Published : 10 Feb 2025 11:28 PM
Last Updated : 10 Feb 2025 11:28 PM
புதுடெல்லி: மத்திய அரசின் பொது பட்ஜெட்டால் வெறும் 2 கோடி பேருக்கு மட்டுமே பலன் கிடைப்பதாகப் புகார் எழுந்துள்ளது. இதை நாடாளுமன்ற மக்களவையில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் எம்.பி. கே.நவாஸ்கனி தெரிவித்தார்.
ராமநாதபுரம் மக்களவை தொகுதியின் எம்பியான கே.நவாஸ்கனி மக்களவையில் பட்ஜெட் மீதானப் பொதுவிவாதத்தில் பேசியதாவது: “மாண்புமிகு நிதியமைச்சர் அவர்கள் வாசித்தது பாஜகவின் தேர்தல் அறிக்கை அல்ல, நாட்டின் நிதிநிலை அறிக்கை. தேர்தல் வரும் மாநிலங்களுக்கு ஒரு முக்கியத்துவமும், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு மாற்று பார்வையும் கொண்டதாக இந்த பட்ஜெட் அமைந்திருக்கிறது. பிஹார் மாநிலத்துக்கு தேர்தல் வர இருப்பதால் பல திட்டங்கள் வாரி வழங்கப்பட்டுள்ளன. எங்கள் தமிழ்நாடு முன்வைத்த நெடுஞ்சாலை திட்டங்கள், ரயில்வே திட்டங்கள், கோவை மதுரை மெட்ரோ ரயில் நிதி, மதுரை எய்ம்ஸ் நிதி என எதைப் பற்றியும் வாய் கூட திறக்காதது உள்ளபடியே எங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி.
நீங்கள் ஆளும் மாநிலங்களுக்கு அள்ளிக் கொடுக்க நீளும் உங்கள் கரங்கள், எங்கள் மாநிலங்களுக்கு மட்டும் கிள்ளி கூட கொடுக்கவில்லை. இது, எந்த வகையில் நியாயம்? உங்கள் அரசியலுக்காக தமிழ்நாட்டை பயன்படுத்தும் நீங்கள், நிதிப்பகிர்வில் மட்டும் ஏன் புறக்கணிக்கிறீர்கள்? அரசியல் செய்வதற்கு மட்டும்தான் தமிழ்நாடு உங்கள் கண்களுக்கு புலப்படுமா? தமிழ் மக்கள் மீதான கருணையும் அக்கறையும் சொல்லில் அல்ல செயலில் காட்டுங்கள்.
இத்தகைய அச்சுறுத்தலுக்கு கண்டு அஞ்சும் மாநிலம் தமிழ்நாடு என்று எண்ணிக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் முன்னோர்களை கேட்டு பாருங்கள். இந்தி திணிப்பு போராட்டத்தின் வீரியத்தை உங்களுக்கு சொல்வார்கள். எங்களை அச்சுறுத்தும் நோக்கத்தில் எவர் வந்தாலும் அவர்களை தமிழ்நாட்டின் வரலாற்றில் இருந்து துடைத்தெறிந்த வரலாறு இருக்கிறது. இந்த நிதிநிலை அறிக்கை பூனையைக் காட்டி யானையை மறைக்கின்ற செயலை செய்கின்றது.
வருமானவரிச் சலுகையை கொடுத்து, மறைமுகமான வரிச் சுமைகளையும் விலைவாசி ஏற்றத்தையும் அடித்தட்டு மக்கள் தலையில் சுமத்துகிறது. இந்த வரிச்சலுகையின் மூலமாக கிட்டத்தட்ட 2 கோடி பேர் மட்டும் தான் பயனடைவார்கள். 140 கோடி மக்கள் தொகை நாட்டில் 138 கோடி மக்கள் பயன்படக்கூடிய வகையில் விலைவாசியை குறைப்பதற்கான எந்த சிறப்பு திட்டங்களும் இல்லை,
வேலைவாய்ப்பு திண்டாட்டம் தலை விரித்து ஆடுகிறது. அதற்கு எந்த மாற்று திட்டங்களும் இல்லை. பெட்ரோல் டீசல் விலை குறைப்பிற்கான எந்த அறிவிப்பும் இல்லை. உர மானியம் எரிபொருள், கேஸ் சிலிண்டர் மானியம் உள்ளிட்ட மானியங்கள் எல்லாம் குறைப்பு, இப்படி அனைத்து தரப்பட்ட அடித்தட்டு மக்களின் தலையில் சுமையை ஏற்றிவிட்டு வருமானவரிச் சலுகை தருகின்றோம் என மக்களை திசை மாற்றுவதெல்லாம் மக்களை ஏமாற்றும் செயல்.
