Published : 11 Feb 2025 04:08 PM
Last Updated : 11 Feb 2025 04:08 PM

அரசு பள்ளியில் மயங்கி விழுந்து உயிரிழந்த 7-ம் வகுப்பு மாணவியின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் - முதல்வர் உத்தரவு

முதல்வர் ஸ்டாலின் | உயிரிழந்த மாணவி கவிபாலா

சென்னை: பட்டுக்கோட்டை பள்ளத்தூர் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி 7-ம் வகுப்பு மாணவி கவிபாலா உயிரிழப்புக்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மாணவியின் குடும்பத்துக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.5 லட்சம் வழங்கிட உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்திக் குறிப்பு: தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், சொக்கநாதபுரம் கிராமம், கொம்புக்காரன் குட்டை பகுதியைச் சேர்ந்த கண்ணன் - பரிமளா தம்பதியரின் மகள் கவிபாலா (12) என்பவர் பட்டுக்கோட்டை வட்டம், ஆண்டிக்காடு சரகம், பள்ளத்தூர் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பில் பயின்றுவந்த நிலையில் நேற்று (பிப்.10) பள்ளியில் மயங்கி விழுந்த நிலையில் உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்தார் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

இச்சம்பவத்தில் உயிரிழந்த மாணவி கவிபாலாவின் உயிரிழப்பு அவரது குடும்பத்தினருக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். மேலும், இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த மாணவி கவிபாலாவின் பெற்றோருக்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்த மாணவியின் பெற்றோருக்கு ஐந்து லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

நடந்தது என்ன? - தஞ்சாவூர் மாவட்டம் சொக்கநாதபுரம் பகுதியைச் சேர்ந்த தம்பதி கண்ணன் - பரிமளா ஆகியோரின் மகள் கவிபாலா (12). பள்ளத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். இப்பள்ளி மாணவ- மாணவிகளுக்கு அழகியநாயகிபுரம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவக் குழுவினரால், குடற்புழு நீக்க மாத்திரைகள் திங்கள்கிழமை வழங்கப் பட்டன. இந்த மாத்திரையை கவிபாலாவும் நண்பகல் 12 மணி யளவில் உட்கொண்டுள்ளார்.

2 மணியளவில் பள்ளியில் விளையாடிக் கொண்டிருந்தபோது, திடீரென கவிபாலா மயங்கி விழுந்தார். அவரது மூக்கு மற்றும் வாய் வழியாக ரத்தம் சிந்திருந்தது. இதையடுத்து, ஆசிரியர்கள் துரைசிங்கம், வீரமணி ஆகியோர்கவிபாலாவை, அழகியநாயகி புரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு காரில் அழைத்துச் சென்றனர். பின்னர், அங்கிருந்து பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக் குக் கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்து கவிபாலா ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

இதுகுறித்து சேதுபாவாசத்திரம் போலீஸார் விசாரித்து வருகின்றனர். இதனிடையே, மாணவியின் உயிரிழப்பு விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, பள்ளி முன்புபொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து பட்டுக்கோட்டை வட்டாட்சியர் சுகுமாரன் உள்ளிட்ட அதிகாரிகள் சென்று பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிடச் செய்தனர்.

இதுபற்றி பொது சுகாதாரத் துறை தஞ்சாவூர் மாவட்ட துணை இயக்குநர் கலைவாணி கூறும்போது, ‘‘தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளத்தூர் பள்ளியில் 389 பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்பட்ட நிலையில், மாத்திரை உட்கொண்ட சில மணிநேரங்களில் ஒரு மாணவி மயங்கிவிழுந்துள்ளார். அவரது உயிரிழப்புக்கான காரணம் குறித்து பிரேதப்பரிசோதனைக்கு பின்னர்தான் தெரியவரும்’’ என்று கூறியிருந்தார். தஞ்சை மாவட்ட முதன்மைகல்வி அலுவலர்அண்ணாதுரை கூறும்போது, ‘‘மாணவி உயிரிழந்தது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம்’’ என்று தெரிவித்திருந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x