Published : 09 Feb 2025 05:05 AM
Last Updated : 09 Feb 2025 05:05 AM
சேலம் / காரைக்குடி / மதுரை: டெல்லியில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்பதால் பாஜக ஆட்சிக்கு வந்துள்ளது. தமிழகத்திலும் ஆட்சி மாற்றம் வேண்டும் என மக்கள் நினைக்கிறார்கள், என அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கூறினார். இதுகுறித்து சேலம் மாவட்டம் ஓமலூரில் உளகட்சி அலுவலகத்தில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியது:
டெல்லியில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என மக்கள் நினைத்ததால் பாஜக ஆட்சிக்கு வந்துள்ளது. தமிழகத்திலும் ஆட்சி மாற்றம் வேண்டும் என மக்கள் நினைக்கிறார்கள். ஊடகங்கள் உண்மை செய்தி வெளியிட்டால் தமிழகத்தில் அதிமுக ஆட்சிக்கு வந்து விடும். கிருஷ்ணகிரி பாலியல் சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. வேலூரில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு நடந்த பாலியல் தொந்தரவு வேதனையளிக்கிறது. அதேபோல, தமிழக காவல்துறையில் உயர்பதவியில் உள்ள ஏடிஜிபி தன்னுடைய உயிருக்கு ஆபத்து என்று கூறுவது அச்சத்தை ஏற்படுத்துகிறது. சிவகங்கையில் காவல்நிலையத்தில் ஒரு பெண் எஸ்ஐ தாக்கப்படுகிறார். காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை எனும்போது சாதாரண பொதுமக்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது. குற்றச் சம்பவங்களில் ஈடுபவர்கள் எவ்வித அச்சமும் இன்றி குற்றச்செயல்களை செய்கின்றனர். ஒரு பொம்மை முதல்வர், திறமையற்றவர் ஆட்சி செய்வதே இதற்கு சாட்சியாகும்.
இண்டியா கூட்டணிக்கு மக்கள் சம்மட்டி அடி கொடுத்துள்ளனர். அந்த கூட்டணியில் ஒற்றுமை இல்லை. விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை இல்லை. இந்த தேர்தல் முடிவுகள் மூலம் இண்டியா கூட்டணி உள்ளதா என்ற சந்தேகம் ஏற்படுகிறது. ஈரோடு தேர்தலில் யாரும் களத்தில் இல்லாதபோது, திமுக பெற்றது போலி வெற்றியாகும். அதிமுக கட்சி நிர்வாகிகளின் வாக்குகளை திமுக-வினரே போட்டுள்ளனர். கள்ள வாக்குகளின் மூலம் பெரிய வெற்றி பெற்றதாக சொல்கிறார்கள். 2026-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அதே தொகுதியில் என்ன நிலைமை என்பதை அந்த காலகட்டத்தில் நாங்கள் சொல்கிறோம்.
தேர்தலுக்கு 13 மாதங்கள் உள்ளன. அதிமுக தலைமையில் பலமான கூட்டணி அமையும். தேர்தல் அறிவித்த பிறகு தான் கூட்டணி குறித்து சொல்ல முடியும். நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமையுமா என்றால் எங்களைப் பொறுத்தவரை பலமான கூட்டணி அமையும். உங்களை அழைத்து தெரிவிப்போம். இன்னும் 6 மாதம் போனால் கூட்டணி வடிவம் பெறும். கூட்டணி என்பது அனைத்து வாக்குகளும் சிதறாமல் ஒருங்கிணைந்து எதிரியை வீழ்த்த வேண்டும் என்பதற்காக அமைக்கப்படுகிறது. கூட்டணி என்பது வேறு, கொள்கை என்பது வேறு. கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில் அமைக்கப்படுவது. அப்படித்தான் நாங்கள் கூட்டணி அமைப்போம்.
முதல்வர் ஸ்டாலின் 565 வாக்குறுதிகளை கொடுத்துவிட்டு இதுவரை 15 சதவீத வாக்குறுதிகளை மட்டுமே செயல்படுத்தியுள்ளார். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கடன் கட்டுப்படுத்தப்படவில்லை. நிதி மேலாண்மைக்குழு அமைத்து நிபுணர்கள் இடம்பெற்றும் கடன் அதிகரித்து செல்வது ஏன். அதிமுக ஆட்சியை விட திமுக ஆட்சியில் ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் கோடி அதிக வருவாய் கிடைத்தும் புதிய திட்டங்கள் கொண்டு வரப்படவில்லை. மகளிர் உரிமைத் தொகைக்கு ரூ.17 ஆயிரம் கோடிதான் செலவாகிறது. எல்லா செலவும் போக ரூ.18 ஆயிரம் கோடி மீதமிருந்தும் எந்த திட்டமும் இல்லை. பழைய ஓய்வூதியத் திட்டத்தை கொண்டு வருவோம் என சொல்லி அரசு ஊழியர்களின் வாக்குகளைப் பெற்றுவிட்டு அதனை நிறைவேற்றவில்லை.
