Published : 06 Feb 2025 03:47 PM
Last Updated : 06 Feb 2025 03:47 PM
திருச்சி: வயலூர் முருகன் கோயில் கும்பாபிஷேகத்துக்காக புதிதாக கட்டப்பட்டு வந்த ஆர்ச் திடீரென இடிந்து விழுந்தது. நல்வாய்ப்பாக, தொழிலாளர்கள் சிறு சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.
திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதி குமார வயலூரில் சுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது. ஏழாம் படை வீடு என்று சிறப்பித்து கூறப்படும் இக்கோயிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வரும் பிப்ரவரி 19-ம் தேதி இக்கோயிலின் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. இதற்காக வயலூர்- அதவத்தூர் சாலை நுழைவாயிலில், புதிதாக, சுமார் 25 அடி உயரம், 70 அடி அகலத்துக்கு சிமெண்ட்டால் அலங்கார ஆர்ச் ஒன்று அமைக்கப்பட்டு வருகிறது.
தனியார் ஒப்பந்தக்காரர் மூலம் மேற்கொள்ளப்படும் இப்பணியில், 10-க்கும் மேற்பட்ட கட்டுமான தொழிலாளர்கள் இன்று (பிப்.6) ஈடுபட்டு வந்தனர். பகல், 1 மணியளவில் சிமெண்ட் ஆர்ச் அடியோடு பெயர்ந்து, சாரத்துடன் சரிந்து விழுந்தது. நல்வாய்ப்பாக, தொழிலாளர்கள் சிறு சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, அவசரகதியில், தரமில்லாத பணிகளை மேற்கொண்டதால்தான் அலங்கார ஆர்ச் இடிந்து விழுந்ததாக அப்பகுதி மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து, சோமரசம்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவுச் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...