அடித்தட்டு கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்துக்கானது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம். இதை அடித்தட்டு மக்களின் மீது அக்கறை கொண்ட காங்கிரஸ் அரசு கொண்டு வந்தது. பெருநிறுவனங்களின் மீது மட்டும் அக்கறை கொண்ட பாஜக அரசு இன்று அத்திட்டத்தை சிறுகச் சிறுக அழித்துக் கொண்டிருக்கிறது. மத்திய அரசு தன்னுடைய திட்டங்களில் பங்குத் தொகையை தொடர்ந்து குறைத்துக் கொண்டே வருகிறது.
இதனால், மாநில அரசின் நிதி சுமை அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஆனால் பெயர் மட்டும் மத்திய அரசின் திட்டம் என்ற பெயர். பாஜக அரசு தொடர்ந்து நாடு முழுவதும் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தை பெரும் சாதனையாக குறிப்பிடுகிறார்கள். இந்தத் திட்டத்தின் மூலம் வெறும் விளம்பரத்தை மட்டும் பெற முயல்கிறது மத்திய பாஜக அரசு.
ஆனால், அந்தத் திட்டம் எப்படி செயல்படுகிறது என்பது குறித்து எந்த அக்கறையும் இல்லாமல் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த திட்டத்திற்கு கடந்த நிதிநிலை அறிக்கையில் ரூ.54,500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதில், ரூ.32,400 கோடி மட்டுமே செலவிடப்பட்டிருக்கிறது.
சுமார் ரூ.22,100 கோடி செலவிடவே படவில்லை. இதனால் பிரதமரின் வீடு கட்டும் திட்டம் முறையாக நிறைவேற்றப்படவில்லை. இந்தத் திட்டத்திற்காக ஒதுக்கப்படும் பணம் என்பது ஒரு வீடு கட்டுவதற்கு ஒன்றிய அரசு 1,11,100 ரூபாய் மட்டுமே வழங்குகிறது.
ஆனால், மாநில அரசு ரூ.1,72,900 வழங்குகிறது. இப்படி இருக்கும் நிலையில் ஒரு வீடு கட்டுவதற்கு ரூ.2,83,900 மட்டுமே ஒதுக்கப்படுகிறது. இந்த நிதியில் இந்தியாவில் எந்த மாநிலத்திலும் ஒரு வீட்டினை முழுமையாக கட்டி முடிக்க முடியாது.
இன்று இருக்கக்கூடிய கட்டுமான பொருட்கள் உடைய விலை சிமென்ட் விலை, செங்கலினுடைய விலை, இரும்பு கம்பியின் விலை இவையெல்லாம் நம்முடைய நிதி அமைச்சருக்கு தெரியுமா? என கேட்கிறேன். இன்றைக்கு இருக்கக்கூடிய விலைவாசிக்கு ஏற்றார் போல் அந்த நிதியை ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும்.
எங்களுடைய தமிழ்நாடு அரசு, கலைஞரின் கனவு திட்டம் என்ற திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் வீடு கட்டி தருவதற்காக அறிவிக்கப்பட்டுள்ளது. அப்படி முன்மாதிரியாக எங்களுடைய முதலமைச்சர் இருக்கின்றார்.
மூன்று கோடி வீடுகள் என்று வெற்று அறிவிப்பு இல்லாமல், ரூ.2 கோடி என்று குறைத்துக் கூட அந்த திட்டத்திற்கான தொகையை அதிகப்படுத்தி வழங்க வேண்டும். பாஜக அரசு தன்னுடைய பாரபட்சமான பார்வையை நிறுத்திக் கொள்ள் வேண்டும்.
நாட்டின் அனைத்து மாநிலங்களையும் ஒரே பார்வையில் பார்த்திட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். அடுத்த தேர்தலை மட்டுமே முன்வைத்து அரசியல் செய்யாமல் அடுத்த தலைமுறைக்காக ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மத்திய அரசு முன்னெடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” இவ்வாறு நவாஸ்கனி பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment