Published : 07 Feb 2025 09:03 PM
Last Updated : 07 Feb 2025 09:03 PM
சென்னை: ஓய்வூதிய திட்டம் குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவை வாபஸ் பெற வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலினை தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து ஒன்றிய மாநில தலைவர் த.அமிர்தகுமார் வெளியிட்டுளள அறிக்கை: கடந்த 2021-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலின் போது திமுகவின் தேர்தல் அறிக்கையில் நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன், பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை இம்முறை கட்டாயம் அமல்படுத்துவோம் என கூறியதை ஏற்று முழுமையாக கடந்த காலங்களில் போல இல்லாமல் நிச்சயம் அமல்படுத்துவார்கள் என நம்பினோம்.
பலமுறை அரசுக்கு அரசு அலுவலர் ஒன்றியம் சார்பில் கோரிக்கை வைத்த போது, நிதி நிலைமை சற்று சீரடைந்ததும், நிதி சார்ந்த பல கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று அரசு கூறி வந்தது. மற்ற மாநிலங்களில் பழைய ஒய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படுவதை போல் நமது மாநிலத்திலும் அமல்படுத்துவார்கள் என முழுமையாக எண்ணினோம். ஆனால், எதிர்பார்ப்புக்கு மாறாக பழைய ஒய்வூதிய திட்டம், பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் மற்றும் ஒருங்கிணைநை்த ஓய்வூதிய திட்டம் ஆகியவை குறித்து ஆய்வு செய்ய மூன்று உறுப்பினர்கள் உள்ளடக்கிய ஒரு குழுவை அரசு அமைத்துள்ளது.
இது தமிழகத்தில் பணியாற்றும் ஒட்டுமொத்த அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மத்தியில் பேரிடியாக அமைந்தது. அதுவும் இக்குழுவின் காலம் ஒன்பது மாதம் என்பது மிகுந்த ஏமாற்றத்தை தந்தது. காரணம் குழு அமைப்பதே கோரிக்கையை நிறைவேற்றாமல் காலம் கடத்தும் செயல் என்பதை கடந்த காலங்களில் பலமுறை நாம் கண்ட உண்மையாகும்.
கடந்தாண்டு பிப்.13-ம் தேதி அமைச்சர்கள் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், முதல்வர் கவனத்துக்கு கொண்டு சென்று பழைய ஓய்வூதிய திட்டம் நிறைவேற்றப்படும் என்று தெரிவித்தனர். இதை நம்பிய நிலையில், இந்த அறிவிப்பு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே இந்த குழு அறிவிப்பை வாபஸ் பெற வேண்டும். பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஒய்வூதிய திட்டத்தை அரசு அமல்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...