதில் வைத்து பேசியதாக சிலர் கூறுவது தவறு. அவர் எந்த ஒரு தனிப்பட்ட கட்சியை பற்றியும் கருத்து தெரிவிக்கவில்லை. தமிழகத்தில் புதிய அரசியல் கலாச்சாரம் உருவாக வேண்டும் என்ற அடிப்படையில் தான் பேசினார். எனினும் கூட்டணி பற்றி பிறகு தான் முடிவு செய்வோம்’’ எனக் கூறினார்.
இதுகுறித்து காந்தி கிராம் இன்ஸ்டிடியூட்டின், அரசியல் அறிவியல் மற்றும் வளர்ச்சி நிர்வாகத்துறை பேராசிரியர் பழனித்துரை கூறுகையில் ‘‘தமிழகத்தில் காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் மட்டுமே பாஜகவுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பில்லாத கட்சிகள் என கூறலாம். கொள்கை ரீதியாக அவை பாஜகவை கடுமையாக எதிர்க்கும் கட்சிகள் என்பதால் இதற்கு வாய்ப்பில்லை.
மற்றபடி, அதிமுக, திமுக, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என எந்த கட்சியும் பாஜகவுடன் கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளது. முன்பு இவை, பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளன. காங்கிரஸை விடவும் பல மாநிலங்களில் வலிமையான கூட்டணியை கொண்டுள்ள பாஜகவுடன் கூட்டணி அமைக்க இந்த கட்சிகள் விரும்பக்கூடும்’’ எனக் கூறினார்.
ஆனால் இதனை திமுக திட்டவட்டமாக மறுத்துள்ளது. இதுகுறித்து திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறுகையில் ‘‘பாஜகவுடன் திமுக கூட்டணி அமைக்க வாய்ப்பில்லை. அதிமுகவுடன், பாஜக கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளது. இதனை நியாயப்படுத்தும் வகையிலேயே பாஜகவின் செயல்பாடு உள்ளது’’ என்றார்.
இதுகுறித்து அதிமுக செய்தித்தொடர்பாளர் மருது அழகுராஜ் கூறுகையில் ‘‘பாஜக மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் தமிழகத்திற்கு வருகை தரும்போதெல்லாம், இரு திராவிட கட்சிகளுக்கு எதிராக பேசுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். ஊழல் பற்றி அமித் ஷா பேசியிருப்பது விரக்தியின் வெளிப்பாடு தான்.
தமிழகத்தில் ஆதரவு தளம் இல்லாத சூழலில் இதுபோன்று பேசியிருக்கிறார். இதை விடுத்து அவர் ஆக்கபூர்வமாக பேச வேண்டும். கூட்டணி பற்றி அதிமுக செயல்குழு, பொதுக்குழு தான் முடிவெடுக்கும்’’ எனக் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT