Published : 11 Feb 2025 09:06 AM
Last Updated : 11 Feb 2025 09:06 AM
மதுரை: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு அலங்காநல்லுார் கீழக்கரை கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தில் தொடர்ந்து 2 நாட்கள் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டி இன்று (பிப்.11) காலை தொடங்கியது. போட்டியை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி காலை 7:00 மணியளவில் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
முன்னதாக, மாடுபிடி வீரர்கள் உறுதி மொழி ஏற்றுக் கொண்டனர். மதுரை கிழக்கு தொகுதிக்குட்பட்ட 900 காளைகள், 500 வீரர்கள் பங்கேற்கின்றனர்.
களத்தில் நின்று விளையாடும் காளையின் உரிமையாளருக்கும், காளைகளை தழுவும் வீரர்களுக்கும் தங்கக்காசு, சைக்கிள், மிக்ஸி உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட உள்ளன. மதுரை கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட, மேற்கு, வடக்கு, திருப்பாலை, ஆனையூர் பகுதி காளைகள் களம் காண்கின்றன.
இப்போட்டிகளில் பங்கேற்கும் காளைகளை கால்நடை மருத்துவர்கள் பரிசோதித்து அனுப்புகின்றனர். மாடுபிடி வீரர்களை சுகாதாரத்துறை மருத்துவர்கள் பரிசோதித்து தகுதிச் சான்று வழங்கி வருகின்றனர்.
அலங்காநல்லூர் கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கம் மைதானம் ஜல்லிக்கட்டு பார்வையிட வரும் பார்வையாளர்கள் வசதிக்காக பேருந்து நிலையத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலும், ஜல்லிக்கட்டை காண மைதானத்துக்கு வரும் பார்வையாளர்கள் அனைவருக்கும் அரங்கில் அனுமதி இலவசம்.
போட்டியைக் காண மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதியைச் சேர்ந்த மக்கள் குவிந்துள்ளனர். மதுரை மாவட்ட எஸ்.பி அரவிந்த் தலைமையில் சுமார் 1000க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...