Last Updated : 11 Jul, 2018 07:31 AM

 

Published : 11 Jul 2018 07:31 AM
Last Updated : 11 Jul 2018 07:31 AM

தமிழ் வழியில் படித்து நீட் தேர்வில் சாதனை: நெல்லை துப்புரவு தொழிலாளி மகனுக்கு அரசு மருத்துவ கல்லூரியில் இடம்

நீட் தேர்வில் வெற்றி பெற்ற திருநெல்வேலி மாநகராட்சி துப்புரவு தொழிலாளியின் மகனுக்கு, இங்குள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. தமிழ்வழியில் படித்திருந்தாலும் 2 ஆண்டுகளாக கடுமையாக போராடி இந்த சாதனையை அவர் படைத்துள்ளார்.

தமிழகத்தில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படிக்காத மாணவ, மாணவியர் நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று அரசு மருத்துவ கல்லூரிகளில் மருத்துவ படிப்புகளில் சேர்வது என்பது பெற்றோர் மத்தியில் பெரிய கனவாகவே மாறியிருக்கிறது. அந்த கனவை நனவாக்க பல மாணவ, மாணவியர் கடுமையாக போராடுகிறார்கள்.

தமிழ்வழியில் படித்தார்

திருநெல்வேலி பழைய பேட்டை சர்தார்புரத்தைச் சேர்ந்தவர் பி.சுதாகர் (19). திருநெல்வேலி மாநகராட்சி துப்புரவு தொழிலாளி பாஸ்கர் - சிவசக்தி தம்பதியரின் 2-வது மகனான இவர், திருநெல்வேலி சாப்டர் மேல்நிலைப்பள்ளியில் தமிழ்வழியில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்தார். கடந்த 2016-ம் ஆண்டில் 12-ம் வகுப்பு முடித்த இவர் 1,046 மதிப்பெண்கள் பெற்றார்.

சவாலாக இருந்தது

பொறியியல் படிப்பில் சேருவதற்கு அவர் திட்டமிட்டிருந்த நிலையில், உடல்நலம் சரியில்லாம போனதால் சேர முடியவில்லை. பின்னர், அரசு மருத்துவ கல்லூரியில் சேர்ந்து படித்து சிறந்த மருத்துவராக வேண்டும் என்ற நோக்கத்துடன் திருநெல்வேலி சந்திப்பிலுள்ள தனியார் நீட் தேர்வு பயிற்சி மையத்தில் முழுநேர மாணவராக சுதாகர் சேர்ந்தார். அவரது பெற்றோர் கடன் வாங்கி கட்டணத்தை செலுத்தினர். தமிழ் வழியில் மாநில பாடத்திட்டத்தில் பயின்றதால், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் நீட் தேர்வுக்கு பயில்வது சுதாகருக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது. கடந்த 2017-ல் நீட் தேர்வில் அவருக்கு 161 மதிப்பெண்கள் மட்டுமே கிடைத்தது. இதனால் அரசு மருத்துவ கல்லூரிகளில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை.

அரசு மருத்துவ கல்லூரியில் சேர வேண்டும் என்ற லட்சியத்துடன் தொடர்ந்து 2-வது ஆண்டாக நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்றார். சமீபத்தில் நடைபெற்ற நீட் தேர்வை எழுதிய அவருக்கு 303 மதிப்பெண்கள் கிடைத்தது. அகில இந்திய அளவில் அவர் பெற்ற ரேங்க் 4,582.இதனால் அரசு மருத்துவ கல்லூரியில் சேர்ந்து பயிலும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. மருத்துவ சேர்க்கைக்கான கவுன்சலிங்கில் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியில் சுதாகருக்கு இடம் கிடைத்துள்ளது.

இதுகுறித்து, ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் மாணவர் சுதாகர் கூறியதாவது: பள்ளியில் தமிழ் வழியில், மாநில பாடத்திட்டத்தில் பயின்றுவிட்டு, நீட் தேர்வுக்கு ஆங்கிலத்தில் படிக்க முற்பட்டபோது மிகுந்த கஷ்டப்பட்டேன். சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் புதிய ஆங்கில வார்த்தைகளை கற்க வேண்டியிருந்தது. இரவு பகலாக படித்து தயார்படுத்தினேன். எனது பெற்றோர் மிகுந்த ஒத்துழைப்பு அளித்தனர்.

நீட் தேர்வை எழுத கோவையில் மையம் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆங்கிலத்தில்தான் தேர்வை எழுதியிருந்தேன். அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்திருப்பது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.

கடந்த 19 ஆண்டுகளாக மாநகராட்சியில் துப்புரவு தொழிலாளியாக பணியாற்றும் பாஸ்கரும், வீட்டு வேலைகள் செய்துவரும் சிவசக்தியும் கூறும்போது, “எங்களைப்போன்ற பின்தங்கிய, சாதாரண குடும்பங்களில் இருந்து மருத்துவப் படிப்பில் சேரும் மாணவர்களுக்கு அரசு உதவிகளை செய்ய வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x