Published : 09 Feb 2025 05:27 PM
Last Updated : 09 Feb 2025 05:27 PM
சென்னை: செலவு அதிகமாக இருப்பதால், பேசின்பிரிட்ஜ் மின்நிலையத்தில் மின்னுற்பத்திக்கு திரவ இயற்கை எரிவாயுவை பயன்படுத்தும் முடிவை மின்வாரியம் கைவிட்டது.
சென்னை, பேசின்பிரிட்ஜ்ஜில் மின்வாரியத்துக்கு சொந்தமான எரிவாயு மின்நிலையம் உள்ளது. இங்கு தலா 80 மெகாவாட் திறன் உடைய 4 அலகுகளில் மின்னுற்பத்தி செய்யப்படுகிறது. இதற்கு எரிபொருளாக நாப்தா, இயற்கை எரிவாயு, அதிவேக டீசல் என ஏதேனும் ஒன்றை பயன்படுத்தலாம்.
நாப்தா விலை அதிகம் என்பதால் அதற்கு ஏற்ப மின்னுற்பத்தி செலவு அதிகரிக்கிறது. சென்னையில் உற்பத்திக்குத் தேவையான எரிவாயுவும் கிடைப்பதில்லை. இதனால், புயல், தேர்தல் சமயங்களில் மட்டும் டீசலை பயன்படுத்தி மின்னுற்பத்தி செய்யப்படுகிறது.
இந்தியன் ஆயில் நிறுவனம், சென்னை எண்ணூரில் திரவ இயற்கை எரிவாயு (எல்என்ஜி) முனையம் அமைத்துள்ளது. இதற்கு வெளிநாடுகளில் இருந்து கப்பலில் திரவநிலை எரிவாயு எடுத்து வரப்படுகிறது. அங்கிருந்து குழாய் வழித் தடத்தில் பிஎன்ஜி எனப்படும் ‘பைப்டு நேச்சுரல் காஸ்’ என்ற பெயரிலும், வாகனங்களுக்கு சிஎன்ஜி எனும் அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயுவாகவும் விநியோகம் செய்யப்படுகிறது.
எனவே, எண்ணூர் முனையத்தில் இருந்து எரிவாயுவை எடுத்து வந்து பேசின்பிரிட்ஜ் மின்நிலையத்தின் இரு அலகுகளில் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக, எண்ணூர்-பேசின்பிரிட்ஜ் இடையே குழாய் வழித்தடம் அமைப்பது, அதற்கான செலவு, மின்னுற்பத்தி செலவு உள்ளிட்ட ஆய்வுகளில் மின்வாரியம் ஈடுபட்டது. இந்த ஆய்வின் அடிப்படையில், ஒரு யூனிட் மின்னுற்பத்திக்கு ரூ.13 செலவாகும். வெளிநாட்டில் இருந்து எரிவாயு இறக்குமதி செய்யப்படுவதால், சர்வதேச நிலவரத்துக்கு ஏற்ப விலை தொடர்ந்து மாறுபடும்.
அதற்கு ஏற்ப மின்னுற்பத்தி செலவு மேலும் அதிகரிக்கும் என தெரிய வந்தது. தற்போது, மின்சார சந்தையில் ஒரு யூனிட் மின்சாரம் ரூ.5-க்கு குறைவாக கிடைக்கிறது. உச்சநேரங்களில் அதிகபட்சம் ரூ.10-க்கு கிடைக்கிறது. இதனுடன் ஒப்பிடும் போது வெளிநாட்டு எரிவாயுவை பயன்படுத்துவது செலவு அதிகம். எனவே, திரவ இயற்கை எரிவாயுவை பேசின் பிரிட்ஜ் மின்நிலையத்தில் பயன்படுத்தும் முடிவு கைவிடப்பட்டது. அவசர காலத்தில் வழக்கம் போல் டீசல் பயன்படுத்தி மின்னுற்பத்தி செய்யப்படும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment