Published : 11 Feb 2025 05:50 AM
Last Updated : 11 Feb 2025 05:50 AM
சென்னை: ஸ்ரீனிவாஸ் இளைஞர்கள் சங்கம் சார்பில் ‘குழந்தைகள் திருவிழா 2025’ சென்னையில் நடைபெற்றது. இதையொட்டி நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
ஸ்ரீனிவாஸ் இளைஞர்கள் சங்கம் (சைமா - SYMA) சார்பில் ‘குழந்தைகள் திருவிழா 2025’ சென்னையில் 2 நாட்களாக நடைபெற்றது. இதையொட்டி நடத்தப்பட்ட சதுரங்கம், ஓவியம், குழு பாடல், கட்டுரை உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசளிப்பு விழா சென்னை திருவல்லிக்கேணி என்.கே.டி. தேசிய கல்வியியல் கல்லூரியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், ராணுவ காவல்படையின் லெப்டினன்ட் கர்னல் யு.சச்சின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
அவர் பேசும்போது, ‘‘நாம் ஜனநாயக நாட்டில் வசித்து வருகிறோம். இந்தியர்கள் அனைவருக்குமே பிரச்சினைகளை தீர்க்கும் ஆற்றல் உள்ளது. அந்த வகையில் இங்குள்ள அனைவரும் மற்றவர்களின் பிரச்சினைகளை தீர்க்க முடிந்தவரை உதவ வேண்டும். ஒவ்வொருவரும் சமூக சேவையை வீட்டில் இருந்து தொடங்க வேண்டும். வெளியில் இருந்து யாராவது வந்து செய்வார்கள் என காத்திருக்க கூடாது.
ஸ்ரீனிவாஸ் இளைஞர்கள் சங்கம் சமூக சேவையை திறம்பட செய்து வருகிறது. இதுபோன்ற குழந்தைகளுக்கான விளையாட்டுகள் மூலம் அவர்களுக்கு மன நலம், ஆளுமைத் திறன், தலைமைப் பண்பு, நேர்மை, குழு மனப்பான்மை உள்ளிட்ட பலன்கள் கிடைக்கும். ஒரு விளையாட்டில் ஈடுபடும்போதே ஒருவரது குணங்கள், திறமைகள் மேம்படுவதை காணலாம். எனவே, இதுபோன்ற விளையாட்டுக்களில் குழந்தைகள் பங்கேற்க பெற்றோர் உறுதுணையாக இருக்க வேண்டும்’’ என்று கேட்டுக் கொண்டார்.
‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் தலைமை செயல் அதிகாரி சங்கர் வி.சுப்பிரமணியம், ‘மாணவர்களின் நலனுக்காக ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் மேற்கொண்டு வரும் பல்வேறு முன்னெடுப்புகளை பட்டியலிட்டார். ஸ்ரீனிவாஸ் இளைஞர்கள் சங்கத் தலைவர் சஞ்சீவி ரகுநாதன் சங்கத்தின் செயல்பாடுகள் பற்றி பேசினார். முன்னதாக சங்க துணைத் தலைவர் எஸ்.சம்பத்குமார் வரவேற்றார். நிறைவில் செயலாளர் பி.சரண்யா நன்றி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...