திருப்பரங்குன்றத்தில் மிகவும் சென்சிட்டிவ் ஆன பிரச்சினை. அங்குள்ள மக்களை அழைத்துப் பேசி, மக்களுக்கு எந்தவித பிரச்சினையும் இல்லாமல், சுமூக ஏற்பாட்டை செய்ய வேண்டும். இது மாநில அரசின் கடமை. அதை திமுக அரசு முறையாக செய்யவில்லை. திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் கொடுத்த அறிக்கையில், அரசு அமைத்த குழுவில் அதிமுக கையெழுத்துப் போடவில்லை என கூறியிருக்கிறார். அது தவறான கருத்து. அப்படி ஒரு குழுவே அமைக்கப்படவில்லை. இதுதொடர்பாக விரைவில் வழக்கு போடுவோம். ஒரு மாவட்ட ஆட்சியர் தவறான தகவல்களை கூறக்கூடாது. எந்த பின்புலம் இருந்தாலும் பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்பது அரசின் கடமை. அதை சரி செய்யவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
வருத்தம் அளிக்கிறது: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் காரைக்குடியில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: டெல்லி தேர்தல் முடிவு வருத்தம் அளிக்கிறது. மக்களவைத் தேர்தலுக்கு பின்பு இண்டியா கூட்டணி இருக்கிறதா, இல்லையா என்ற சந்தேகம் எழும் அளவுக்கு அதன் தலைவர்கள் செயல்பட்டு வருகின்றனர். எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையின்மை காரணமாகவே பாஜக தொடர்ந்து வெற்றி பெறுகிறது. தமிழகத்தில் திமுக தலைமையிலான இண்டியா கூட்டணி ஒற்றுமையாக இருப்பதுபோல, பிற மாநிலங்களில் இல்லை. இந்திய அளவில் இண்டியா கூட்டணி வலுப்பெற கம்யூனிஸ்ட் கட்சி முயற்சி செய்யும்.
தமிழகத்தில் பல தேர்தல்களில் அத்துமீறல், முறைகேடுகள் தொடர்கின்றன. இந்நிலை மாறி, நேர்மையான, ஜனநாயக முறையில் தேர்தல்கள் நடைபெற வேண்டும்.
மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்யும் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசியலில் பிரபலமானவர்கள் பலர் வந்து, சென்றுள்ளனர். அதுபோல நடிகர் விஜய் வந்துள்ளார். அதிமுக, திமுகவை விரும்பாதவர்கள் அவரை விரும்புவர். ஆனால், திமுக, அதிமுகவுக்கு மாற்றாக வருவார் என்று கருதமுடியாது. இவ்வாறு அவர் கூறினார்.
ஒற்றுமை இல்லை: விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: டெல்லி தேர்தல் முடிவு அதிர்ச்சியளிக்கிறது.
டெல்லியில் பாஜக ஆட்சி அமைவது தேசத்துக்கு பின்னடைவாகும். தேர்தல் நியாயமாக நடந்ததா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ், ஆம் ஆத்மி ஒற்றுமையாக தேர்தலை சந்திக்காததால் இத்தோல்வி ஏற்பட்டுள்ளது. இண்டியா கூட்டணி ஒற்றுமையாக, கட்டுக்கோப்பாக இல்லை. கூட்டணி தலைவர்கள் ‘ஈகோ’ பிரச்சினைகளை தள்ளிவைத்துவிட்டு, நாட்டையும் மக்களையும் காப்பாற்ற வேண்டும். தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுக்க தனி உளவுப் பிரிவை உருவாக்கி, தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.
வட மாநிலங்களைப்போல தமிழகத்தில் மதப் பிரச்சனையை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். அடிப்படைப் பிரச்சினைகளுக்கு குரல் கொடுக்காத பாஜக, கோயில், மசூதி பிரச்சினைகளைத் தூண்டி, அரசியல் ஆதாயம் தேடுகிறது. மாவட்ட நிர்வாகத்தின் நிலைப்பாடே திருப்பரங்குன்றத்தில் பதற்றத்துக்கு காரணம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இவ்வாறு அவர் கூறினார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...