Last Updated : 16 Jul, 2018 08:25 AM

 

Published : 16 Jul 2018 08:25 AM
Last Updated : 16 Jul 2018 08:25 AM

மீன்களில் வேதிப்பொருள் இருப்பதை கண்டறியலாம்; மத்திய மீன்வள கல்வி மையம் சார்பில் புதிய பட்டை, திரவம் உருவாக்கம்- விரைவில் விற்பனைக்கு வருகிறது

மீன்களில் வேதிப்பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளதா என்பதை பொதுமக்களே எளிதில் கண்டு பிடிக்கும் வகையில், காகிதப் பட்டை வடிவிலான புதிய பரி சோதனை சாதனத்தை மத்திய மீன்வள தொழில்நுட்பக் கல்வி மையம் உருவாக்கியுள்ளது. இது விரைவில் விற்பனைக்கு வர உள்ளது.

மீன்களை அதிக நாட்கள் பதப்படுத்தி வைத்து விற்பனை செய்வதற்காக, கொடிய வேதிப் பொருளான பார்மாலினை அதில் கலப்பதாக அண்மைக்காலமாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இதைத் தொடர்ந்து சென்னையில் உள்ள சிந்தாதிரிப்பேட்டை, காசிமேடு, வேளச்சேரி, நீலாங்கரை ஆகிய மீன் விற்பனை சந்தைகளில் விற்கப்படும் மீ்ன்கள் அண்மையில் பார்மாலின் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.

30 மீன் மாதிரிகள் மீது நடத்தப்பட்ட ஆய்வில், 11 மாதிரிகளில் மனிதர்களுக்குப் புற்றுநோயை உண்டாக்கக் கூடிய கொடிய வேதிப்பொருளான பார்மாலின் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளத் துறை பல்கலைக்கழகத்தில் உள்ள ஆய்வாளர்களால் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

பார்மாலின் எனப்படுவது பதப்படுத்தி மற்றும் கிருமி நாசினியாகும். இது நிறமற்ற ஒரு வேதிப்பொருளாகும். இந்த வேதிப் பொருளைத் தண்ணீரில் கலந்து, நாம் மாமிசத்தையோ அல்லது மீன்கள், உடலின் ஒருபகுதி என எதை வைத்தாலும் அது அழுகாமல், கெட்டுப் போகாமல் நாட்கணக்கில் இருக்கும். பார்மாலின் கலக்கப்பட்ட உணவுப் பொருட்களை மனிதர்கள் உட்கொள்ளும்போது, கண்கள், தொண்டை, தோல், வயிறு பகுதிகளில் எரிச்சல், அரிப்பு ஏற்படும். நாளடை யில் கிட்னி, கல்லீரல் பாதிப்புகள் ஏற்பட்டு இறுதியாக ரத்தப் புற்றுநோயை உண்டாக்கும்.

இந்நிலையில், மீன்களில் வேதிப்பொருள் கலக்கப்பட்டுள்ளதா என்பதைப் பொதுமக்களே எளிதில் கண்டறியும் வகையில், கேரள மாநிலம் கொச்சியில் உள்ள மத்திய மீன்வள தொழில்நுட்ப கல்வி மையம், காகித வடிவிலான பட்டையைத் தயாரித்துள்ளது. இதுகுறித்து, அந்த மையத்தின் மூத்த அதிகாரி ஒருவர் ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியதாவது:

மீன்களில் கலக்கப்பட்ட வேதிப் பொருட்களைக் கண்டு பிடிக்க வேண்டுமெனில், அவற்றை எடுத்துக்கொண்டு போய் பரிசோதனைக் கூடங்களில் கொடுக்க வேண்டும். அவர்கள் அதைச் சோதித்துப் பார்த்து முடிவை தெரிவிக்க காலதாமதம் ஏற்படும். இந்நிலையில், எங்கள் ஆராய்ச்சி மையத்தில் தற்போது புதிதாக காகித வடிவிலான பட்டையை உருவாக்கியுள்ளோம். இதைப் பயன்படுத்தி மீன்களின் மீது வேதிப் பொருள் உள்ளதா என்பதை ஓரிரு நிமிடங்களில் கண்டறியலாம்.

இந்தப் பட்டையை மீனின் உடல் பாகத்தின் மீது வைத்து தேய்த்து அந்தப் பட்டையின் மீது, இதற்காக நாங்கள் தயாரித்துள்ள ஒரு திரவத்தை ஒருசில சொட்டு கள் விட வேண்டும். அவ்வாறு விடும்போது ஓரிரு நிமிடத்தில் அந்தப் பட்டை பச்சை அல்லது மஞ்சள் நிறத்துக்கு மாறினால், அந்த மீனில் வேதிப்பொருட்கள் இல்லை என்று அர்த்தம். அதே சமயம் பட்டை நீல நிறத்தில் மாறினால் அந்த மீனில் வேதிப்பொருள் கலந்துள்ளது என அர்த்தம்.

இச்சோதனையை நுகர்வோர்கள், பொதுமக்கள் என யார் வேண்டுமானாலும் எளிதாகவும், விரைவாகவும், நம்பகத்தன்மையுடனும் பரிசோதித்து அறிந்து கொள்ளலாம். இந்தப் பட்டை மற்றும் திரவத்தைத் தயாரிப் பதற்கான உரிமை மும்பையில் உள்ள ஒரு தனியார் மருந்து நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்நிறுவனம் விரைவில் இதை விற்பனைக்கு கொண்டு வர உள்ளது. ஒவ்வொரு பெட்டியிலும் 25 பட்டைகள் மற்றும் 2 பாட்டில்கள் திரவம் இருக்கும். இதன் விலை ரூ.200-க்கும் குறைவாக இருக் கும்.

இவ்வாறு அதிகாரி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x