Published : 07 Feb 2025 06:14 AM
Last Updated : 07 Feb 2025 06:14 AM
சென்னை: சென்னையில் "கிரெடய்" சார்பில் 3 நாட்கள் நடைபெறும் 'பேர்புரோ 2025' வீட்டு வசதிக் கண்காட்சியை வரும் 14-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைக்கிறார்.
இந்திய ரியல் எஸ்டேட் சங்கங்களின் கூட்டமைப்பு (கிரெடய்) சார்பில் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மைய புதிய கட்டிடத்தில் 'பேர்புரோ 2025' எனும் வீட்டு வசதிக் கண்காட்சி வரும் 14-ம் தேதி தொடங்கி 16-ம் தேதி வரை 3 நாட்கள் நடைபெறுகிறது. இக்கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
இக்கண்காட்சியில், 500-க்கும் மேற்பட்ட திட்டங்களுடன் 80-க்கும் மேற்பட்ட முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் பங்கேற்கின்றன. மேலும், 5 முக்கிய வங்கிகளும் பங்கேற்கின்றன. அனைத்துத் தரப்பு மக்களும் வீடு வாங்குவதற்குத் தேவையான திட்டங்கள், சலுகைகளை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
இதுகுறித்து சென்னையில் கிரெடய் தென்மண்டல துணைத் தலைவர் எஸ்.ஸ்ரீதரன், சென்னை மண்டலத் தலைவர் முகமது அலி, சென்னை மண்டல முன்னாள் தலைவரும் 'பேர்புரோ 2025' ஆலோசகருமான எஸ்.சிவகுருநாதன், வீட்டுவசதிக் கண்காட்சி ஒருங்கிணைப்பாளர் பி.கிருதிவாஸ் ஆகியோர் கூறியதாவது:
வீடு வாங்குபவர்கள் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் அங்கீகரிக்கப்பட்ட திட்டங்களையும் சிறந்த சலுகைகளையும் ஒரே இடத்தில் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
அனைத்துத் தரப்பு மக்களுக்கான அடுக்குமாடி குடியிருப்புகள், வில்லாக்கள், ஆடம்பர வீடுகள், வீட்டு மனைகள் குறித்து ஒரேஇடத்தில் செயல் விளக்கங்களைக் காண முடியும். சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாத ஸ்மார்ட் வீடுகளையும் இக்கண்காட்சியில் காணலாம். வீடு வாங்க விரும்புவோருக்கு இந்த கண்காட்சியிலேயே வீடு மற்றும் கடனுக்கான ஒப்பந்தங்களை செய்து கொள்ளும் வசதியும் உள்ளது.
ரியல் எஸ்டேட் துறை தற்போது நன்றாக உள்ளது. கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு விற்பனையாகாத வீடுகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. அதேநேரத்தில் வீடுகளின் தேவை அதிகரிப்பு, கட்டுமானப் பொருட்களுக்கான விலை உயர்வு காரணமாக வீடுகளின் விலை 6.5 சதவீதம் அதிகரித்துள்ளது. சென்னையில் உட்கட்டமைப்புகள் மேம்பாடு, மெட்ரோ விரிவாக்கத் திட்டங்கள் சொத்து மதிப்பை உயர்த்தி வருகின்றன. அதனால் வீடுகளில் முதலீடு செய்வதற்கு தற்போது உகந்த காலமாகும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment