Published : 09 Feb 2025 04:37 AM
Last Updated : 09 Feb 2025 04:37 AM
வேலூர்: காட்பாடி அருகே ஓடும் ரயிலில் இருந்து தள்ளி விடப்பட்ட கர்ப்பிணி ரேவதியின் கருவில் 4 மாத சிசு இறந்ததால் பாதுகாப்புடன் அகற்ற மருத்துவர்கள் நடவடிக்கை எடுத்தனர். ரயில்களில் பெண்கள் பெட்டியில் தனி ஒரு பெண் பயணித்தால் காவலர் உடன் செல்ல நடவடிக்கை எடுத்துள்ளதாக ரயில்வே எஸ்பி ஈஸ்வரன் தெரிவித்தார்.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஜெமினி (41). இவரது மனைவி ரேவதி (36). இருவரும் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை செய்து வருகின்றனர். ரேவதி கர்ப்பிணியாக இருப்பதால் மருத்துவ பரிசோதனைக்காக தனது தாயார் வீடான சித்தூர் மாவட்டத்துக்கு செல்வதற்காக கோவையில் இருந்து காட்பாடி வழியாக திருப்பதி வரை செல்லும் இன்டர்சிட்டி விரைவு ரயிலில் பொது வகுப்பு பெட்டியில் வியாழக்கிழமை காலை புறப்பட்டார்.
இந்த ரயில் பகல் 12 மணியளவில் வேலூர் மாவட்டம், காவனூர் - விரிஞ்சிபுரம் இடையே சென்று கொண்டிருந்தது. அப்போது, பெண்கள் பெட்டியில் தனியாக பயணித்த ரேவதியிடம் அதே பெட்டியில் இருந்த ஆண் ஒருவர் பாலியல் ரீதியாக தவறாக நடக்க முயன்றுள்ளார். அவரிடம் இருந்து தப்பிக்க முயன்ற ரேவதியின் கையை முறுக்கி ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளியுள்ளார். இதில், படுகாயம் அடைந்த அவரை இருப்புப்பாதை பராமரிப்பு பணியில் இருந்த கேங்க்மேன் ஒருவர் அருகில் இருந்த வீட்டில் வசித்த பொதுமக்கள் உதவியுடன் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு எலும்பு முறிவுக்கான அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். மேலும், அவரது உடல் நிலையை தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இதுதொடர்பான தகவலின் பேரில் ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து ரேவதிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததுடன் அவரை ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளியதாக வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் அடுத்த பூஞ்சோலை கிராமத்தைச் சேர்ந்த ஹேமராஜ் (30) என்பவரை நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) கைது செய்தனர்.
பாதிக்கப்பட்ட ரேவதிக்கு ரூ.50 ஆயிரம் கருணை தொகை வழங்கப்படும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ரேவதியை சென்னை கோட்ட ரயில்வே முதுநிலை மேலாளர் பரத்குமார், கூடுதல் கோட்ட மேலாளர் பிரதாப் சிங் மற்றும் சந்திரகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் நேற்று (பிப்.08) நேரில் சந்தித்து ரேவதியிடம் நலம் விசாரித்தனர். மேலும், கருணைத்தொகையாக அறிவிக்கப்பட்டிருந்த 50 ஆயிரத்தை வழங்கினர்.
மகளிர் ஆணையம் விசாரணை: முன்னதாக, வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ரேவதியை தமிழ்நாடு மாநில மகளிர் ஆணைய தலைவி ஏ.எஸ்.குமாரி, வேலூர் மாவட்ட ஆட்சியர் வி.ஆர்.சுப்புலட்சுமி, வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் ஆகியோர் நேற்று முன்தினம் இரவு (பிப்.07) நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். பின்னர், மாநில மகளிர் ஆணைய தலைவி ஏ.எஸ்.குமாரி செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘ரேவதியை அனைத்து சிறப்பு மருத்துவர்களும் கவனித்து வருகின்றனர். அரசு என்ன செய்ய வேண்டுமோ கண்டிப்பாக அதை செய்யும். இந்த வழக்கை ரயில்வே காவல்துறையினர் விசாரித்து வருகிறார்கள். அவர்கள் என்ன நடவடிக்கை எடுக்கிறார்கள் என பார்ப்போம். தேவைப்பட்டால் நாங்கள் அழுத்தம் கொடுப்போம். ரேவதிக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது, மேல் சிகிச்சைக்கு அவசியமில்லை அனைத்து வகையான உயிர் சிகிச்சையும் இங்குள்ள மருத்துவர்கள் அளித்து வருகிறார்கள்" என்றார்.
ரேவதியின் கருவில் இருந்த 4 மாத சிசுவை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். அவ்வப்போது, ஸ்கேன் செய்து சிசுவின் நிலையை பரிசோதித்தனர். நேற்று (பிப்.08) பகல் 12 மணியளவில் நடத்தப்பட்ட ஸ்கேன் பரிசோதனையில் சிசுவின் இதயத்துடிப்பு நின்றதை மருத்துவர்கள் உறுதி செய்தனர். இதையடுத்து, அந்த சிசுவை கருவில் இருந்து பாதுகாப்புடன் அகற்ற மருத்துவ குழுவினர் நடவடிக்கை எடுத்தனர்.
கூடுதல் பாதுகாப்பு: காட்பாடி ரயில் நிலையத்தில் ரயில்வே காவல் துறையினர் ஒலிப்பெருக்கி மூலம் பயணிகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ரயில் பயணத்தின்போது ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் 1512 மற்றும் 139 எண்கள் அல்லது 9962500500 அல்லது 9498101957 எண்களில் தொடர்புகொள்ளலாம் என்று தெரிவித்தனர்.
இந்த பிரச்சினை தொடர்பாக சென்னை ரயில்வே எஸ்பி ஈஸ்வரன், இந்து தமிழ் திசை செய்தியாளரிடம் கூறும்போது, ‘‘விரைவு ரயில்களில் பெண்களின் பெட்டி மற்ற பெட்டிகளில் இருந்து தனித்துள்ளது. எனவே, பெண்கள் பெட்டியை ஒவ்வொரு ரயில் நிலையங்களில் கண்காணிக்க உள்ளோம். பெண்கள் தனியாக பயணிக்க நேர்வது தெரியவந்தால் அந்த பெட்டியில் காவலர் ஒருவர் பாதுகாப்புக்காக உடன் செல்வார். பயணிகள் பாதுகாப்பு தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.
ரயில் நிலையங்களில் பழைய குற்றவாளிகளின் புகைப்படங்கள் அடங்கிய எப்.ஆர்.சி எனப்படும் ஃபேஸ் ரிகக்கனைஸ் சாப்ட்வேரை கண்காணிப்பு கேமராக்களுடன் இணைக்க ரயில்வேக்கு பரிந்துரைள்ளோம். இதன்மூலம் பழைய குற்றவாளிகள் ரயில் நிலையங்களுக்கு வரும்போதே கண்டறிந்து குற்றத்தை தடுக்க முடியும். ரயில்களில் ரயில்வே பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதுடன் பெண்கள் பெட்டியை கண்காணிக்கும்படி கூறியுள்ளோம். பெண்கள் பெட்டியில் இருந்து உதவி தேவைப்பட்டால் இன்ஜின் டிரைவர் அல்லது கார்டுக்கு தகவல் தெரிவிக்கும் பட்டன் பொருத்துவது குறித்தும் பரிந்துரை செய்ய உள்ளோம்’’ என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...